பழமை பண்பாடு நாகரிகம்!
பழமை பண்பாடு நாகரிகம்!


ஒரு நாட்டின் பழமையை பண்பாட்டை, நாகரீகத்தை ஓரளவிற்கு அதன் பழம் இலக்கியங்களும் எடுத்துக் காட்டும். அதை உறுதி செய்யும் நம் நாட்டின் மூன்று புலவர்களின் படைப்புச் சிறப்புக்களை இப்போது காண்போம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்பது கணியன் பூங்குன்றனார் என்னும் சங்க காலப் புலவரின் புறநானூற்று வரிகள். இந்த வரியைப் பார்க்கும் போது. சமாதானத்தையும், அஹிம்சையையும், மனித நேயத்தையும் இதை விட சிறப்பாக யாராவது சொல்லி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் முழுவதுமே, பூங்குன்றனார் வாழ்க்கையின் இயல்பை சொல்லி வருகிறார்.
இன்னொரு வரியில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிறார். இந்த வரிகளை இன்னொரு முறைப் படித்துப் பாருங்கள். நம் வாழ்வில் ஒவ்வொரு தீதும் ஒவ்வொரு நன்றும் வரும்போதெல்லாம் ஆழ்ந்து யோசித்தால் இதை உணரலாம். ஒரு யதார்த்தமான தத்துவத்தை இவ்வளவு எளிமையாக தர முடியுமா?. இப்படிப் பட்ட இந்திய புலவரால் நமக்கு எவ்வளவு பெருமை!
திருக்குறள் உலகப் பொதுமறை. அதை உலகுக்கு அளித்த திருவள்ளுவப் பெருந்தகை இந்தியர். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களுக்குள் இந்த உலகத்தின் அனைத்து சாராம்சங்களையும் அடக்கி, விரிவாக விளக்கி, நன்மை தீமைகள சுட்டிக் காட்டி அறம் பொருள் இன்பம் மற்றும் வீடுபேறு என எந்தப் பாலையும் விட்டு வைக்காமல் இலக்கியம் படைத்த பெரும் புலவர் திருவள்ளுவர்.
‘அடுத்தவர்க்கு தீமை தராத சொற்களைச் சொல்லுதலே வாய்மை’ என்பார். ‘நன்மை தரும் என்றால் ‘பொய்’ கூட சொல்லலாமா?’ என்று ஒருவர் கேட்கக்கூடும். ‘குற்றமில்லாத நன்மையைப் பிறர்க்கு தருமானால் பொய்மை கூட வாய்மை’ என்பார் இப்படி எடுத்துக் கொண்ட அதிகாரத்தின் எல்லா பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து சொல்லி விடுவார். திருவள்ளுவர் நம் நாட்டவர் என்பதில் நமக்கு பெருமை இல்லாமல் போகுமா?
சுப்ரமணியபாரதி! இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தன் கவிதைகளாலும் செயல்களாலும் மக்கள் எழுச்சிக்கு வித்திட்டவர்களில் குறிப்பிடத்தக்க புலவர்.
‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று மனித நேயத்தை முன் நிறுத்தி வாழ்ந்த இன்னொரு இந்தியப் புலவர்.
‘மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்’ என்று இந்தியப் பெண் விடுதலைக்கு வித்திட்ட வீரப் புலவர் பாரதியார்.
‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு
உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று வாழ்ந்த இந்தியப் பெருங்கவி தேசீயப் புலவன், பெண்ணுரிமைப் போராளி, பாரதியார் பிறந்த நாட்டில் பிறந்த நமக்கு பெருமை இல்லாமல் போகுமா?
(நமது இந்தியாவை மேலும் காண்போம்)