நடிகன்...!
நடிகன்...!
நடிகன்...!
எண்ண வித்துக்களை
மனதில் தூவி
என் வாழ்வின் கதையை
அமைத்ததிச் சமூகம்!
'நான்' உண்மையில் நானா?
அல்லதிச் சமூகம் புகுத்திய
சிந்தனைத் தொகுப்புதானா?
சமூக நாடகத்தில்
பன்முக வேடம் தரித்து
நடிக்கும் வேலையெனக்கு!
இரக்கத்தால் ஏமாளி!
ஏதும் இல்லையெனில் கோமாளி!
தள்ளிச்சென்றால் கோழை!
வறியநிலையில் ஏழை!
எதிர்த்துநிற்பின் நான் எதிரி!
எடுபடா வாதத்தால்
நான் உதிரி!
சரி என்றால் தலையாட்டி!
இருக்கிப் பிடித்தால்
ஆள் கெட்டி!
வாழும் 'நான்' சமூக 'நான்' என்றால்
எனது உண்மை 'நான்' எங்கே?
வாழும் 'நான்' ஒரு நடிகன்!
எனது 'நான்' ஆல் அழியும் இடுக்கண்!
வாழும் 'நான்' ஆல்
வஞ்சிக்கப்பட்ட எனது 'நான்'
ஆழப் புதைந்திருப்பதை
அறியாமலே
வாழும் 'நான்' ஐ
எனது 'நான்' ஆக
நாளும் நினைத்திருந்தேன்!
எனது 'நான்' ஐ
நான் உணரும் போது
வாழும் 'நான்'
மறைந்திருக்கும்!
