மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

ஈரம்

ஈரம்

13 mins
297


                                              “ஈரம்”

                                                        --- மதுரை முரளி 

               சனிக்கிழமையின் பிறப்பை “ கௌசல்யா சுப்ரஜா ராம”  போற்றிப் பாடி வீடுகளில் தெய்வீக மணத்தைப் பரப்பிய நேரம் காலை ஆறு முப்பது.

               தென்மேற்கு பருவக்காற்று வானிலிருந்து மழையை தெளித்து,  வாசலைச் சன்னமாய்ச் சாரலாய் நனைக்க,

               வாசல் தெளிக்க வேலையில்லை என இல்லத்தரசிகள் மகிழ்ச்சியாய் வீட்டு வேலையை தொடங்கினர்.

               வாசல் போர்டிகோ பேப்பர் பாக்ஸில் இருந்த செய்தித்தாளை, இராமசாமி மழையில் நனைந்தும், நனையாமல் எடுத்து,

              வாசல் ஊஞ்சலில் அமர்ந்து செய்திதாளை பிரித்து, பார்த்தவரின் பார்வை பரபரவென பக்கங்களில் ஓட,

             அந்த பள்ளிக்கூட வைரவிழா சிறப்பு அழைப்பிதலில் போய் நின்றது.

             “திருச்சி”  புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் வைர விழா அழைப்பிதழ் அது.

              சிறப்பு விருந்தினர்கள் பட்டியலில் இராமசாமியின் பெயர்.. பெரிதாய்.

முன்னாள் பள்ளி மாணவர், தொழிலதிபர் உயர்திரு. இராமசாமி.     

              சிறப்புரை பட்டியலில் தனது பெயர் இரண்டாவதாக இருப்பதில் சற்று வருத்தம்தான் இராமசாமிக்கு.

              வெளியே மழையின் வேகம் சற்று கூட,  இராமசாமியின் வறண்ட பள்ளிக்கூட நினைவுகள் ஈரமானது.

              மீண்டும்,  செய்திதாளில் தங்கள் பள்ளியின் கட்டிட பின்னணியைப் பார்த்த இராமசாமி, ஒரு வித இதமான ஈரம் தளும்பிய விழிகளுடன் நினைவுகளில் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

              புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளிக்கூடம்.. பரந்திருந்த காய்கறி மார்க்கெட்டுக்கு இடையில்,  வாசலில் ஒரு சிறிய ஆர்ச் வடிவ இரும்பு போர்டுடன்.

               உள்ளே நுழைந்ததும்,  பெரிய விளையாட்டு மற்றும் பிரார்த்தனை மைதானம்.

               இராமசாமி தான் வாரத்தில் இரண்டு நாள் பிரார்த்தனை பாடலை மேடையில் பாடுவது வழக்கம்.

              இராமசாமி எப்போதும் வகுப்பில் முதல் நிலை தான். 

              தன் நண்பர்கள் முன்னிலையில்.. நடையில், பார்வையில் ஓர் கர்வம் அவனுக்கு. 

            இப்படி தான் கடந்த, கொண்டாடிய பள்ளி நாட்களின் நினைவுகள் கண்ணீராய்க் கண்ணை மறைக்க, கட்டியிருந்த வேட்டியில் கண்களை துடைத்துக் கொண்டார் இராமசாமி.

           “ என்னங்க,  காபி போட்டுட்டேன்.  உள்ள வர்றீங்களா?  இல்லை.?”  முற்றுப்பெறாத மனைவி மாலதியின் கேள்விக்கு,

           “  இல்லை மாலதி. நா.. நானே வந்து வாங்கிக்கிறேன். ஒரு சந்தோசமான செய்தி... இன்னைக்கு செய்தித்தாள்ல. “ உற்சாகமாய் ஆடிய ஊஞ்சலில் இருந்து குதித்து,  ஹாலைக்  கடந்து அடுப்படியில் மாலதியை அடைய,

            எதிரே வந்தவள்மீது  லேசாய் மோதி நின்றார்.

          “  அட, என்னங்க..அப்படி என்ன அவசரம்? “  ஏறக்குறைய சிணுங்கள் கலந்த சலிப்பில் மாலதி.

          “  ஓ.. ஓ.. சாரி.  நான் ஒரு உற்சாகத்தில..” மாலதியின் கையிலிருந்த காபியை வாங்கி,  டீபாயில் வைத்து மாலதியை மெல்ல அணைத்தார்.

