இந்திய மக்கள் ஒற்றுமை
இந்திய மக்கள் ஒற்றுமை
இறைவன் கொடுத்த
இயற்கை வளந்தனை
அழிக்க புவிதனில்
யாருக்கு அதிக சக்தி
என்று போரிடுவதில்
எல்லை வகுத்து
அணிகளாய் நிற்கையில்
நம்முள் எதற்கு
மதவாதமும்! சாதிப்பிரிவினைகளும்!
மேகமூட்டத்தில் மறைந்து
வேவுபார்க்கும் சாட்டிலைட்டும்
போர்விமானங்களும் கொண்டு
உன் அறிவைப் பறைசாற்றினால்
உலகம் அழிய
இறைவன் வழிகாண்பான்
என்பதை உணர்வாயா உலக மானிடா!
அடிமைப்பட்டுக் கிடந்த
இந்தியர்கள் அன்று
அடிமைப்பட காரணம்
சாதி,மதம், ஒற்றுமையின்மை
என்பதை இனியும்
நாம் மறக்கலாகுமா!
சிலுவையும் பிறை நிலவும்
பட்டையும் நாமமும்
மனிதனின் மனதில்
பொறாமைக் களைகளை
நீக்கவல்ல மருந்துகள்
என்பதை உணர்வாயா மானிடா!
காக்கையும் குருவியும்
புறாக்களும் முகமூடி மாட்டி
இரை தேடத் திரியவில்லை!
மனிதன் மட்டுமே
இரை தேட முகமூடி மாட்டி
அலையும் நிலை தொலைய
வானில் தேவர்களாக
அனைத்து மதத்து கடவுள்களும்
நம்மை வழிநடத்த
தயாராக காத்திருக்கின்றனர்!
எனதருமை இந்தியனே!
உன்னுள் இலஞ்சமும் சுயநலமும்
தலைதூக்கினால்
அந்நியனுக்கு நாம்
அடிமையாகும் காலம்
நெருங்கிடும் என்பதை உணர்ந்து
எல்லோரும் ஓர் குலம்
என இந்திய மக்கள் ஒற்றுமையுடன்
பணியாற்றுவோம்!
அன்பினால் மட்டுமே
அகிலத்தை ஆளலாம்!