நீ இயற்றிடு!
நீ இயற்றிடு!
விதைத்த வித்துக்களை விளைவிக்கும் மண்ணாய்....
விரும்பி அழைத்த போது ஓடி வந்து இன்பம் தரும் பெண்ணாய்....
பிள்ளைகளை பேணி வளர்க்கும் உத்தமியாய்!
உறவுகளை போற்றிப் பாதுகாக்கும் பத்தினியாய்...
குடும்ப வேலைகளை கடமையோடு ஆற்றிடும் பெண்ணே,
ஏடுகள் மட்டுமே தாங்கி நிற்கிறது உன் சுதந்திரத்தை!
வரலாறுகள் மட்டுமே காத்து நிற்கிறது உன் வீரத்தை!
மேடைகள் மட்டுமே பார்த்து நிற்கிறது உன் மீதான கருணையை!!
கைகளில் ஏடுகளைத் தாங்கினாலும்...
வீடுகளில் பாரங்களைத் தாங்கி நிற்பது உன் தோள்களே!
நிததம் நித்தம் சத்தமின்றி அக்னி குண்டத்தில் இறங்குவது உன் கால்களே!
வார்த்தை அம்புகள் உன் மனதை துளைக்க புரையோடியது உன் மனப்புண்களே!
மனதில் தோன்றும் ஆசைகளை மனக்குழியில் புதைக்கிறாய்!
வாயில் வரும் வார்த்தைகளை தொண்டைக் குழியில் பதுக்குகிறாய்!
சற்றே சிந்தி!
ஓடியாடி உழைத்தாலும்
உடல் வேதனையில் துடித்தாலும்
காலமெல்லாம் கண்ணீர் கடலில் குளித்தாலும்...
உனைத் தேற்ற யாருமுண்டோ?
நீ ஓர் அடிமை
நீ ஒரு கூட்டுப்புழு!
நீ ஒரு வேலைக்காரி!
வேதனைத் தீ சுட்டதில்
பெருக்கெடுக்கும் கண்ணீர் வெள்ளம்!
மனக்கவலையில்
கரைந்து போகும் உன் தேகம்!
கரங்கள் விலங்கிட்டு...
கால்கள் கட்டுண்டு.....
வாய்க்கு பூட்டிட்டு...
ஆட்டுவிக்கும் நூல் பாவை நீ!
ஆயிரம் பாரதி தோன்றினாலும்
உன் அடிமைத்தளைகள் உடைந்திடாது!
உன் வேட்கைத் தணியாது!
விடுதலை கிட்டாது!
எழுதியவன் இன்னொருவன்!
உனக்கான விடுதலை கீதத்தை நீயே இயற்றிடு!
உன் விவேகம் கொண்டு வேட்கையைத் தணித்திடு!