          “  என்ன விசேஷம்?  ஐயா, ரொம்ப மகிழ்ச்சியா.. மழை மாதிரி குளிர்ச்சியா..”  அடுக்கினாள் மாலதி அடுக்கு மொழியில்.

           வேகமாய்ப் பள்ளி வைரவிழா அழைப்பிதழ் விளம்பரத்தைக் காட்டிய இராமசாமி,

          “மாலதி, எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?  நாளைக்கு மாலையில திருச்சியில நிகழ்ச்சி.  சமூகத்தில,  உயர் பதவியில் உள்ள பல பழைய மாணவர்கள் வர்றாங்க.  அவங்க முன்னணியில் மூணே மூணு பேர் சிறப்பு விருந்தினர்.  அதில ஐயா ஒரு ஆளு.  பள்ளி நிர்வாகத்தில் கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்க .”  மூச்சு விடாது பேசிய இராமசாமியை,

           “ என்னங்க உங்க பெயர் ரெண்டாவதா போட்டிருக்கு? “  இடைமறித்தாள் மாலதி.

          “ ஆமா..” ஒற்றை சொல்லை உதிர்த்த இராமசாமியின் குரலில் சற்று உற்சாகம் குறைந்தது. 

           “ எனக்கு தெரியுங்க. எல்லாத்திலேயும் முதல்நிலை  விரும்பறவங்க நீங்க . நிச்சயமா..இதுலேயும் எதிர்பார்ப்பீங்கன்னு. ஹா..ஹா..”  என மாலதி வாய்விட்டு சிரிக்க,

            “ மாலதி,  சரியா பிடிச்சிட்டியே! “  செல்லமாய் மனைவியின் கன்னத்தை தட்ட, 

         “   ஹா.. ஹா.. பிடிக்கலை. உங்கள நல்லா படிச்சியிருக்கேன் . நமக்கு திருமணம் ஆகி 10 வருஷம் முடியப் போகுது.  இப்பவும்  உங்கள புரியாம எப்படி? “  

          மனைவி மாலதியின் புத்திசாலித்தனத்தை மனம் அங்கீகரித்தாலும்,  வாய் விட்டு வர மறுத்தன வார்த்தைகள் இராமசாமியிடமிருந்து.

          மற்றவர்களையும்,  அவர்களது திறமை,  தகுதிகளையும் அங்கீகரிக்க மனம்.. பெரிய பரந்த மனம் வேண்டும். அது.. பெரும்பாலான மனிதர்கள் இடத்தில் இருப்பதில்லை.

         “ சரி,  சரி.  மாலதி நாளைக்கு காலையில கிளம்பி திருச்சி வரை போயிட்டு வந்திடறேன்.  நண்பர்கள் சிலரை போன்ல தொடர்பு கொள்ள வேண்டி இருக்கு.  ஓகே” 

          மீண்டும் ஊஞ்சலுக்கு அவர் திரும்ப,

          உற்சாகமாய்ப் போகும் கணவனைக் கண்டு,  உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மாலதி.

         மழை,  தனது வேகத்தைக்  கூட்டி,  பலத்தைக் காட்ட..

        சில்லென காற்று ஜன்னல் வலைகளையும் தாண்டி இராமசாமியின் முகத்தில் அறைய,

        உடம்பை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டார் இராமசாமி.

       தன்னுடன் தொடர்பில் உள்ள மூன்று நண்பர்களிடம் , விழா பற்றிய தகவல் தெரிவிக்க, வேகவேகமாய் இரவுநேர விருந்து.. 

ஹோட்டல்“ பெமினா” வில் உறுதிசெய்யப்பட்டது.

        இராமசாமி மீண்டும்,  அந்த விளம்பரத்தை உற்றுப் பார்த்தார்.

        மனம் மீண்டும் பழைய நினைவுகளில்.

        இராமசாமி தான் வகுப்புத் தலைவன்.  அதோடு எந்த நேரத்திலும் ஆசிரியரை அணுகக் கூடிய சக்தி இராமசாமிக்கு மட்டுமே இருந்தது.

       இதனால்,  வகுப்பில் அனைவருக்கும் இவன் மேல் ஒரு பய உணர்வு உண்டு.

      “  டேய்,  இராமசாமி கிட்ட கவனமா இருக்கணும்.  பய, எதையாவது வாத்திக்கிட்ட போட்டு விட்டுருவான். “  பலர் இப்படி பேசுவதைக் கேட்டு உள்ளுக்குள் பெருமிதம் கொள்வான் இராமசாமி.

