சிப்பாய்
சிப்பாய்
உறைந்த பனியிலும் நிறைந்த மனதோடு
தேசத்திற்காக பாசத்தோடு பணியாற்றுபவன் நீ!
கொளுத்தும் வெயிலும் உறைந்த பனியும்
உனக்கு ஒன்றுதான்!
பளிங்குத் தரையும்… கரடு முரடான பாதையும்
உன் பாதத்திற்கு ஒன்றுதான்!
கொதிக்கும் சூரியனும் குளிரும் சந்திரனும்
உன் தேகத்திற்கு ஒன்றுதான்!
இருள் கவ்வும் இராத்திரியும்… ஒளிச் சூழும் பகலும்
உன் கண்களுக்கு ஒன்றுதான்!
தேசமா? நேசமா? என்றால்….
தேசத்திற்காக எந்த உறவையும் மறந்து விட்டு
உயிரையும் துறந்து விட துணிந்தவன் நீ! எத்தனை தடைக் கற்கள் இடராக வந்த போதிலும்
குறுக்கு வழியை நாடாது….. நெஞ்சுரத்தோடு
முன்னேறுபவன் நீ!
உன்னுள் துடிக்கும் இதயம் உனக்கா
க துடித்ததைவிட
உன் தேசத்திற்கு துடித்ததே நிஜம்!
உணவை…உறக்கத்தை… உறவை….. உயிரை….. மறந்து…
விழி மூடாமல் கரத்திலே ஆயுதத்தை தாங்கி நாட்டைக்
காத்து நிற்கும் எல்லைக் கருப்பு சாமிகளே!
எத்தனை இலட்சங்கள் ஆனாலும்….
உரம் கொண்ட உன் இலட்சியத்திற்கு ஈடாகாது!
எத்தனை பதக்கங்கள் ஆனாலும்….
உன் மறம் நிறைந்த தோளுக்கு இணையாகாது!
மறவனே! உன் புயங்களும்… உன் அவயங்களும்…
எத்தனை அபாயம் வந்த போதும் அபயத்தைத் தேடியதில்லை!
முன்னேறிய கால்கள் என்றும் பின்னோக்கி ஓடியதில்லை!
உன்னைத் துளைக்க வரும் குண்டுக்கும்
உன் இதயத்தில் இடம் அளிப்பவன் நீ!
வீரம் கொண்ட உம் கரத்திற்கு….
எம் சிரம் தாழ்ந்த வீர வணக்கங்கள்!