மான் மேய்ப்பவன்
மான் மேய்ப்பவன்
நான் மான் மேய்ப்பவன். நன்கு மேய்ப்பவன் நான் என்று தான் நினைக்கிறேன்.
அதையும் மான் தான் சொல்லவேண்டும்.
அடர்ந்த காடு இல்லை தான். நான் மேய்க்கும் மான் தன்னை சுற்றி வரும்
புலியையும், சிங்கத்தையும் பார்த்து பயத்தில் மிரள்கிறது.
நான்கு திசையிலும் பாதைகளும் உண்டு, விலங்கு கூட்டம் போட்டிருக்கும்
கண்ணுக்கு தெரியாத வேலியும் உண்டு.
ஓடிட வேண்டும் என்றால் வேலி வரை ஓடிக்கொள்ளலாம்.
என்னுடைய மான் உடை உடுத்தும், தலை வாரிக்கொள்ளும். அழகாக பேசும்.
அதற்கு அறிவு உண்டு. திறமை உண்டு. அன்பு உண்டு.
சுற்றி வரும் ஒநாய்க்கும், புலிக்கும், சிங்கத்துக்கும் தேவையானது இவை
எதுவும் இல்லை. என்னுடைய மானின் சதை மட்டும் தான்.
நான் இல்லாமல் என்னுடைய மானால் தனியாக உலாவ செல்லமுடிவதில்லை.
என் மானை அவை பல நேரங்களில் நெருங்கி பார்க்கின்றன, தோலோடு தோலாக உரசுகின்றன.
தடவி பார்க்கின்றன. துணை இல்லாத நேரம் கடித்தும் விடுகின்றன.
மான் தனியாக வந்ததே குற்றம் என்றும் ஊளையிடுகின்றன.
எங்களுக்கு ஏதோ ஒரு நாள் இரையாக போகும் மானுக்கு எதற்கு படிப்பும்,
பதவியும், வேலையும் என்று அவைகள் கொக்கரிக்கின்றன.
என்னுடைய மான் வாகனம் ஓட்டும். ஆமாம், நீங்கள் சொல்வது போல வேகமாக தான் ஓட்டும்.
நான்கு பக்கமும் நரியும், புலியும், சிங்கமும் துரத்தும் போது செல்லும் பாதையை
ரசித்துக்கொண்டே மெதுவாக பவனி போகமுடியாதல்லவா?
ஒவ்வொரு மானும் பிறக்கும்போதே பலியாகும் நாளை எதிர்கொண்டே பிறக்கின்றது.
என்னுடைய மானும் அதற்கு விதிவிலக்கில்லை.
பல மான்கள் சிங்கமும், புலியும், ஓநாயும் தன்னை
அண்டும்முன்னே தன்னைத்தானே மாய்த்துக்கொள்கின்றன.
மான் மட்டும் பலியாவதில்லை. மானை மேய்ப்பவனும் பல நேரங்களில் பலியாகிறான்.
எந்த மேய்ப்பனும் மான் மேய்க்க விரும்புவதில்லை. சிங்கத்தையோ, புலியையோ
மேய்க்க தான் விரும்புகின்றான். நானும் கூட சில சமயங்களில்.
என்னுடைய மானின் கள்ளமில்லாத மருண்ட பார்வையும், அது என்மேல் கொண்டிருக்கும்
வற்றாத நீரூற்று போன்ற பேரன்பும், சிங்கத்தையும், புலியையும் விரட்டி விட்டு மேய்த்துதான்
பார்ப்போமே என்ற வீம்பை தருகின்றது.
நான் மானை பெற்றவன். மானை மேய்ப்பவன்.
நன்கு மேய்ப்பவன் நான் என்று தான் நினைக்கிறேன்.
அதையும் மான் தான் சொல்லவேண்டும்.