மதுரை முரளி

Romance Classics Inspirational

5  

மதுரை முரளி

Romance Classics Inspirational

பகல் நிலவு

பகல் நிலவு

11 mins
407


                        ” பகல் நிலவு ” – சிறுகதை

                                                                           மதுரை முரளி

                     “பகல் நிலவு”  முதியோர் இல்லம்.. அமைதியின் அடைக்கலமாய். 

                      உள்ளேயும்,  வெளியேயும் மயான அமைதி.

                      மயானம்.. மனிதர்கள் ஒரு நாள் மட்டும் இல்லை,  சில மணி நேரம் மட்டும் பாடம் கற்கும் இடம்.. வாழ்வில்.

                      பாடம்., மயான வைராக்கியம் வெளியே வந்ததும் மறந்து விடும்.  வாழ்க்கையின் தேவைகள்,  தேடல்கள் அப்படி !

                     சூரியனாய்ப் பிரகாசித்த பலரும் நிலவாய்.. பகல் நிலவாய் காத்திருக்கும் கட்டம்.  காலனை நோக்கி.. முதியோர் இல்லம். அதில் ,  ஜனார்த்தனும் ஓர் அங்கம் .

                     அவர் ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி.  பதவிக் காலத்தில் நேர்மை தான் ‘லட்சியம்’,  கடமை தான் ‘கண்’ என உழைத்து ஓய்வு பெற்றவர்.

                     மனைவி மல்லிகா.  பெயர் பொருத்தமாய் வாழ்வில் இணைந்து, நன்கு மலர்ந்து.. உதிர்ந்து விட்டாள் மூன்று வருடத்திற்கு முன். வாழ்ந்த காலத்தில்,  அவளோடு வாழ்ந்த காலத்தில் வாரிசாக இரு மகன்கள்.

                   அவர்களை நன்றாகப் படிக்க வைத்து, பாசமாய் வளர்த்து, ஓய்விற்கு முன் திருமணம் நடத்தி முடித்துவிட்டார் ஜனார்தனன்.  

                     ஜனார்தனன் தான்,  பாவம்..பரிதாபம். பணி ஓய்வு பெற்று ஒரு வருடத்தில் மனைவி மல்லிகா உதிர்ந்து போனாள்.

                    அதுவரை, வாழ்க்கையின் வெளிச்சத்தை மட்டுமே பார்த்தவர் இருட்டையும் அனுபவிக்கத் தொடங்கினார்.

                    முதல் ஒரு வருடம் சுழற்சிமுறையில் மகன்கள்,  மருமகள்கள் நடுவில்  ஓடிப்போனது.

                    ஜனார்தனனின் கோபம், கண்டிப்பு அவருக்கே ஆபத்தாய் திரும்ப,

                   பேரன் பேத்திகளை அனுசரித்துப் போகாதவர்,  கூட்டுக் குடும்பத்திற்குத் தகுதியில்லை எனப் ‘பட்டம்’ சூட்டி வெளியேற்றப்பட 

                   இப்போது " பகல் நிலவில்" ஒரு அறையில் அடங்கி,  சுருங்கியது  அவர் வாழ்க்கை.

                  ஜனார்த்தனுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு.  அதிகாலை ஐந்து மணிக்கே விழிக்கும் அவர், சூரிய உதயம் முன்பு குளித்து, தன் டேபிளின் மேலுள்ள ’ மாயக் கண்ணனை’ வழிபடுவார். கூடவே, தினமும் பகவத் கீதையில் ஒரு ஸ்லோகம் படிக்கும் பழக்கம்.

                  மனம்.. மனிதவாழ்வின் மாயைகளை நினைத்துக் கலங்கும்.

                  மாயை பற்றி தான் படித்த கவிதை தினமும் மனதில் வந்து போகும்.

                                              மாயை

                                       மாற்று இல்லாத 

                                       ஓர் மயக்கம் !

                                       பார்க்கும்...

                                       தேடும் பொருட்களில்

                                       எல்லாம் 

                                       மனதுக்கு.. 

                                       நம் மனதுக்கு

                                       புலப்படாத மாயை!!

                                       மயங்கும் வரை..

                                       நாம்.

                 கடைசி  வரி நினைவில் வரும் போது கண்ணீர் கசிந்து கண்கள் மறைக்கும்.

