மதுரை முரளி

Romance Classics Inspirational

5  

மதுரை முரளி

Romance Classics Inspirational

கனா காணும் காதல்

கனா காணும் காதல்

11 mins
472


                            “கனா காணும் காதல்”

 -  மதுரை முரளி

           தை மாதக்குளிர் தரையையும்,  தலையையும் குளிர்ச்சியாய்க் குளிப்பாட்டி கொண்டிருந்தது.

          ‘ஆகாஷ்’   அடுக்குமாடி குடியிருப்பின்  வாசல்பரப்பு  புல்வெளிகள் எல்லாம் பனியைக் கிரீடமாய்க் சூடியிருக்க,

          இருபதாவது மாடியில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்.

         ‘ இன்டக்சன்’  அடுப்பில் ‘இன்ஸ்டன்ட்’  காபி தயாரித்து சீனி கூடச் சேர்த்து சுவைத்துக் கொண்டிருந்தான்.

          இன்று,  அவனுக்குச் சொந்த ஊர் திருச்சி நோக்கிப் பயணம்.

          மனம் உற்சாகமாய் இருபதாவது மாடிக்கு மேலே பறக்க,  ‘விசில்’ அடித்து , அதனை மேலும் உயர்த்த முயன்று கொண்டிருந்தான்.

           மணி ஆறரை -  டிஜிட்டல் கடிகாரம் சிவப்பாய்க் காட்டி எச்சரிக்க,

           பாத்ரூமுக்குப் பறந்தவன்,  பத்தே நிமிடத்தில் பயணம் செய்ய தயாரானான்.

           “ லதாம்மா.. இனிய காலை வணக்கம் “ காப்பியை ராகமாய் பாடி  மனைவியிடம் கொடுக்க,

          “ என்ன டியர், இன்னிக்கு சனிக்கிழமை தானே ?அதுக்குள்ள ஏன்?” கண்களைக் கசக்கித் திரும்பிப் படுத்தவள்,

           மீண்டும் திரும்பி ,  “ அடடா,  நீங்க இன்னிக்கு  காலையில் ஊருக்குக் கிளம்பணுமே? “  பதட்டமாய்த் துள்ளி, 

          மெத்தையில் அமர்ந்தவளை, கையைப் பிடித்து அழுத்தினான் ஸ்ரீகாந்த்.

          “ டார்லிங்.. ஐயா ரெடி.  ஐந்து நிமிஷத்தில கிளம்பிடுவேன். திருச்சியில  என்னோட ரெண்டாவது மாமா பொண்ணு ஸ்ரீதேவியின் கல்யாணம்.  ஆனா...என்ன,  நீ வர மாட்டேன்னு சொல்லிட்டே”  வருத்தமாய் வார்த்தைகளை வெளியே ஸ்ரீகாந்த் கொட்ட,

           “ ப்ளீஸ், புரிஞ்சுக்கோங்க டியர், இப்பதான் நம்ம பையன் அபிக்கு  ரெண்டு வயசு  முடிஞ்சிருக்கு. திரும்ப அடுத்ததா ‘நியோகோவ்’  கொரோனா வைரஸ் கிளம்பியிருக்கிறதா பேச்சு. எதுக்கு தேவையில்லாம  ரிஸ்க் இந்த விஷயத்துல? அதுவும்,  இது உங்க வீட்டு சமாச்சாரம்.  நான் வந்து..”

        “ புரியுது.. உண்மைதான்.  இந்த சைனாக்காரன்,  எல்லா தயாரிப்பிலேயும் எப்பவுமே முன்னணியில் இருக்கான். “  சொன்ன ஸ்ரீகாந்த் ‘ஒரு’ கண்ணை  விநாடி நேரம்  மூடித் திறக்க, 

        “ இங்கே மட்டும் என்ன ? “  லதா வயிற்றை தொட்டுச் சிணுங்க,

      “ ஓ.. சரி, சரி.  ஜமாய்க்க வேண்டியதுதான் . ரொம்ப கவனம். நான்  திரும்பி வந்தததுக்கு  அப்புறம் டெஸ்ட்.  ஓகே”  குஷியாய் ‘ இச்’  ஒன்றை அவள் நெற்றியில் பதித்துக்  கிளம்பினான் ஸ்ரீகாந்த்.

