சிகப்பி
சிகப்பி


அந்த டீக்கடையின் வாசலில், கிடையாய் கிடந்தாள் சிகப்பி. வருவோர் போவோரை எல்லாம் முகம் பார்ப்பதும், பின்னர், அமைதியாக இருப்பதுவுமாக இருந்தாள். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர காத்திருப்பிற்குப் பின், "அப்பவே வந்துட்டியா சிகப்பி ? " என்றபடி கடைக்காரர் வெளியில் வந்து எட்டிப்பார்க்க, மெல்ல தலைசாய்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் சிகப்பி.
கழுவ எடுத்து வந்த பாய்லரில் மிச்சமிருந்த பாலை, சிகப்பிக்கு ஊற்றிக் கொடுக்க, அவளோ, அதைக் கண்டும் காணாதவள் போல அமர்ந்திருக்க, அவளது பார்வை வேறெங்கோ அலைபாய்ந்தது. "ஓ ! மறந்தே போயிட்டேன் பாரு ! மன்னிச்சிக்கோ ! " என்றவாறு, எழுந்த கடைக்காரர், பாட்டிலில் இருந்த ஊட்டி வறுக்கியில் மூன்றினை எடுத்துக
் கொடுக்க, அவற்றை இலாவகமாக, பத்திரமாக பிடித்துக்கொண்டு, விறுவிறுவென மெல்லோட்டத்துடன் கிளம்பினாள் சிகப்பி.
அந்த தெருவினை தாண்டியதும், பாழடைந்து கிடந்த ஓட்டு வீட்டின் திண்ணையில், சுருண்டு கிடந்த குழந்தைகட்கு, வாங்கி வந்த வறுக்கியைக் கொடுக்க, ஆவலுடன் அவர்களும் சாப்பிட்டு முடித்துவிட்டு, விளையாட்டை ஆரம்பிக்க, அங்கிருந்து கிளம்பி, சிகப்பி மீண்டும் டீக்கடைக்கு வந்தாள். அங்கு அவளுக்காக, பால் பத்திரமாக கடைக்காரரால் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
சிரட்டையில் இருந்த பாலைக் குடித்துவிட்டு, கடைக்காரர் தந்த வறுக்கியையும் சாப்பிட்டவளாய், நன்றியை தன் வாலினை ஆட்டி உணர்த்தியவளாக, அவ்விடம் விட்டு அகன்றாள் சிகப்பி.