                ஜனார்தனின் பழைய, மலரும் நினைவுகளைப் பகிர  மற்றொரு  'பகல் நிலவு' மைதிலி.

                ஜனா கண்களை துடைத்துக் கொண்ட சமயம்,  இலேசான தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்தாள் மைதிலி.

               “ வா..வாங்க மைதிலி..” உடைந்த குரலில் உற்சாகம் தொற்றிக்கொள்ள அழைத்தார் ஜனார்தனன்.

               “ என்ன,  வழக்கம்போல பீலிங்கா?உங்களை திருத்தவே முடியாது ”  சிரித்துக்கொண்டே,

               பிளாஸ்டிக் சேரை பிடித்து, மெல்ல அமர்ந்தாள் மைதிலி. 

              சுற்றிலும் பார்வையை ஓட்டியவள்,

              “ என்ன மாயக்கண்ணனுக்கு  ‘பூ’ போடலையா?” வினவ,

             “ அட! நான் ஒரு மடையன். பறிச்ச  பூவை போட மறந்துட்டேன்” புலம்பியவாறு எழுந்த ஜனா,

                டேபிள் மேலே இருந்த சிவப்பு செம்பருத்தி ஒன்றை எடுத்து,

                தடுமாறி கிருஷ்ணன் தலையில் வைக்க.. அவன் ‘மாயமாய்’ சிரித்தான்.

                “ மைதிலிம்மா சாப்பிட்டீங்களா?  இன்னிக்கு இட்லி ரொம்ப கனம்..”

               “ கால்ல ஒண்ணும் போட்டுக்கலையே ? இன்னிக்கு கல்லு மாதிரி  இட்லி.”  சொல்லிய மைதிலி ‘கலகல’ வெனச் சிரிக்க,

                 தானும் சேர்ந்து கொண்டு சிரித்தார் ஜனா.

               “ என் மனைவி,  இட்லியை அவ பெயருக்கேத்த மாதிரி.. வைப்பா.”

               “ மல்லிகைப்பூ மாதிரி. ஹி..ஹி. ஆமா,  இன்னிக்கு என்ன கதை சொல்றீங்க? உங்க வாழ்க்கையில ? “ மீண்டும்  மைதிலி.

              “  இல்லீங்கம்மா. தினந்தினம் என் கதையைச்  சொல்லி உங்களைப் போர் அடிக்கிறேன். நீங்க விருப்பப்பட்டா.. உங்களப் பத்தி சொல்லுங்க.”  சற்று ஆர்வம் மேலிடக் கூற,

            “ அ.. அது,  என்ன பெரிசா என் வாழ்க்கையில் இருக்கப்போறது?  இருந்தாலும்,  நீங்க ரொம்ப நாளா கேட்கறதினால,  இன்னைக்கு சொல்றேன் “

            உட்கார்ந்திருந்த சேரில் , சற்று பின்னால் நகர்ந்து அமர்ந்தவள்,

            “ நான் ஓர் ஓவிய ஆசிரியை. இதை  முன்னமே சொல்லியிருக்கேன். எனக்கு வரையறதிலே அலாதி ஈடுபாடு.  என்னை விட்டா,  நாள் பூரா வரைஞ்சுக்கிட்டிருப்பேன். உடம்பு மட்டும் இடம் கொடுத்தா.. ஹி..ஹி..ஹி “

             இலேசாய்ச் சிரித்து இடைவெளி விட,

            “ நம்ம இல்லத்தில் கூட,  நீங்க வரைந்த விநாயகரை ஹால் நடுவில வச்சிருக்காங்க. “ சொன்னவர் கைத்தட்டிப்  பாராட்ட,

            “ மிக்க நன்றி.  எங்க வீட்டுக்காரர்.. இன்னமும் அவர் பெயர் சொல்ல மாட்டேன்.  ஒரு தனியார் கம்பனியில அக்கௌண்ட்ஸ் மேனேஜரா இருந்தாரு.  எங்களுக்கு ஒரு பையன்,  ஒரு பொண்ணு.  அவர் இருந்தவரைக்கும் சகலமும் அவர்தான்...  எனக்கும்,  எங்க வீட்டுக்கும்.  ஆனா..”