      “ என்னங்க, கொஞ்சம் கவனமா.. மெதுவாப் போங்க”   லதாவின் கண்களில் இலேசாய் எட்டிப் பார்த்த கலவரத்தை,

      “ சீ! அசடு.  நூறுதான் ஐயாவோட வேக அளவு. “ ‘ கட்டை’ விரலை உயர்த்தியவன்,

      அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போர்ட்டிகோ அடைந்து , கதவை அடைத்து , காரை உசுப்பினான்.

      அரை மணி நேரத்தில் தாம்பரம் அடைந்து,  ‘டோல்’  கடந்து,  திருச்சிக்கு பயணமானான்.

      விநாடிகளில் நூறுக்கு மாறிய அந்த வெளிநாட்டுக்கார்,  தேசிய வழிச்சாலையில் மிதந்து, வழுக்கி ஓடியது. 

     அடுத்து  ஸ்டீரியோ இசையில், ‘யார் அழைப்பது? ‘ ஆலாபனை செய்த

ஸ்ரீராமை  மாற்றி ,

     பத்து ஆண்டுகள் பின்னால் பயணிக்கத் தொடங்கினான் ஸ்ரீகாந்த்.

     உற்சாகமாய்க் கூகுளில்  தேடி.. ‘தேவதையைக் கண்டேன்’  என அறிவித்து பாடலை ஓட விட்டவாறே,  தானும் பாடிப் பயணித்தான்.

     ஸ்ரீகாந்துக்கு இரண்டு மாமாக்கள்.  இருவருக்குமே பெண் வாரிசுகள் மட்டும்.  இவன் அம்மாவே ஒரே ஒரு பெண் வாரிசு தான்  தாத்தாவிற்கு.

     பெரிய மாமாவின் பெண் உஷா.

     ஸ்ரீகாந்த்,  உஷாவிற்கும் இடையே நான்கு வயது வித்தியாசமே.

     பெரிய மாமாவும் , அம்மாவும் அடுத்தடுத்த தெருவில்.

     தன் மகளுக்கென ஒரு தனி வீட்டையே கொடுத்துவிட்டார் தாத்தா.

     ஸ்ரீகாந்தும்,  உஷாவும் ஒரே பள்ளியில். 

     பள்ளிக்கூடம் போவதிலிருந்து,  பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் ஸ்ரீகாந்த் - உஷா உறவு வளர்ந்து,  வாசம் விடத் தொடங்கியது.

     இவனை ‘ ஸ்ரீ’ என உஷா அழைக்கும் போதெல்லாம்,  இவன் மனம் கிறங்கும்.

    “ஸ்ரீ.,  எனக்கு இந்த சமன்பாடு சரியா விளங்கலை. “  உஷா இவன் முதுகில்  அடிச்ச சமயம்,

       சற்று நெளிந்தான்  ஸ்ரீகாந்த்.

     “ இங்கே பாரு ‘உஷ்’”  தானும்  அவள்  பெயரைச்  சுருக்கி அழைத்தது நினைவில் வந்ததும்  சிரிப்பு வந்தது.

        “ உஷ்.,  நான் உனக்குச்  சொல்லித் தந்தா.. எனக்கு என்ன தருவே?” என வம்பிழுக்க,

       “ ஹ.,  முதுகில பலமா தருவேன் “  அவள் கையை ஓங்க, 

        பயந்த மாதிரி தான் நடித்த நாட்கள் நினைவில் வந்து போனது.

        அம்மா,  மாமாவிடம் அனுமதி பெற்று,  தான் மற்றும் உஷா மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரைத் தரிசிக்கச் சென்றது.. அதுவும்,  கீழே மாணிக்க விநாயகரில்  தொடங்கிய ‘படி’  ஓட்டம்,  பத்தே நிமிடத்தில் உச்சிப் பிள்ளையாரை அடைந்த வேகம்.. இப்போதும் நினைக்கையில் உள்ளுக்குள் ஒரே உதறல் தான்.

