வல்லன் (Vallan)

Classics Drama Inspirational

3  

வல்லன் (Vallan)

Classics Drama Inspirational

வேலுநாச்சி 1

வேலுநாச்சி 1

4 mins
679


நூல் அறிமுகம்


           இந்திய வரலாற்றில் வெள்ளையர்களை முதன்முதலில் எதிர்த்து சுதந்தரத்துக்கு போரிட்ட முதல் வீரப்பேரரசி வேலுநாச்சி. அவரைப் பற்றி பள்ளிப் பாட நூல்களிலும், கட்டுரைகளிலும், பத்திரிக்கைகளிலும் படித்திருப்போம். இந்த நாவல் முழுவதும் வேலுநாச்சியின் கண்ணோட்டத்தையே முதன்மையாகக் கொண்டு வரலாற்றை புனைவுகளுடன் எடுத்துப் பேசும். மேலும் வரலாற்றின் கரைபடிந்த பக்கங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டும்.


           மிகக்குறைந்த தகவல்களைக் கொண்டு என்னால் முடிந்த அளவு உண்மைத் தன்மையுள்ள செய்திகளை இந்த கதை வாயிலாக கொடுத்திருக்கிறேன். வீரத்தின் அடையாளமாய், பெண்ணியத்தின் முன்னோடியாய் விளங்கிய வேலுநாச்சியின் வாழ்க்கையின் மறுபக்கத்தை இந்த நாவலில் காண்பீர்கள், நன்றி.


-        வல்லன்.அத்தியாயம் 1 வந்தாள் வேங்கைமறம் விளைந்த பூமி, மக்கள் குணம் நிறைந்த நாடு, பாசமும் நேசமும் பொங்கி வழியும் மண்ணில் ஏனோ வேளாண்மை செழிக்க மழை மட்டும் பொய்த்துவிடும், சோழன் காவலுக்கு விட்டுச் சென்ற மறவர்களின் தென்சீமை சேதுபதிநாடு, நாட்டின் மன்னன், மறவர் குலத்தோன்றல் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி.


 மக்கள் மனம் அறிந்து நல்லாட்சி வழங்கி, சீரும் சிறப்புமாக நாட்டைப் பரிபாலித்து வந்தார். மனைவி முத்தாத்தாள் பிள்ளைப்பேறுக்காக காத்திருக்கிறாள், இன்றோ நாளையோ பிள்ளை பிறந்துவிடும் என்ற நிலை, மன்னன் செல்லமுத்துக்கும் கவலை, குழந்தை நல்லபடியாக பிறக்கவேண்டும், முத்தாத்தாளுக்கும் ஏதும் ஆகக்கூடாது என்று.


அந்த நாட்களில் குழந்தை இறப்பதோ, தாய் இறப்பதோ, ஏதோ ஒன்று நடப்பது வாடிக்கையாகத்தான் இருந்தது. முத்தாத்தாளுடன் சேடிமார்களும், அரண்மனை ஆஸ்தான மருத்துவச்சியும் விலகாமல் இருந்தனர். எதிர்பார்த்தபடி‌ விடியற்காலை ராணிக்கு பேறு வலி தொடங்கிவிட்டது. மன்னன் தன் தலைவனான ஈசனுக்கு சிறப்பு வழிபாடுக்கு கட்டளைப் பிறப்பித்து ஆட்களை காளையார்கோவிலுக்கு அனுப்பினார்...


முதல் குழந்தை, ஆணாக இருந்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் எண்ணினர். மக்களும் ஆவலாக இருந்தனர் தங்களை ஆள குட்டி இளவரசன் வரப்போகிறான் என்று. காலையில் குயிலின் குக்கூ கீத்த்துடன் வீல்வீலென்று அழுதுக்கொண்டே பிறந்தது பிள்ளை...


ஆஸ்தான மருத்துவச்சி வெளியே‌ மலர்ந்த முகத்துடன் வந்து , தேவரே ! பெண்புலி பிறந்துள்ளது என்றாள். ஊரே உற்ச்சாக கோலம் பூண்டு ஆரவாரமாக திருவிழா கொண்டாடியது. மன்னன்‌ உள்ளே சென்று பார்த்து குழந்தையை, என் குலம் காக்கும் தெய்வமே என உணர்ச்சி பொங்க ஆர்த்து குழந்தையை உச்சி மோர்ந்து மகிழ்ந்தான்...

