"மகள்"
"மகள்"
மனிதம் இன்றளவும் மறைந்தும்
மறித்தும் போகாமலிருக்க
"மகள்களே" காரணம்...!
என் உதிரம் உயிர்த்துளி ஆனதால்
உருவானவள்...
தாயின் வாசமும் பாசமும் கண்டிறாதவளை
கண்ணிமை போலக் காத்து வளர்த்தேன்
வளர்ந்தாள்..!
பேதை:-
பேயாக உழைக்கத் தொடங்கினேன்
என் மகளின் பெயருக்குப் பின்னால்
பட்டம் இடம் பெற வேண்டி,
கலைத்துப்போனேன் "பேதை"யவள்
முகம் என் கவலை தீர்த்தது..!
பெதும்பை:-
பேதையவள் "பெதும்பை" ஆனால்
பெண்ணானவள் என்
கண்ணின் மணி..!
மங்கை:-
மழலை மறந்து "மங்கை" ஆனால்
மதிமுகத்தால் என்
மகள் அவளே..!
அதுவாகி, இதுவாகி "ருதுவும்" ஆகினால்
பூப்பெய்தினால், புதிய மங்கை அவள்
புனிதமான "பெண்" ஆனால்..!
மடந்தை:-
மங்கையவள் "மடந்தை" ஆனால்
மடைதிறந்தேன் மடந்தை யவள்
கனவுகள் சிறகு விரிக்க..!
அரிவை:-
"அரிவை" அவள் அறிவை விரிவு
செய்ய அனுப்பி வைத்தேன் அயல்நாட்டிற்கு
மனமுவந்
தாள் மலர்விழியாள் என்
மகள் அவளே..!
தெரிவை:-
அறிவு விரிவானதால் "அரிவை"யவள்
"தெரிவை" ஆனால், பட்டமும் பெற்றாள்..
பதற்றமும் தந்தாள்..!
விடலைப்பருவ விபரீதங்கள் என் மகளையும்
விட்டுவிட வில்லை..,
"தெரிவை"யவள் தெளிவானவளாய்த் துணையினைத்
தேடிக்கொண்டாள், காதல் வயப்பட்டால்..!
மனம் வெதும்பியது,
என் கண்களில் நீர் ததும்பியது..
வரம் வாங்கிப் பெற்ற மகளுக்கு அமைந்தது
நல்ல வரனாக இருக்க வேண்டினேன், என்
மகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவனாக..!
பேரிளம்:-
பேதை முதல் "பேரிளம்" வரை
கண்ணிமை போல் காத்து வளர்த்த
என் மகள் பெண்மையின்
அடையாளமாம் தாய்மையும் அடைந்தாள்
"கருவுமுற்றாள்"..!
வயோதிகத்தின் வஞ்சனையால் நான்
வயர்க்கட்டிலில் கிடத்தப்பட்ட போது
என் மகளை இனி யார் பார்த்துக்கொள்வது
என்று என் மனம் ஏங்கியது..!
கருவுற்ற என் மகளுக்கு "மகள்"
பிறந்திருக்கிறாள் என்றறிந்து
மனநிறைவோடு கண்ணயற்ந்தேன்
மீண்டும் எழாதவனாய்..!
எஞ்சிய பக்கங்கள் என் மகளுக்காக..!