            மைதிலிக்கு வார்த்தைகளில் சற்று ‘சுருதி’ குறைய,

            “ சாரி..மைதிலிம்மா. உங்க நினைவுகளை நான் திரும்பக் கிளறி 

விட்டுட்டேனா? “  உருகினார் ஜனா.

         “  பரவாயில்லை.  இந்த வயசிலேயும்,  பழைய நினைவுகள் தான் நம்மளை உற்சாகப்படுத்தும்.  அவரு,  ஒரு நாள் டூவீலர் விபத்தில் தலையில் அடிபட்டு, நாலு நாள் மருத்துவமனையில் போராடி மேலே போயிட்டார்” குரல் உடைந்து கண்கள் கலங்கின மைதிலிக்கு.

         “  ஓ “ ஒற்றைச் சொல்லை உதிர்த்து  ஜனா நிற்க, தொடர்ந்தாள் மைதிலி.

         “ என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவாரு. மனிதர்கள் நிறம் மாறுவாங்க. அதுவும், நேரத்திற்கு தகுந்தபடி.  அதுக்கு யாருமே விதிவிலக்கு கிடையாது... பெற்ற குழந்தைகள் உள்பட , அப்படின்னு “  புடவைத் தலைப்பில் இலேசாய் கண்களை துடைத்து,  தொடர்ந்தாள் மைதிலி. 

         “ அ.. அது,  உண்மை ஆயிடுச்சு . நான் ஒரு பள்ளியில வேலைக்குப் போய்,  கிடைத்த சம்பளத்தில  வயிற்றை,  வாயைக்கட்டி..

பசங்களை படிக்க வைச்சேன்.  பெரிய ஆளாக்கி,  கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன்.  ஆனா, அவங்க வேலை முடிஞ்சதும் எனக்கு இங்கே வர வேளை வந்திடுச்சு. “ சோகமாய்ச் சிரித்தாள் மைதிலி.

         “ உங்க கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே இதுதான்.  சோகத்தையும்,  சுமையாக் கருதாம,  இப்படி இலேசா எடுத்துக்கிற விஷயம் தான்.  நீங்க ஏற்கனவே சொன்ன தகவல்.. உங்களுக்கு சொந்தமா ஒரு வீடு இருந்துச்சுன்னு..”

         “ அட!  ஆமா..”  சலித்துக்கொண்ட மைதிலி, 

தொடர்ந்தாள்..

          “ என் மக,  நகைகளைப் பிடுங்கிக்கிட்டா. மருமக வீட்டை பிடிங்கிட்டா. ஏதோ.. நானும், எங்க வீட்டுக்காரர் என் பெயர்ல போட்ட பணத்தில, அதில வர்ற வட்டியை வச்சு, இங்கே மாசப் பராமரிப்பு தொகை கட்டிக்கிட்டு இருக்கேன்.  இன்னும் எத்தனை நாளோ? “  மாயக்கண்ணனைப் பார்த்து கையைக் காட்ட, 

           “ மைதிலிம்மா,  நீங்களும் என்னைய மாதிரி ஏமாந்திட்டீங்க.  கிடைச்ச ஓய்வூதிய பலன்கள் எல்லாத்தையும் , அதாவது பணத்தையெல்லாம் அவசரப்பட்டு பசங்களுக்கு பிரிச்சுக் கொடுத்தேன்.  அவங்க,  என்னைய நல்லாப் பார்த்துப்பாங்கன்னு.. நம்பிக்கையில. ம்ஹூம். எல்லாம் மாயை..  ‘பண’ மாயை...பிணம் ஆகிற வரைக்கும்." ‘நறுக்’கென  ஜனா முடிக்க,

   

              “ உண்மை தான். இங்கேயுள்ள பல பேரும்,  இப்படித்தான்.  ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’.   நாம, நம்ம அப்பா, அம்மா மற்ற பெரியவங்களப்  பார்த்துக்கிட்ட விதமே தனி.  அதுவும்,  கூட்டுக்குடும்பமா..  குதூகலமா கவனிச்சோம். இப்பதான்,  தனிக்குடும்பம் தான்  தொடக்கத்திலேயே பேச்சாயிருக்கு .”