     

பிறந்தவள் மண்ணுக்கு ஏற்ற நிறம் தான் , அந்த இளங்கருப்பழகி பார்ப்போரை எல்லாம் தன்வசப்படுத்திவிடுவாள், அந்த கண்களில் உள்ள கருவிழி சீதாப்பழத்தைப் போல கொஞ்சம் வெள்ளையில் பேரளவு கருப்பும் படர்ந்திருந்தது. பல் முளைக்காத அந்த பொக்கைவாய் சிரிப்பு, சொல்லவா வேண்டும் அதன் அழகை... அம்மம்மா அவளை வருணித்தால் வார்த்தைகளுக்குக் குறை வந்துவிடும் உலகில். பிறந்தது பெண் என்றாலும் வளர்ப்பு எல்லாம் ஆண்பிள்ளை போல எந்த குறையும் இல்லாது போர்க் கலைகளும், குதிரையேற்றமும், வில்லும், வாளும், வேலும், வளரியும், சுரியும் ‌எல்லாம் பத்து வயதுக்குள் கைப்பிடியில் கொண்டுவந்தாள்... மஞ்சள் பூசி குளித்த முகத்தில், குங்குமம் தீட்டி அவள் வந்தாள், ஊரே கை எடுத்து கும்பிடும் ஒளி பொருந்திய முகம்.


பார்ப்பவர்களை வசீகரிக்கும் முகம், பார்வையிலே குளுமை, வதனத்திலே சந்திரபிம்பம், நாளொரு மேனியும் பொழுதோரு வண்ணமும் சீரோடும் சிறப்போடும், செல்வச் செருக்கு இன்றி கண்டோருடன் உவந்து பேசும் உள்ளதினளாய், அநீதியைக் கண்டால் அடங்காத காளியாக, ஊர் மக்களின் செல்லப்பிள்ளையாக, குறையாத நெஞ்சுரமும், களையாத அழகும், வற்றாத அறிவும், குன்றாத பண்பும் நிறைந்த குணவதியாக வளர்ந்து வந்தாள் சேதுபதிநாட்டு ஆஸ்தான இளவரசி. அவள் தான் பரங்கிப்படையை துவம்சம் செய்து, வெள்ளையனை வெட்டி வீழ்த்திய, சுதந்திர போருக்கு முன்னோடியாக, சுதந்திர வேரை ஊன்றிய தென்னாட்டு மறவர் குலத்தின் வீரமங்கை வேலுநாச்சி...அத்தியாயம் 2 கால்யாணமாம் கல்யாணம்ஆயகலைகள் அறுபத்து நான்கும், நல்ல போர்ப் பயிற்சியும், கற்று அரசிளங்குமரனுக்கு இணையாக பட்டத்து இளவரசியாக சேதுபதிநாட்டில் சக்கந்தி அரண்மனையில் எழில் கொஞ்சும் நேர்த்தியான அழகுடன் வளர்ந்து கொண்டிருக்கிறாள் நம் பெண்புலி. ஒரு பக்கம் போர்ப் பயிற்சி செல்ல, மறுபுறம் கல்வியிலும் தலை சிறந்து விளங்கினாள் பிரெஞ்சு, ஆங்கிலம், உருது போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினாள்.


சிலம்பத்தில் இளவரசிக்குத் தனி பிரியமும், ஆர்வமும் இருந்தது, இதனை அறிந்த ஆசிரியர் வெற்றிவேல் சிறுசிறு நுணுக்கங்களையும் கற்பித்தார், ஆர்வத்தில் வேலுநாச்சியும் நன்கு கலையை உட்கிரகித்துக் கற்றுக்கொண்டாள். பயிற்சி முடிந்து களம் காண வந்த இளவரசி அவள் ஆசிரியருடனே போட்டியிடும் நிலை வந்தது, இருவரும் நேருக்கு நேர் மோதினர், ஒரு நிலையில் வெற்றிவேல் தோல்வியைத் தழுவ நேர்ந்தது, அப்போது வேலுநாச்சி தன் ஆசிரியர் தோற்கக்கூடாது என தான் மண்டியிட்டு தோல்வியை ஏற்றாள். இந்த நிகழ்வு இளவரசியின் குருபக்தியைப் பிரதிபலித்தது என்று அவளின் எளிமையை ஊரே வியந்து கொண்டாடியது.


