உலகம் உனக்கு...!
உலகம் உனக்கு...!


உலகம் உனக்குள்ளே...!
கார்குழலில் கவிபாடும்
கவின்மகளோ மேகம்!
நேராகத் தூவும்மழை
நீர்தானோ வரிகள்?
சேர்ந்துவரும் காற்றுதான்
சில்லென்று இசைகொடுக்க
ஊர்ந்திடும்நல் லோடைநீர்
உளம்மயக்கப் பாடிடுமோ?
வானம்தரும் வரம்தானே
வரப்புயர நீர்உயர்த்தும்!
தானமாக மண்மகளும்
தரமான நெல்மணியை
ஊனளித்து ஊட்டிவிடும்
உண்மையானஅன்னமவள்!
தேன்சுவையில் பழங்களையும்
திகட்டும்சுவை தேனையும்
வானுயர மகிழ்ச்யையும்
வழங்குமிந்த உலகம்தான்!
ஏனப்பா ஏங்குகிறாய்?
எதிலும்நிறை மனதைவை!
கானமுடன் வாழ்வுனக்கு
கவலையற்றுக் கவினுறுமே!
எங்கும்நல் மகிழ்ச்சிகொள்
எதிலும்நேர் இன்பம்கொள்!
தங்கியுள்ள வீடுதனைத்
திறனுடனே அழகுசெய்!
மங்காத புகழ்சேர
மயங்காமல் உழைப்புசெய்!
விதியினை மடியச்செய்!
வீதிகளை அழகுசெய்!
மதியினை நேர்செய்யும்
மங்காத செயலைச்செய்!