            “   இதுவும் சரி தான்.. அவங்க பார்வையில.  வாழ்க்கை ஒரு சக்கரம் . இன்று.. நான்.  நாளை.. நீ. இன்று எனக்கு எதுவோ.. நாளை உனக்கு அது. நாளை மறுநாள்.. மற்றவருக்கு. இந்தக் ‘ கீதாச்சாரம்’ புரிய, நமக்கே இவ்வளவு வயசாயிடுச்சே ! . “ எனச் சொன்ன ஜனா,

            “ஹா..ஹா..ஹா “ என  வாய்விட்டுச் சிரிக்க,

             மைதிலியும் கூடச் சிரித்தாள்.

            நான்கு நாட்கள் கடந்த நிலையில் , இல்லத்தின் ஹாலில் “புதிய தலைமுறை”  செய்திகள் ஓடிக்கொண்டிருக்க,  பழைய தலைமுறைகள் சற்று ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஜனார்த்தனனும் அதில் ஒருவர்.  

            “ ஐயா,  உங்க பெரிய மகன் வந்திருக்காரு.  உங்க அறையில காத்துகிட்டு இருக்காரு.  ஏதோ  தனியா பேசனுமாம். “ இல்லத்தின் உதவியாளர் சோமு,  ஜனார்தனன் காதில்  பலமாய்க் கூற,

            ஆச்சரியமாய்த் திரும்பிப் பார்த்த ஜனாவின் பார்வையில்.. பல நூறு கேள்விகள்.

            “ யாரு?  பெரியவன் இரவியா?  இன்னிக்கு.. இப்ப,  ஏன்? “  மனதில் பலத்த யோசனை ஜனாவிற்கு.

             மெல்ல எழுந்து,  சற்று தடுமாறியவராய் அறைக்குள் நுழைந்தார்.

            “  என்னடா இரவி,  இன்னிக்கு திடீர்னு வந்திருக்கே? எப்படி இருக்கே? வீட்ல ஏதாவது விசேஷமா ? “  ஜனா முடிக்குமுன்,

           “ அதெல்லாம் ஒண்ணுமில்லை.  எல்லோரும் பரவாயில்லை.  ஆமா,  நீங்க எப்படி ? “  இரவியின் விசாரிப்பு மேலோட்டமாய் இருந்தது. 

           “ அதான்.. நீயும், மருமகளும் சேர்ந்து என்னைய இங்கே அனுப்பி வச்சிட்டீங்க. ஏதோ நடமாடிக்கிட்டு  இருக்கேன் . இன்னும் எத்தனை மாசமோ? “ சலிப்புடன் ஜனா.

             “ ஹ..ஹ., இன்னும்  பல வருஷம் இருப்பீங்க.  தம்பி பாஸ்கர் வந்து பார்த்தானா?  அவன் சம்சாரம்?.. “ 

              “ டே.. டேய்,  யார் வந்தா உனக்கு என்ன?  என் கடைசிக்காலம் இந்த கட்டில்லன்னு முடிவு ஆயிடுச்சு.”

               கோபமாய்த் தான் அமர்ந்திருந்த கட்டிலைக் குத்தினார் ஜனா.

              “  இ..இ..இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை . பெரீய்ய ரோஷக்காரரு.. எங்க அப்பா. கோபக்காரர். “ வார்த்தையில்  இரவி குத்த,

               “ எ..எ.. என்ன சொன்னே? “  கோபமாய் ஜனா குரல் எழுப்பினார்.

               “  ஏன் சொல்லக் கூடாதா?  உங்களுக்குத்தான் மாசம் அரை லட்சம் பென்ஷன்.. அரசாங்க பென்ஷன் வருதே?  நான் தனியார் கம்பெனியில தானே வேலை செய்யறேன்.  எனக்கு கொஞ்சம்,  மாசாமாசம் கொடுத்தா என்ன? “  இரவியும் தன் குரலை உயர்த்த,

              “ நிறுத்துடா.  அப்பாவா?  நான் உனக்கு அப்பா இப்ப?  காசு தேவைப்படும் போது கண்ணுக்கு அப்பாவை தெரியற நான்.,  இந்த இல்லத்தில  என்னைய தள்ளிவிட்ட அன்னிக்கு எப்படித் தெரிஞ்சேன் ?  திமிர் பிடிச்சவன்,  கொழுப்புக்காரன்.. அப்படித்தானே . இப்போ மட்டும் எப்படி ?  உன்னைய மாதிரி,  உன் தம்பி பாஸ்கரும் போன வாரம் காசு கேட்டு வந்தான்.  விரட்டியடிச்சேன். “ வேகமாய்ப் பேசியதில் இலேசாய் மூச்சு இறைத்தது ஜனாவிற்கு .

