அம்மம்மம்மா ஆனந்தமே!
அம்மம்மம்மா ஆனந்தமே!


மகிழ்ச்சி மிகுதியால் நெக்குருகும். ஆனந்தம் பொங்கி வழியும். இதற்கு காரணமானவர்களை வாழ்த்தத் தோன்றும். ஆனால் வார்த்தைகள் வராது. மனதிலிருந்து கிளர்ந்து எழும் சந்தோஷத்திற்கு ஒரு வடிகால் கிடைக்காது. அந்த சமயத்தில், கண்ணின் வழியாக திரண்டு வெளியேறும் உணர்வே ஆனந்தக்கண்ணீர்!
ஒரு முறை தொலைக்காட்சியில் ஒரு இசை நிகழ்ச்சி! பாடகர் முகேஷ் அவர்கள் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா..’ என்று தொடங்கும் கர்ணன் படப்பாடலை பாட ஆரம்பித்தார். அந்த வினாடி தொடங்கி அவர் முழுப் பாடலையும் பாடி முடிக்கும் வரை நான் என்னில் இல்லை. ‘என்னை அறிந்தாய்..’ ‘புண்ணியம் இதுவென்று’ ‘பரித்ராநாயதூனா..’ என்று ராக தாள மாற்றத்துடன் தொடர்ந்து ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று பாடலை முடிக்கும் வரை, நான் இந்த உலகத்திலேயே இல்லை. பாடல் முடிந்தும் பல நிமிடங்கள் வரை என் கண்களில் நீர் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது. ஆனந்தம் என்பது என்ன என்பதையும் ஆனந்தக்கண்ணீரையும் பரிபூரணமாக உணர்ந்த தருணம் அது.
justify">
இதே ஆனந்தக்கண்ணீரை அல்கா ‘சிங்கார வேலனே’ பாடும் போதும் ஸ்பூர்த்தியின் ‘சிவசங்கரி’யிலும், ப்ரியங்காவின் ‘சின்னச் சின்ன வண்ணக் குயிலிலும்’ அனுபவித்திருக்கிறேன்.
பேரப்பிள்ளைகளை எப்போதாவது கன்னத்தைக் கிள்ளி முத்தமிடுவேன். அல்லது உச்சந்தலையில் முத்தமிடுவேன். பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதே ஆனந்தத்தின் எல்லை. அவர்களுடன் இருக்கும்போது நம்மையே நாம் அவர்களுக்கு அர்ப்பணித்து விடுவோம். என் மூன்று பேரன்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களாகவே எனக்கு திடீர் முத்தம் கொடுத்த அந்த தருணங்களை நினைத்தாலே எனக்கு ஆனந்த கண்ணீர் பெருகும். (இப்போது வெளிநாட்டில் இருக்கிறார்கள்)
வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் எத்தனையோ வந்திருக்கிறது. ஆனால், ஆனந்தக்கண்ணீர் வடிக்கும் தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முறைதான் வரும். அவ்வாறு வந்தவைதான் நான் மேலே குறிப்பிட்ட தடுணங்கள்.