என் காதலி
என் காதலி


பருவம் எய்தாத வயது....
மழலை மாறாத மனது....
பள்ளியில் முதல் நாள்.....
என் ஆசிரியர் உன்னை
என்னிடத்தில் கொடுத்தார்!
நம் முதல் சந்திப்பு.. முதல் ஸ்பரிசம்....
உன் வண்ணங்கள் என் கண்களைக் கவர்ந்தன!
உன் ஸ்பரிசம் என் மனதில்
ஏதோ ஓர் மின்னலைப் பாய்ச்சியது!
உன் வாசம் என்னுள்
ஏதோ கிளர்ச்சியை உண்டாக்கியது!
ஒவ்வொரு மணியும் .... ஒவ்வொரு நாளும்...
உன் மீதான நேசம் கூடியது!
உன் மீது சிறு தூசு படியாமல்...
என் பையினுள் பதுக்கி வைப்பேன்!
ஒருவரது சுண்டு விரல் கூட உனைத் தீண்டாது பார்த்திருப்பேன்!
அல்லும் பகலும் என் கரங்களிலும்....
என் மார்பினிலும்.... மடியினிலும் .... தவழ்ந்தாய்!
கண்மூடி உறங்கிய போதும்....
உனை என் கரங்களில் தாங்கிடுவேன்!
நானும் வளர்ந்தேன்..... நீயும் வளர்ந்தாய்!
படங்கள் வார்த்தைகளாய்....
வார்த்தைகள் வாக்கியங்களாய்....
வாக்கியங்கள் பத்திகளாய்....
பத்திகள் பல பக்கங்களாய்!
புரியாத பல செய்திகளை
உனைப் படித்து புரிந்து கொண்டேன்!
தெரியாத பல விஷயங்களை
கற்றுத் தெளிந்து கொண்டேன்!
கதைகள் கூறினாய்... பாடல்கள் பாடினாய்..
இலக்கியங்கள் இயம்பினாய்..... இலக்கணங்கள் எடுத்துரைத்தாய்!
வரலாற்றைக் கூறினாய்.. வானியலைக் கூறினாய்.....
சிந்தனையைத் தூண்டினாய்.... பகுத்தறிவை வளர்த்தாய்!
உனை நித்தம்..... நித்தம்.... தரிசித்தேன்!
புத்தம் புது செய்திகளை வாசித்தேன்!
படித்து பட்டங்கள் பல பெற்றேன்....
பாரினில் நல்ல பதவி பெற்று புகழுற்றேன்!
உனைத் தொட்டவர்கள் கெட்டதில்லை...
உனை விட்டவர்கள் ஞானம் பெற்றதில்லை!
உனை தலை குனிந்து பார்த்தவரை தலைநிமிர வைக்கின்றாய்!
நான் வாழ்வில் உச்சம் தொட
அச்சாரம் இட்டவள் நீ!
நீயின்றி நானில்லை!
அன்பே....
நான் நரை எய்தி கிழப்பருவம் ஆயினும்....
உன்மீது உண்டான காதல் அழியாது!
உனை ஒரு கணநேரமேனும் காணாது விழி மூடாது!
உனை தழுவாது என் கரங்கள் விடாது!
நீ எனை ஏற்றிவிட்ட ஏணியடி....
கரை சேர்த்த தோணியடி!
அழியாது உன் மீதான காதலடி