Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

தாய் மண்ணே, வணக்கம் (தொடர்கதை)

தாய் மண்ணே, வணக்கம் (தொடர்கதை)

2 mins
389


அடுத்த கடிதம்-" மனோகர் இந்தியா வந்து கொண்டிருக்கின்றான். அவனிடம் ஒரு பாக்கெட் கொடுத்து அனுப்பி இருக்கிறேன். பார்சலைப் பார்த்ததும் மல்லிக்கா தையத்தக்கா என்று குதிக்கவேண்டாம். நான் அவர்களுக்காக மனோகரிடம் கைக்கடிகாரங்கள், சேலைகள், விலை உயர்ந்த சென்ட் பாட்டில்கள் என அனுப்பியிருப்பான் கண்ணன், என் அன்புத் தம்பி என நினைத்து பார்சலைத் திறந்தால்..... புஸ்.... மனோகர் பாவம் அவனிடம் எதையும் எடுத்துச் செல்ல சூட்கேஸில் இடம் இல்லை... புரியுதா... அம்மா பெண்ணே ?" அப்புறம் அடுத்த கடிதம், அதற்கு அப்புறம், அதற்கு அப்புறம் என நீல, நீல ஏர்மெயில் கவர்களென எக்கச்சக்கமான லெட்டர்கள்! என்னைப் பொருத்தவரை அவைகள் வானளவிற்கு உயர்ந்தன. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என்னால் அவனைப் பார்க்க முடிகிறது. இரவு-பகல் கண்விழித்து, கஷ்டப்பட்டு படித்து, வெந்தும் வேகாததுமான காய்கறிகள், அரிசி என சாப்பிட்டு வாழ்ந்து கொண்டு, எங்கெங்கோ இருந்து வந்து, வெளிநாட்டில் ஒன்றாக சேர்ந்த மாணவர்கள்- மராட்டியன், கோவன், தமிழன் என்று ஆரம்பித்து, மதுராக்காரன், பஞ்சாபி, சூரியவம்ச சத்ரியன் என்று ஆரம்பித்து சதுர்வேதியன் வரை, பாரதத்தின் வெளியே தங்களது பாரத நாட்டின் ஒரு பகுதியாக அமைத்து வாழ்கின்றனர். ரக்ஷாபந்தன் அன்று வெகு தூரத்தில் பாரத நாட்டில் இருந்து தங்கை- தமக்கைகள் அனுப்பிய ராக்கிகளை கையில் கட்டிக்கொண்டு யுனிவர்சிட்டி போகிறார்கள். நவராத்திரி அன்று குஜராத்தி அல்லாதவர்களும் தாண்டியாவை கையில் எடுத்து புதிதாக ஆடக் கற்றுக் கொள்கின்றனர். ஹோலி, தீபாவளி தினங்களில் ஒன்றாகக் கூடி, பாட்டுப் பாடி, தாங்கள் கொண்டாடிய ஹோலி பற்றியும், தீபாவளி பற்றியும் எழுதியதை நான் நினைவுபடுத்திப் பார்த்துக் கொள்கிறேன்.

சில சமயங்களில் அங்கே குடியேறிய குடும்பத்தினர் அவர்களை வீட்டிற்கு அழைப்பார்கள்- நம் நாட்டவர்களின் நலன் பற்றிய எல்லா விஷயங்களையும் கேட்பதற்காகவும், பேசுவதற்காகவும் தான். வெளிப்படையாகவே தெரியும், விரும்பியோ விரும்பாமலோ வெளிநாடு வந்தாயிற்று, ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பாரதம் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கிறது. மறக்கும் முயற்சியில் நினைவுகள் அதிகமாவது இயற்கையே. இத்தகைய மக்களிடம் சென்று பேசும்போது தான் புரிகிறது, நினைக்கதெரிந்த மனதிற்கு கடினம் மறந்து போவது என்பது. நேற்று வைஷ்ணவி மிகவும் உணர்ச்சி வசப்பட்டு வந்தாள் ,"நாம் நாடோடிகளாகி விட்டோம், இல்லையா ? எவற்றை விட்டு வந்தோமோ, அவற்றை எங்கு சென்றாலும் விட முடியவில்லை; மேலும் எங்கே ஒன்று சேர விரும்புகிறோமோ, அங்கே ஒன்று சேரவும் முடியவில்லை. தாய் மண் பாரத நாடு போகிறேன். போன நாளிலிருந்து அம்மா திரும்பும் தேதியை கேட்டு அழ ஆரம்பித்து விடுவார்கள். ஒரு கண்ணில் அழுகை, ஒரு கண்ணில் சிரிப்பு என நாட்களை எண்ணிக் கொள்வார்கள். ஏனென்றால் நான் மீண்டும் என் கனவை நோக்கிப் புறப்பட்டு விடுவேன்."

 நான் வைஷ்ணவியிடம் கேட்க ஆசைப்பட்டேன், "மக்கள் ஏன் கனவை நோக்கிப்போக ஆசைப்படுகிறார்கள் ? ஏன் இங்கேயே உள்ளவைகளை வைத்துக்கொண்டு பொறுமையாக இருக்கக் கூடாது ?" என்று ; ஆனால் கேட்கவில்லை. அது காயங்களை ஆழப்படுத்தி விடலாம். மேலும் கேட்க வேண்டிய அவசியம் தான் என்ன ? நாங்களும் தானே, இரவு- பகல் தத்தம் கனவுகள் எனும் பந்தைப் பந்தாடி அவை மைதானத்தின் எல்லையைத் தாண்டிப் பறப்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம், இல்லையா என்ன ? மன்னிக்கவும், நீங்கள் எல்லோரும் மனதை முத்துடன் ஒப்பிடுவீர்கள் ; நாங்கள் எல்லாம் சிக்ஸர் அடித்த பந்து டன் ஒப்பிடுகிறோம். சூழ்நிலைகளின் தேவை- காலத்தின் கட்டாயம்- எல்லாம் நன்மைக்கே! பார்த்தீர்களா, நான் என்ன செய்ய....காலத்தின் கோலம்..... எனக்குப் புரிகிறது.... சரமாரியாகத் திட்ட ஆரம்பிக்கிறீர்கள் என்று... உருப்படாதவனே, உதவாக்கரை, லாயக்கு இல்லாதவனே.... அப்படித்தானே!

             - தொடரும்...


Rate this content
Log in

Similar tamil story from Classics