        கார் திண்டிவனம் தாண்டிப் பயணப்பட,

        சற்று சோம்பலாய் உணர்ந்த ஸ்ரீகாந்த்,  ப்ளூடூத் ஸ்பீக்கரில் மனைவி  லதாவை அழைத்தான்.

       “  என்னங்க,  உங்களுக்கு கூப்பிடலாம்னு இப்ப தான் நினைச்சேன்.  ஆமா,  எங்கே போயிட்டு இருக்கீங்க? “

        “ கொஞ்ச நேரத்தில்.. விழுப்புரம் “

        “ அதுக்குள்ளவா?  வேகம் எவ்வளவு?”

         “ அ..அது,  130 -140 தான் “ ஸ்ரீகாந்த் சொல்லி முடிக்கும் முன்,

        “  முதல்ல,  வண்டியை  நிறுத்துங்க.  பக்கத்திலே ஏதாவது ஒரு ஹோட்டலில வண்டியைப் போட்டுட்டு பேசுங்க.  இவ்வளவு வேகமா போகாதீங்க ன்னு சொன்னேன்ல்ல? “  மனைவி லதா கோபிக்க,

        “ இதோ,  பத்து நிமிஷத்தில விழுப்புரம். வண்டியை அங்கே நிறுத்திடறேன்  டியர். கவலைப்படாதே., கலவரப்படாதே “  மீண்டும் சிரிப்பை உதிர்த்து,  ஸ்டீரியோவில் பாடலுக்கு மாறினான்.

         தொடர்ந்து,  உதித் நாராயணன் உதிர்த்த தமிழ் உச்சரிப்பில்.. 

          ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’  மயங்கிப்போன தன்  காதல் நினைவுகள், அவனுக்குள் மலரும் நினைவுகளாக பூக்க, கதாநாயகன்-கதாநாயகி நிலையில் ஸ்ரீகாந்தும் உஷாவும்.

          பத்தாம் வகுப்பு படிக்கும்போது துளிர்த்த மீசையை,  பென்சிலால் தான் வரைந்தது மனக்கண்ணில் வந்து போனது.

          ஒரு முறை உஷா  தன் மீசையை,  சற்று பெரிதாய் வரைந்து விட, நொடியில் கட்டபொம்மனாய் மாறி, வீர வசனம் பேசி, வீடே பாராட்டிய நினைவு பசுமையாய் வந்து இவன் கண்ணை மறைத்தது.

         ‘சட்’ டென வண்டியின் வேகத்தைக் குறைத்து,  வண்டியை,  ‘ஆட்டோ’ மோடில் மாற்றி விட்டு,

         தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டான் ஸ்ரீகாந்த். 

        “ நினைவோ ஒரு பறவை”  இவன் அலைபேசியில் அழைப்பு ஒலிக்க,

புதிய அலைபேசி எண் அலைபேசி திரையில் .

         முகம் தெரியாத  ‘ யாரோ’  அழைக்க,

         மீண்டும் ப்ளூடூத்திற்கு மாறியவன்,

        “ ஹலோ.. யாரு? “  மறுமுனையில் பதில் ‘கலகல’த்தது. கலகலத்துப்  போனான் ஸ்ரீகாந்த்.  அது.. ஒரு  பெண் சிரிப்பு.

        “ யா.. யாரு வேணும் ? “  இம்முறை சற்று எரிச்சலாய் இவன்.

        மீண்டும் அதே ‘கலகல’ சிரிப்பு சத்தமாய் வண்டி முழுதும் எதிரொலிக்க,  வேகமாய் இடதுபுற ஒளிப்பானை ஒளிர விட்டு, வண்டியை ஆசுவாசப்படுத்தி நிறுத்தினான். 