               “  நீங்க திருந்தியிருப்பீங்கன்னு  நினச்சேன். ம்ஹூம். நீங்க மாறவே மாட்டீங்க. படுத்த படுக்கையா கிடந்தாலும், பாயில சுருட்டிப்போட்டாலும்   நீங்க மாறவே மாட்டீங்க.  “ என்ற இரவியை,  

               வேகமாய்.. கோபமாய் இடைமறித்த ஜனா, 

               “ போடா...வெளியில போடா.  உன்னைய பெத்ததுக்கு நான் வெட்கப்படறேன். இனிமே, உனக்கு  ஒரு பைசா கிடையாது. ஓடிப்போயிடு “ வேகமாய்ச் சேரை விட்டு எழுந்து,  சற்று தடுமாறி சுவரைப் பிடித்துக் கொண்டார் ஜனா.

              “  எங்களுக்கும் காலம் வரும்.  அப்ப நாங்க பேசிக்கிறோம் “ தான் அமர்ந்திருந்த சேரை எட்டி உதைத்து,  இரவி நடக்க முயல,

              “  காலம் வராதுடா.. போகும் . காசு,  காசு.. ஒரு பைசா கிடையாது. “ கையிலிருந்த ஊன்றுகோலை வீசி எறிய,

              அங்கே.. “பணமாயை” படம் காட்டிச் சென்றது இரவியின் உருவில்.

              சத்தம் கேட்டு,  ஹாலில் இருந்த சக நண்பர்கள் பதறி நெருங்கி வர, 

             “ ஐயா வராதீங்க. தயவு செய்து.. நா.. நான்,  கொஞ்ச நேரம் தனியா அழணும். “ கதறிய ஜனார்த்தனன் கதவு சாத்தி, தலையில்  அடித்தவாறு அழுதார்.

          “ ஐயோ.  இப்படி ஏமாந்திட்டேனே. முட்டாப் பிழைப்பு பிழைச்சிட்டேனே. நான் பெத்த பசங்க தானா இவங்க?  மல்லிகா..” என ,  தன் மனைவியை நினைத்து ஐந்து  நிமிடம் அழ, 

           அறைக்கதவு “டொக், டொக்”  என தட்டி அழைக்கப்பட்டது.

சற்று நிதானமான ஜனா , 

           “ யா..யாருங்க?” என வினவ,

           “ நா.. நான் மைதிலி.  முதல்ல,  கதவைத் திறங்க. “

          ஆறுதலுக்காக அறைக்கதவைத் திறந்தவரைப் பார்த்த மைதிலி,

          “  போங்க.  போய் அமைதியா இருங்க.  நீங்க சத்தமாப் பேசினது எல்லாம்  கேட்டது. அதான்.,  அப்பப்ப பையன் வர்ற விஷயம் தானே ? . பண விஷயம் தானே? வேற எதுக்கு? கா.. காசு! சே! “  மைதிலியும் நொந்து போய் சேரில் அமர்ந்தாள்.

           மேலும்,  பத்து நிமிடங்கள் மௌனமாய் கரைய ,

           “ மைதிலி,  ஏன் இப்படி நடந்துக்கிறாங்க? “  என ஜனா கேட்க,

           “  அதாங்க.. மாயை.  நீங்க படிச்ச.. அதே மாயைதான். “

           “ எனக்கு சரி.  ஆமா,  உங்க பையன் பொண்ணும்,  இந்த மாதிரி தொந்தரவு கொடுக்கிறாங்களா? “

           “இல்லை. எனக்கு அந்தப் பிரசினையில்லை. ஏன்னா,  இந்த கிழவிக் கிட்ட சல்லிக் காசு கிடையாது. அதனால, அவங்களுக்கு என் மூலமா பெரிய கனவு கிடையாது. ஹி..ஹி..ஹி “  மைதிலி வழக்கம்போல் சிரிக்க, 

