அழுக்குக் கண்ணாடி...!
அழுக்குக் கண்ணாடி...!


தஞ்சாவூர் ஜங்ஷனில் இரண்டாம் எண் ப்ளாட்ஃபார்மில் மைசூர் எக்ஸ்பிரஸிற்காகக் காத்திருந்தார் ராஜேந்திரன். ரிசர்வேஷன் சார்ட்டில் பெயர்பார்த்து, தன் கோச் நம்பர் அறிந்து, வண்டி வந்து நின்று, சிலர் இறங்கியவுடன் ஏறித் தன் இருக்கையில் அமர்ந்தார். லோயர் பரத்! வசதியாய்ப் போயிற்று! காலுக்கு அடியில் லக்கேஜ்களைத் தள்ளிவிட்டு, சாவகாசமாகச் சாய்ந்து கொண்டார். செல்போன் எடுத்து,
"வண்டியில ஏறிட்டேன் மரகதம். நீ போய்த் தூங்கு!"
என்றவுடன், அந்த மரகதத்தின்,
"சரிங்க, பத்திரமாப் போயிட்டு வாங்க!" என்ற பதில் கேட்டு, அனிச்சையாகச் சரியெனத் தலையாட்டிவிட்டு, கொண்டு வந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரிக்கலாமா என யோசிக்கும் போது, எதிர் இருக்கையில் இருபத்து மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு அழகான பெண்வந்தமர்ந்தாள். இன்னும் திருமணமாகவில்லை போலும். கழுத்தில் தாலியைக் காணோம்! ஜன்னல் வழியே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரிடம்,
"சரிப்பா போய்ட்டு வர்றேன். நீங்க உடம்பைப் பாத்துக்கோங்க!"
"பத்திரமாப் போய்ட்டு வா கண்ணு. வீட்டுக்குப் போய்ச்சேர்ந்ததும் எனக்கு ஃபோன் பண்ணு!"
அவர்கள் சம்பாஷணை முடியவும், இரயில் வண்டி நகரத் துவங்கியது.
வண்டி வேகமெடுத்து, பாபநாசம் வந்ததும், ராஜேந்திரன் இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து சாப்பிடத் துவங்கினார்.
அந்தப் பெண்ணும் தான் கொண்டு வந்திருந்த டிஃபன் பாக்ஸைத் திறந்து, ராஜேந்திரனைப் பார்த்து,
"அங்கிள், சப்பாத்தி எடுத்துக்கங்க அங்கிள்"
"வேண்டாம்மா! எனக்கு IBS தொந்தரவு இருக்கும்மா. நீ இட்லி சாப்பிடறயாம்மா?"
"தேங்க்ஸ் அங்கிள். பட் நோ தேங்க்ஸ். உங்களுக்குப் போதாது. நீங்க சாப்பிடுங்க!"
"எங்கம்மா? பெங்களூரா?"
"எஸ் அங்கிள். தாத்தா வீட்டுக்குப் போறேன்!"
வண்டி அய்யம் பேட்டை தாண்டியதும், ராஜேந்திரனின் கண்கள் செருகியது. ஏர் பில்லோவை எடுத்துக் காற்றூதி, தலையை வைத்துப் படுத்துக் கொண்டார்.
அந்தப்பெண், தன் செல்ஃபோனில் ஒயர் மாட்டி, காதில் ஸ்பீக்கர் பொருத்திப் பாட்டுக் கேட்க ஆரம்பித்துவிட்டாள்.
ஒரு ஒருமணி நேரம் ஓடியிருக்கும். ராஜேந்திரனுக்கு திடீரென விழ
ிப்பு வந்தது. எதிர் இருக்கையைப் பார்த்தார். அந்தப் பெண்ணுடன் ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் அமர்ந்திருந்தான். இருவரும் மெதுவான குரலில் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தார்கள். அந்தப்பெண் அடிக்கடி 'களுக்' கென்று சிரித்தாள். அவன் ஏதாவது ஜோக் சொல்லியிருக்க வேண்டும்.
ராஜேந்திரனுக்கு அதன்பிறகு தூக்கம் வரவில்லை. என்ன உலகம் இது! திருமணமாவதற்கு முன்பே இப்படியெல்லாம் ஒரு பெண் செய்வதா? அவருக்கும் அந்தப்பெண் வயதில் மகள் இருக்கிறாள். வீட்டிற்குத் தெரியாமல் இரயில் வண்டியில் இவர்கள் காதலா? இல்லை ஒருவேளை எங்காவது ஓடிப்போகத் திட்டம் போட்டு இந்தப் பயணமா?
ராஜேந்திரன் தூக்கம் வராமல் விழித்திருப்தைப் பார்த்து அந்தப்பெண்,
"என்ன அங்கிள், தூக்கம் வரலையா? தண்ணீர் வேண்டுமா?"
என்று வாட்டர் பாட்டிலை நீட்டினாள்.
ராஜேந்திரனுக்கு வெறுப்பு. என்ன பெண் இவள்? அருகில் ஒருவனுடன் குலாவி விட்டு இப்படி நடிக்கிறாளே! அந்தத் தண்ணீர் பாட்டிலை வாங்காமல் அவளை வெறுப்புடன் பார்த்தார். இவரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட அப்பெண், வாட்டர் பாட்டிலை மூடி அருகிலிருந்த அந்த வாலிபனிடம் கொடுத்து விட்டு, இவரை நேருக்கு நேர் பார்த்தாள்.
"அங்கிள், உங்களுக்குப் பெண் இருக்கிறாளா?"
ராஜேந்திரன் அப்பெண்ணின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்,"இருக்கிறாள்! ஆனால், உன்னைப் போல இல்லை!" என்று முணுமுணுத்தார்.
"தைரியமாகச் சொல்லுங்கள் அங்கிள்! என்னைப்போல இல்லை என்றால் என்ன அர்த்தம்?"
"இப்படி நடு இரவில் திருமணத்திற்கு முன் ஒரு ஆடவனுடன் கும்மாளமடிக்க மாட்டாள்!" ராஜேந்திரன் உள்ளத்தில் இருந்த எரிச்சலால் தைரியம் பெற்றார்.
"அங்கிள், இவன் யார் தெிரயுமா?"
"உன்னுடைய காதலன் தானே! இதிலென்ன சந்தேகம்?"
"இல்லை அங்கிள்! இவன் என் காதலனின் நண்பன்!"
"அப்ப உனக்கு வீட்டிற்குத் தெரியாமல் ஒரு காதலன் இருக்கிறான் என்று நீயே ஒப்புக் கொள்கிறாய்!"
"அங்கிள், இவன் என் காதலனின் நண்பன் மட்டுமல்ல. என் உடன்பிறந்த அண்ணனும் கூட!"
ராஜேந்திரன் திகைத்தார். தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி அதிலிருந்த அழுக்கைத் துடைத்து மீண்டும் அணிந்து கொண்டார்.