         “ யா.. யாருங்க? “ 

         “ யாரு? உஷ்!  சத்தம் போடாதே.. ஸ்ரீ ” 

         “  ஓ..உஷா! “   உயிர் வந்து போனது  ஒரு நிமிடம் ஸ்ரீகாந்த்திற்கு. 

          உடல் ‘குப்’ பென வியர்த்துக் குளிர,

         “  உஷா,  இது என்ன புது எண்?..” வாசித்தான் வார்த்தைகளை வாயில்.

         “  எப்படி இருக்கே?  சும்மா புது எண்ல கூப்பிட்டேன்.  நீதான்,  என் அலைபேசி  எண்ண எடுக்க மாட்டீயே!” 

         “  இ..இல்லை  உஷா.  நீ எப்படி இருக்கே?”

         “  சுகம் தான்.  ஸ்ரீதேவி கல்யாணத்துக்கு வர்றே தானே? “

         “ விழுப்புரம் தாண்டிட்டேன்..உ..உஷா. “

         “ அவங்க வரலை இல்ல? “ மீண்டும் சிரித்தாள் உஷா.

         “  வீட்ல கொஞ்சம் உடம்பு சரியில்ல.  நீ எப்படியிருக்கே? “

         “ அதான்...நேர்ல வர்றியே?  வந்து பாரு.  நிறையப் பேசலாம் “ 

         புதிராய் அவள்  முடிக்க,

        “ ரொம்ப தடுமாற்றமாயிருக்கு எனக்கு .  நா..நான் உன்னை எதிர்பார்க்கலை “ 

        “ வண்டியைப் பார்த்து ஓட்டு.  பதட்டத்தில,   பாதை மாறிடாம”  சொன்ன உஷா,

        “ பை- பை ” எனச் சொல்ல,

        ‘ ஒரு வேளை இரண்டு அர்த்தத்தில சொன்னாளா?’ பின்தலையைத் தட்டிக் கொண்டான் ஸ்ரீகாந்த். 

         வண்டியையும்,  தன் பழைய நினைவுகளையும் சேர்த்து உசுப்பியவன்,

         உஷா பெரிய மனுஷியானதும் , அவளது ஆசை என்ன? ன்னு,  தான் கேட்டதற்கு,

        பதிலாய், ஒரு நிலைக் கண்ணாடியை காட்டினாள்.

       அதில் தான்.. முழுவதுமாய்.

       அப்போது அந்த நிமிஷத்தில் தான் கிறங்கிப் போனது ஞாபகமாய் இன்றும் கூட. 

       அடுத்து,  தான் சி.ஏ. இடைநிலை முடித்து ஆடிட்டர் பயிற்சி சென்னையில்  செய்த காலத்தில் அவளை விட்டுப்பிரிய நேரிட,

       இடையிடையே அவளோடு  தொடர்ந்த தொடர்புகள் எல்லாம் தொலைபேசி வழியே தான்.

        ஊருக்குப் போகும்போதெல்லாம்,  தன்னைக் காண ஒவ்வொரு வாய்ப்புக்காக அவள் காத்திருந்ததும் நினைவுக்கு வந்தது.

       ஊருக்கு வந்ததும் யார் முதலில்?, யார் வீட்டுக்கு?, எனத் தாங்கள் போட்டியிட்டது இப்போதும் முட்டி மோதியது மனதில். 

       பாவாடை தாவணியில் அவளைப் பார்த்த அந்தப் பொழுதில்

உஷாவின் வளர்ச்சி தனக்குள் கிளர்ச்சியாய் உணர்ந்தான் ஸ்ரீகாந்த்.

       ஒரு முறை அப்படி தான் ஊருக்குப் போன போது,  பக்கத்து தெரு பெருமாள் கோவிலுக்கு  கை கோர்த்துக்கொண்டு , உஷாவுடன்  தான் போனது நினைவில் வந்தது.