             “ எப்படி உன்னால இப்படி  சிரிக்க முடியுது?  அதை விடு.  எனக்கு இந்த ‘மாயக் கண்ணன்’  ஓவியமா வேணும்னு உன்கிட்டே கேட்டேன்.  இதுவரை,  ஏன் வரைஞ்சு தரலை?  ஆனா ஒண்ணு. உன் கூட,  எனக்கு மட்டும் பழக்கம் இல்லேன்னா..  நான் எப்பவோ நடைபிணமா, இல்லையில்ல, படுத்த படுக்கையா,  என் பையன் சொன்ன மாதிரி போயிருப்பேன். “  என உணர்ச்சி வயப்பட ,

         “ இங்கே பாருங்க.  நம்ம வாழ்க்கையை,  நாம தான் வாழணும்.  வாழ்ற வயசுல,  நாம மகிழ்ச்சியா வாழத் தவறினால்,  அதற்கு அவங்கள குறை சொல்ல முடியாது.  இது அவங்க நிலை . அது.. அவங்களுக்கு சரி.  ஆனா,  கடமைத்  தவறினா.. காலம்  ‘கணக்கு’  சரி செய்யக் காத்துக்கிட்டிருக்கும். அது,  அவங்களுக்கு  பின்னாடி புரியும். ஆனா ஒண்ணு... அப்ப, நாம இருக்கமாட்டோம். ஒரு காலத்தில, இளமையில சூரியனா பிரகாசிச்ச பலர், இப்ப.. இங்கே பகல் நிலவாயிருக்கோம்.  இப்ப , நீங்க ஓய்வு எடுங்க . நாளை பார்க்கலாம் “  சொன்ன மைதிலி அறையை விட்டு வெளியேறினாள்.

            மறுநாள் எப்போதும் ஐந்து மணிக்கே ‘சுப்ரபாதம்’  பாட்டு போடும் ஜனா,

            ஆறு மணியாகியும் கதவை திறக்காமல் போக,

            பதட்டமாய்.. அறை வாசலில் அனைவரும் ஆஜர். மைதிலியும், தான் வரைந்த ஓவியச்சுருளுடன்.

            “ டொக்,டொக் “  கதவு தட்டப்பட,

            சற்று நீண்ட இடைவெளிக்குப்  கதவு திறந்தது.

            உள்ளே பக்தி பழமாய்... ஜனார்தனன்.

            “ ஏன்,  இன்னிக்கு லேட்?.”  மைதிலி முதல் ஆளாய் உள்ளே நுழைந்து கேட்க, 

            “அ.. அது,  இராத்திரி ஒரே மன உளைச்சல்.  படுக்க நேரமாயிடுச்சு.  அதான் கொஞ்சம் தாமதமாக எழுந்திட்டேன் . ஆமா, எல்லோரும் இங்கே ஏன்?  இது என்ன படம் ?  நான் கேட்ட.. ‘மாயக்கண்ணனா?’ “ ஆவலாய் ஜனா  மைதிலியின்  கையிலிருந்து பறித்துப் பிரித்துப் பார்க்க,

            ஓவியத்தில் மாயக்கண்ணன் ராதாவுடன் திருமணக்கோலத்தில். 

            அதிர்ச்சியும்,  ஆனந்தமுமாய் மைதிலியைப் பார்க்க..சற்றே வெட்கத்தில் அவள் தலையைக் குனிய,

            கூட இருந்த உதவியாளர் சோமு,  வேகமாய் ஜனார்தனன் கையிலிருந்த ஓவியத்தை பிடுங்கி,  அனைவருக்கும் காட்ட..

            ஜனார்த்தனன்  மைதிலி பெயர்கள்  மாயக்கண்ணன் - ராதா ஓவியத்தின் அடியில்.

            உற்சாகம் கொப்பளித்தது.. ‘பகல் நிலவு’ முதியோர் இல்லத்தில்.

            எந்த வயதில் தொடங்கினாலும் திருமண வாழ்க்கை சிறந்ததே என ஜனா - மைதிலி தம்பதிகள் உலகிற்கு உணர்த்தினர்.

            புதுமையாய்...புரட்சிகரமாய்

                                                    -0-0-0



Rate this content
Log in

Similar tamil story from Romance