        இராமசாமிக்கு போட்டியாளர் என்றால் மனோகரன் மட்டுமே.  அதுவும்,  தமிழ் பாடத்தில் மட்டும்.  பலமுறை இராமசாமிக்கு , இரண்டாம் இடம்தான் முதலாம் இடம் மனோகரன். 

         மனோகரனுக்கு தமிழ் வசப்பட்டிருந்தது.  பல விழாக்களில்,  கவிதை,  நாடகம்.. இப்படி. மனோகரன்தான்  கதாநாயகன். அதேசமயம்,  மற்ற பாடங்களில் அவன் சராசரி.

         இராமசாமிக்கு சுயசிந்தனை,  கற்பனைத் திறன் குறைவு.  ஆனால், சிறந்த ஒழுக்கம்,  பாடங்களைப் படிப்பதில் அபார ஈடுபாடு.  நேர்த்தி உண்டு.

        “ இராமசாமி, உன்னால மனோகரனை மேடைகளில் வீழ்த்த முடியுமா?”   அவன் தரப்பு நண்பன் நேரடியாக சவால்விட,

        அதை ஏற்றுக்கொள்ள முடியாது கூனிக்குறுகிப் போனான். 

        அதற்குப் பழி வாங்க  வழி தேடியவன், வகுப்பில் மனோகரன் அதிகம் பேசியதாய் கரும்பலகையில் குறித்து வைத்து,  வகுப்பாசிரியர் வந்ததும் அவனை மாட்டிவிட்டு  , மனம் மகிழ்ந்த சம்பவங்கள் இப்போதும் நினைவுக்கு வர,  சிரிப்பு வந்தது இராமசாமிக்கு.

       “ஆமா.,  இந்த மனோகரன்  என்ன ஆனான்?  எப்படியும் என்னைய மாதிரி பெரிய ஆளாக இருக்க முடியாது. “

        மனோகரனை தாழ்மைப்படுத்தி,  தனக்குத் தானே தலைவன் பட்டம் தந்து கொண்டார் இராமசாமி.

        மறுநாள், காலையில் மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு பயணப்பட்டார் இராமசாமி.

        பருவ மழை பலமாய் வழிநெடுகபயணத்தில் தொடர, 

        இராமசாமியின் மனம் பழையபடி பள்ளி நினைவுகளை நோக்கி பயணித்தது.

       நான்கு வழிச்சாலையில்  கண்ணில்பட்டதூரம் வரை வண்டிகள் இல்லை.

      வாழ்க்கை பயணம்.. வேகமாய், படுவேகமாய். அதன் பாதுகாப்பு நம் கையில்.

       தனது ஏழாம் வகுப்பு வாத்தியார் மாணிக்கம் நினைவில் வந்தார் இராமசாமிக்கு. 

      அதுவும்,  தேர்வு மதிப்பெண்  கொடுக்கும் நாளில்.. அவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுவிட்டு, தெம்பா அவர் மாணவர்களை  வெளுக்கும் வெளுப்பும்,  மாணவர்களின் அலறலும்., அந்தப் பள்ளிக்கூட கட்டிடமே அதிரும்.

       பொதுவாய் இராமசாமியின் விடைத்தாள் முதலில் சரிபார்க்கப்பட்டு,  அதன் அடிப்படையிலேயே மற்ற வினாத்தாள்கள் திருத்தப்படும். சில சமயம்,  இராமசாமியே விடைத்தாள் திருத்துவதும் உண்டு.  

       அச்சமயங்களில்,  தனக்கு நண்பர்களிடம்  கிடைத்த கும்பிடுகளை நினைத்தவுடன் சிரிப்பு வந்தது.  கூடவே,  சிலிர்ப்பும் வந்தது இராமசாமிக்கு.

       திருச்சி நகருக்கான இணைப்பு சாலை அறிவிப்பு பலகை பார்த்து வண்டியின் போக்கை மாற்றினார் இராமசாமி.

       புத்தூர் நாலுரோடு தாண்டியவரின் பார்வை ஏக்கமாய் முடிந்தது.  தான் பயின்ற காலத்தில் பார்த்த வீடுகள், கடைகள் காணாமல் போயிருந்தன.. கால ஓட்டத்தில். 

      பள்ளியின் வாசலில் கார் அடைய, நுழைவாயிலில் இருந்த விழா வழிகாட்டு குழுவினர்,  இராமசாமியை  வழிநடத்தி விழா மேடைக்கு கூட்டிச்செல்ல,  ஒரு பூங்கொத்து கைமாறியது.

      விழா மேடை சிறப்பாய் அலங்கரிக்கபட்டிருந்தது.  