        “ என்ன உஷா, உனக்கு , மாமா ஸ்ரீகாந்த்தை ரொம்ப பிடிக்கும் போல. உங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப அருமை.  என் கண்ணே பட்டுடும்.  ஆத்துக்குப் போனதும்,  உங்க அம்மாவை சுத்திப் போடச் சொல்லு  “ அக்ரகாரத்து மாமி தள்ளி நின்று ‘கை’ தட்டி, சொடக்கிச் சொல்ல,

        வெட்கத்தில்  உருகிப் போனார்கள் இருவரும் .

        திருச்சியை  கார் நெருங்கி விட,  மனதைக் கட்டுப்படுத்தி ஓட்டி,  கால் மணி நேர பயணத்தில் கல்யாண மண்டபத்தை அடைந்தான் ஸ்ரீகாந்த் . 

        உள்ளே நுழைந்ததும் , சொந்தங்கள் எல்லாம் வாழ்த்தி வரவேற்க,  மனைவி வராத காரணத்தை பலரிடமும் பகிர்ந்தவாறே,  இவனுடைய தேடல், பார்வையெல்லாம் உஷாவை நினைத்தே .

       அங்குலம், அங்குலமாய் இருமுறை மண்டபத்தை அலசி ஆராய்ந்தும்,  அவள் கண்ணில் படவில்லை.

      ‘ சே!  இங்கே வந்தும் , அவ கண்ணுல படலையே!’  நொந்து போனவனாய் அவள் அழைத்த அதே எண்ணில் இவன் அழைக்க,

      ‘அது’ அணைக்கப் பட்டு இருந்தது.

      மெல்ல, தன்  நெருங்கிய உறவினரிடம் உஷாவைப் பற்றி வினவ,

      காலையிலிருந்து அவள் இங்குதான் இருந்தாள் எனக் கூறி, நெருக்கடியை மேலும்  கூட்டினார் ஸ்ரீகாந்திற்கு.

      மீண்டும் செல்போன் அழைப்பு .

     அவசரமாய் அலைபேசியை பையிலிருந்து  இருந்து எடுக்க, அலைபேசித் திரையில்  மனைவி லதா.

     “ என்னங்க,  இன்னுமா மண்டபம் போகலை? ஒரே மேளதாளமாயிருக்கு. போனதும் , என்கிட்டே ஏன் சொல்லலை? “  கோபமாய் மறுமுனையில் வெடிக்க,

     “ ம..மன்னிச்சுக்க. இ..இப்பதான் உள்ளே வந்தேன்.  ஒரே சத்தம். நான்   அப்புறமா பேசறேன். “  அவள் அழைப்பை   துரிதமாய் விடுவித்தவன்,

     மீண்டும் அலைபேசியில் உஷாவை அழைக்க முயல,

     புதிதாய் வந்த ஒரு குறுஞ்செய்தி கண்ணில் பட்டது.

     "என் வாட்ஸ் அப்பிற்கு வா, ஸ்ரீ....உஷ் " 

     வேகமாய் நடந்து,  மண்டபத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு 

ஒதுங்கியவன்,

    வாட்ஸ்அப் திறக்க , உஷாவின் பதிவு செய்யப்பட்ட குரல்.

   “  என்ன ஸ்ரீ, என்னைத் தேடினியா? “  அவள் குரல்.

   “ உஷா.,  தயவுசெய்து நேர்ல வா.  நானே உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன்.  எங்கேயிருக்க? “ தானும் குரல் பதிவு செய்து அனுப்பிவிட்டு,

    சுற்றிலும் பார்வையைப்  பதட்டமாய்ப் படரவிட்டான் ஸ்ரீகாந்த்.

    மீண்டும் அவள்.. குரல் வடிவில்.