ஆண்டுகள் உருண்டோடுவது ஏனோ தெரிவதே இல்லை நமக்கு, அதற்குள் இளவரசி பிறந்து பதினாறு ஆண்டுகள் ஆயிற்று. என்னதான் ஆண்பிள்ளை போல வளர்த்தாலும் காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ண‌ வேண்டுமல்லவா?

          

ஒரே மகள், இராஜியத்தின் பட்டத்திற்கு உரிய ஒருத்தி, அவளை நல்ல கைகளில் ஒப்படைக்க வேண்டும், நாட்டை வீரமிக்க ஒருவனிடம் பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் செல்லமுத்து தேவருக்கு இருப்பதில் வியப்பொன்றும் இல்லைதான், வேலுநாச்சியின் அழகுக்கும் அறிவுக்கும் வீரத்திற்கும் ஏற்ற ஒரு மன்னவனைத் தேடுவது ஒன்றும் எளிதல்ல. ஆனால் நம் இளவரசி அதிலும் கொடுத்துவைத்தவள், சிவகங்கை சீமையைக் கட்டியாளும் சசிவர்ணத்தேவரின் ஒரே மகன், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த இளவரசன் விஜயரகுநாத முத்துவடுகநாதத்தேவர் மணாளனாக வாய்க்கப்பெற்றாள்.


முத்துவடுகநாதத் தேவர் ஒன்றும் நாச்சியாருக்கு சளைத்தவர் அல்லர். தேவர் குதிரையில் ஏறி ஆரோகணித்து வந்தால் அந்த அய்யனாரப்பனே நேரில் வருவது போல இருப்பார், நல்ல ஆஜானுபாகுவான உடல் தோற்றம், பரந்த மார்பும், திரண்ட வலிமை மிக்க புஜங்களும் எதிரிகளை என்றும் விட்டதில்லை, வளரி என்ற சுருள் வாள் கலையில் அவரை மிஞ்ச எவனும் இல்லை... முருக்கிய மீசையும், காதில் கடுக்கனும், இளரத்தம் சூடேறி வெளியே பீறிடுவது போல் சிவந்த கண்கள் எப்போதும் பகைவனுக்கு உயிர் பயத்தைக் காட்டும். அப்படிப்பட்ட வீரபுருஷனைத்தான் நம் இளவரசி மணக்கப் போகிறாள்.


சுபமுகூர்த்த நாளும் குறிக்கப்பட்டது, இராமநாதபுரம் அரண்மனையும், சிவகங்கை சீமையும் திருவிழாக்கோலம் பூண்டு ஆரவாரித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். குறித்த நாளும் வந்தது, ஊர்மக்கள், பக்கத்து நாட்டு அரசர்கள், மதுரை நாயக்கர், பாளையக்காரர்கள் என பல்வேறுபட்ட மக்கள் ஒன்றாகக் கூடினர் சிவகங்கை அரண்மனையில்,குறித்த நல்ல நேரத்தில் கோட்டையில் உள்ள தேவி ராஜேஸ்வரி ஆலயத்தில் சசிவர்னத்தேவரின் மகனான விஜயரகுநாத முத்துவடுகநாத் தேவருக்கும், செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி தேவரின் ஆசை மகளான வேலுநாச்சியாருக்கும் அம்மன் அருளால் இனிதே திருமணம் நடந்தது.

இந்தத் திருமணத்தில் இணைந்தது இரு மனங்கள் மட்டுமல்ல, இரு இராஜாங்கமும், இரு வீர இரத்தத்தின் அடையாளங்களும் ஒன்று சேரந்து வலிமை மிக்க அரசாக புது சகாப்தம் படைக்க இணைந்த சிவகங்கை-இராமநாதபுரம் அரசு உருவானது தெற்கத்திச்சீமையில்.

 

இத்திருமணத்தால் பல அரசியல் மாற்றங்கள் நிகழவிருக்கின்றன வரும் காலங்களில். ஆனால் இதனை ஏதும் அறியாது அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் கூத்தாடிக் கொண்டிருக்கின்றனர்.Rate this content
Log in

Similar tamil story from Classics