DEENADAYALAN N

Abstract

4.8  

DEENADAYALAN N

Abstract

பரோட்டா குருமா

பரோட்டா குருமா

2 mins
133
டிசம்பர் 10, 2019


பிடித்த உணவை உண்ட தருணம்!

கோவை என். தீனதயாளன்


சிறிய வயதில், வெல்லமும் பொட்டுக் கடலையும் சேர்த்து தின்பதற்கு விரும்பாத குழந்தைகளே இருக்காது. நானும் அப்படித்தான்! (வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் ‘ரெடி மிக்ஸ்’ உண்டியாயிற்றே!)


பெரியவர்கள் காசு கொடுத்தால் நான் முதலில் வாங்கி உண்ண விரும்பும் உண்டி ‘அஸ்கா பர்பி’ மற்றும் ‘வெல்ல பர்பி’


தெருவோரத்துப் பாட்டி விற்கும் இலந்தைப் பழத்தை, சட்டையை மடித்து வாங்கிக் கொண்டு, மிளகாய்ப் பொடியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, தொட்டுத் தொட்டு, ருசித்து தின்ற பருவம் உண்டு.


பால் கம்பெனியில் பணி புரிந்து கொண்டிருந்த என் அன்பிற்குரிய மூன்றாவது அண்ணனை, பணி நேரத்தில், சில பல காரணங்களுக்காக, அவ்வப்போது பார்க்கச் செல்வேன். அந்த சமயங்களில் அவர் அப்பொழுதுதான் ஃப்ரெஷ்ஷாக தயார் செய்து கம்பெனியின் விற்பனைப் பிரிவிற்கு வந்திருக்கும் பால்கோவாவை வாங்கிக் கொடுப்பார். ஆஹா.. அந்த ருசியே தனி!


சிறு பருவத்தில் திடீரென ஒரு நாள் மாலை என் அக்காவின் கணவர் (சுமார் 30 வயது என்னை விட மூத்தவர் – என் மைத்துனர்), என்னைத் தெருவில் பார்த்தார். அருகில் இருந்த அன்னபூர்னா ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அன்று அவர் வாங்கிக் கொடுத்த அந்த நெய் ரோஸ்ட்டையும் அன்னபூர்னா சாம்பாரையும் என்னால் மறக்கவே முடியாது!


பள்ளிக்கூட நாட்களில், மாலையில், மிகுந்த பசியுடன் வீடு திரும்பியவுடன் – வீட்டில் இருக்கும் மதிய உணவை ஒரு பிடி பிடிப்பேன்.. என் தாயினும் சாலப் பரிந்து என்னை வளர்த்த என் அண்ணியாரின் கைப்பக்குவத்தில் உருவான அந்த முள்ளங்கிச் சாம்பாரின் ருசி இப்போது நினைத்தாலும் என் நாவின் சுவை மொட்டுக்களை மீட்டுகிறது.


கல்லூரி காலத்தில், ஒரு நாள் மாலை, என்னுடன் பயின்ற என் நண்பர் ஒருவரும், நானும் காந்திபுரத்தில் உள்ள ஒரு பிரபல உணவகத்திற்கு போனோம். ‘பரோட்டா’விற்கு ஆர்டர் கொடுத்தோம். பரோட்டா எனக்கு மிகவும் பிடித்த உணவு. ஒரு பரோட்டாதான். ஆனால் பெரிய ‘சைஸ்’!. அந்த பரோட்டாவும் அதற்கு அவர்கள் கொடுத்த அந்த ருசியான குருமாவும் என் நாவை அப்படியே குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. அதை சாப்பிட்டவுடன் இன்னொன்று கூட சாப்பிடலாம் என்று தோன்றியது. ஆனால் அன்று என்னிடம் காசு இல்லை. என் நண்பர்தான் கொடுக்கப் போகிறார். எனவே நாவை அடக்கிக் கொண்ட போது அவர் சொன்னார்: ‘பரோட்டா சூப்பாராக இருக்கிறது. இன்னொன்று சாப்பிடலாமா?’. கரும்பு தின்ன கூலியா? ‘ஓ…ய்ய்ய்யெஸ்!’ என்றேன்.


பல முறை நான் சாப்பிட்டிருந்தாலும் எனக்குப் பிடித்த அந்த பரோட்டாவையும் குருமாவையும் அத்தனை ருசியுடன் உண்ட அந்த தருணம் இன்றும் நினைவில் நிற்கிறது!
கோவை என். தீனதயாளன்

9994291880Rate this content
Log in

Similar tamil story from Abstract