    “  நீயும்,  நானும் எப்படி பழகினோம்னு உன் உள்ளம் , இந்த உலகம் சொல்லும். அப்படியிருந்தும், நான் ஏன் விலகினேன்னு உனக்கு தெரியுமா? “

     “ தெ.. தெரியல . இப்ப எனக்கு அவசியம்  தெரியணும்.  தயவு செய்து நேர்ல வா உஷா. “

     “  சொல்றேன்.  இவ்வளவு நாளுக்கப்புறம்,  நீ கேக்குறதால நான் சொல்றேன்.  நீ முழுநேர ஆடிட்டர் ஆனதும்,  வீட்டுக்கு வந்தப்ப.. உன் பேச்சில, எனக்கு நிறைய மாற்றம் தெரிந்தது.  அது, எனக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது.  ஒருமுறை, நம்ம கோவில் திருவிழாவில,                         ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? ’ பாட்டுக்கு நான் பரதம் ஆடினப்ப, நீ நேர்ல வர்றாம, வீட்டு மாடியிலிருந்து பார்த்தே. நம்ம ஊரே பாராட்டினப்போது, நீ இல்லை.  நான் ரொம்ப வேதனையோடு , காரணம் கேட்டதுக்கு, நாலு பேருக்கு முன்னாடி நீ ஆடறதில  எனக்கு உடன்பாடு இல்லைன்னு என் மனசை உடைச்சே. “

      நீண்ட  பேச்சில் அவள் சற்று இடைவெளிவிட,

     “ அ..அதை ஒரு காரணமா நான் எப்படி எடுக்க ?” 

    “ உனக்கு ‘ ஆடிட்டர்’ கனவு மாதிரி, எனக்கு பரதம்..கனவு, இலட்சியம்...உயிர்.  அதனால,  நம்ம வீட்டு விசேஷத்தில,  உன்னைய,

 முன்னால  வைச்சுக்கிட்டு , ஸ்ரீயை, கட்டிக்க ஆசையான்னு நம்ம சொந்தக்காரங்க கேட்டப்போ,  நான் உன்னைய நிராகரிச்சேன். “  உஷாவின் குரல் உடைந்து ஒலித்தது.

      “ என்னைக் கொல்லாத. என் மனசு இன்னும் சமாதானம் அடையல.  நேர்ல வா... பேசு “ இம்முறை ஸ்ரீகாந்தும்  உடைய,

       “ வரமாட்டேன். பரதம் தான்  என் உயிர்.  அது,  உனக்கு தெரிஞ்சிருந்தும், அதை துச்சமாப் பேசின. என்  இலட்சியத்தை உனக்குப் புரிய வைக்க,  உன்கூடப் பலமுறை பேசினேன்.. போராடினேன். ஆனா,  நீ.. என்னை,  பரதத்தை முழுசா தலை முழுகச் சொன்னே.  அதிலேயும்,  அதுக்கு நீ சொன்ன காரணம் என் மனசை ரொம்ப காயப்படுத்திடுச்சு. உன்னோட பேச்சு,  எனக்கு ஒரு உத்தரவா, அதையும் மீறி எச்சரிக்கையா வந்தது. “ சற்று பெருமூச்சு உஷாவிடமிருந்து வெளிவந்தது.

       “ ஒரு அடிமையா என்னால வாழ முடியாம,  உன்னை நிராகரிச்சேன். எனக்கு, உன்னோட காதல் தான் முதலும், முடிவும். எந்நாளும், நம்ம காதல் கனவா இருக்கட்டும்... நமக்கு.  இன்னிக்கு,  என் மனப்பாரத்தை உன்கிட்ட இறக்கி வைச்சிட்டேன்.   இனிமே நீயும்.. என்னை,  என் நினைவுகளை சுமக்காதே.  உன்னுடைய வருகையைப்  பார்த்திட்டுத்தான்,  உன்னை நேரில பார்க்க விரும்பாம, மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.  உனக்கும் , உன் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள். எனக்கு இனி,  பரதம்தான் ‘ புதுவசந்தம்’ - ன்னு முடிவு பண்ணிட்டேன். உன்  மனைவியையாவது நல்லபடியா நடத்து.  என்னைத் தேடாதே. பை-பை”

       அப்படியே முழங்காலிட்டு மயங்கியவன்,  தன்னுடைய தவறான குணத்தால்,  இழந்த காதலையும்,  கனத்த மனதையும் கரைக்கக் கதறி அழுதான் ஸ்ரீகாந்த்.

                                         o-o-o



Rate this content
Log in

Similar tamil story from Romance