தாமிரபரணி..
தாமிரபரணி..
பொதிகையின் சிரசினில் பிறந்து,
அழகுற தவழ்ந்து, பொங்கி எழுந்து,
சோலையிடை விரைந்து, சீறி பாய்ந்து,
தென்றல் தழுவி, குளிர்ந்து, தாவிக்குதித்து,
திருக்குற்றாலத்தில் அருவியாய் விழுந்து,
நெல்லையம்பதியை அமைதியாய் கடந்து,
வெண்மணல் மடியில் விளையாடி, படர்ந்தோடி,
நவதிருப்பதிகளின் நடுவே பாய்ந்தோடி,
தெய்வீகப் பெருமையோடு அசைந்தாடி,
இராமனின் பாதம் பதிந்த பெருமை மிகுந்த
சீர்மிகு சிற்றூர் குரங்கணியில் அழகுற வளைந்து,
முத்துமாலை அன்னையின் ஆலயம் தழுவி,
செல்லும் வழியெங்கும் எவ்வொரு பேதமுமின்றி ,
பல்லுயிர்களின் தாகம் தணித்து, பசி போக்கி,
ஆடிமகிழ்ந்து, வங்கக்கடலின் அலைகளோடு
கூடிப்பிணைந்து சங்கமிக்கும் தாமிரபரணிக்கு
பொருநை ஆறென்று மற்றொரு பெயருமுண்டு..
தென்தமிழகத்தையே செழிப்பாக்கி உயிர்காக்கும்.
ஈடிணையில்லாத வற்றாத அன்னை பொருநையின்
பெருமை
பேச எமதன்னை தமிழ் மொழியால்
மட்டுமே சத்தியமாய் சாத்தியமாகும்..
வரலாற்றில் எழுதப்படாமல் விடுபட்டுப்போன
பல்லாயிரமாண்டுகளுக்கும் முற்பட்ட முற்போக்கு
பண்டைத்தமிழர் நாகரிகச் சுவடுகள் புதையலாய்
நிறைந்து கிடக்கும் ஆதிச்சநல்லூரும், சிவகளையும்,
பாண்டியமன்னனின் கொற்கைத்துறைமுகமும்,
இருமருங்கும் அழகுசெய் அணிகலனாய் அணிந்த
எமதன்னை தாமிரபரணியின் தண்ணீரை
இரண்டாம் தாய்ப்பாலாய் அருந்தி வளர்ந்து
இன்றும் பெருமையோடு உலகெங்கும் வாழுகின்ற
மேன்மையான பெரும்பான்மை இந்துக்களும்,
தமிழ் பேசும் இஸ்லாமிய தமிழர்களும்,
எங்கும் கலந்துள்ள தமிழின கிறுத்துவர்களும்,
கலந்து உறவாடி ஒருதாய் பிள்ளைகளாய் வாழ்ந்து
செல்லுமிடமெல்லாம் நெல்லைத்தமிழில் மண்ணின்
பெருமை பேசுதல் பொருநையின் பெருமையே..
இரா.பெரியசாமி..