      மைதானம் முழுவதும் சாமியான பந்தல். விழா தொடங்க,  பத்து நிமிஷம் பாக்கியிருந்தது.

      மேடையின் பின்னால் பெரிய பிளக்ஸ். அதில்,  பள்ளியின் வளர்ச்சி, வரலாறு போட்டோக்களாய்.

      மேடைக்கு முன்பிருந்த நாற்காலி வரிசையில் இருந்தவர்களின் முகம் எதுவும் பார்த்த, பழகின மாதிரி தெரியவில்லை இராமசாமிக்கு.

       விழா சரியாய் மாலை 5 மணிக்கு தொடங்கியது.

       மூன்று சிறப்பு விருந்தினர்களுக்கு இருக்கை,  கூடவே., பள்ளி நிர்வாகிகள் அமர மேலும் மூன்று இருக்கைகள். 

      முதலில்,  அழைக்கப்பட்ட முதல் சிறப்பு விருந்தினர் ஒரு போலீஸ் அதிகாரி.

       இராமசாமியிடம் மரியாதை நிமித்தம் வணக்கம் கூற,  இவரும் ஆமோதித்தார்.

       அடுத்த அரை மணி நேரத்திற்குப் பின், பேச அழைப்பு இராமசாமிக்கு. 

      மூன்றாம் சிறப்பு விருந்தினர் சினிமா இயக்குனர் சிங்காரம் விரைவில் வந்து விடுவார் என அறிவிப்பு இடையிடையே வர,  அப்போதெல்லாம் கைதட்டல் சத்தம் அதிகரித்தது.

      அடுத்து, நமது இரண்டாம் சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் இராமசாமி எனக் குறிப்பிட்டு,

      இவர் நமது பள்ளியின் முன்னாள் மாணவர் . வளர்ந்துவரும் பெரிய தொழிலதிபர்.

      இதோ இவரைப் பற்றி ஒரு சிறிய A.V.

      அறிவிப்பைத் தொடர்ந்து,  பெரிய ஸ்கிரீனை இரண்டு நிமிடம் இராமசாமி வந்து நிரப்ப,

        பல கைதட்டல்களின் பின்னணியில் மேடை ஏறிய இராமசாமி, பேச்சைத் தொடங்கி ஐந்து நிமிடத்திற்குள் குறுக்கிட்டது மீண்டும் இயக்குனர் சிங்காரம் வருகை பற்றிய அறிவிப்பு.

       “ நமது பள்ளியின் மற்றொரு முன்னாள் மாணவர், புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் சிங்காரம் வருகிறார்”  என அறிவிக்க,

       கைதட்டலில், அரங்கமே அதிர.. தொழிலதிபர் இராமசாமியின் பேச்சு நின்றுபோனது.

       கோபம் கொப்பளிக்க,  பேச்சை முடித்துக்கொள்ளும் மனநிலையில் திரும்ப எத்தனித்த தொழிலதிபர் இராமசாமியை,

       திரைப்பட இயக்குனர் சிங்காரம் வழிமறித்து வணக்கம் சொல்லி,  கூட்டத்தினரைப் பார்த்து  அமைதி காக்க வேண்டினார்.

       தொழிலதிபர் இராமசாமியை மைக்குக்கு அருகில் அழைத்து நிறுத்த,

 மீண்டும் ஒருமுறை கைதட்டல் அலை தொடங்கி அமைதி பெற்றது.

        “ இங்கு நான் எதற்காக அழைக்கப்பட்டேன்?  எனப் புரியவில்லை.  எல்லோரும் அவரவர் துறையில் உழைத்ததால் தான்,  இன்று உங்கள் முன்னால் மேடையேறி உள்ளோம்.  திரைப்பட இயக்குனரின் வருகை உங்களுக்கு ஒரு திருப்புமுனை என்றால்  இவ்விழாவிற்கு அவர் மட்டுமே போதும். “  காட்டமாய்த் தொடங்கிய இராமசாமி,

        தொடர்ந்து, 

       “ நம்மில் பலருக்கும் என்ன வேண்டும் என்பதே தெரியாது.  அடுத்தவர் செய்வதைப் பார்த்து நாமும் செய்வோம்.  அடுத்தவர் வாங்கியதையே, நாமும் விரும்பி வாங்க நினைப்போம்.  உங்களுக்கு வாழ்க்கையில் என்ன தேவை,  விருப்பம் என்பதை உணர்ந்து தொடங்குங்கள் வாழ்க்கையை.  சுயமாய்,  சிந்தித்து செயல்படுங்கள்.  நாம் ஒரு வேலையில் சேர்வதை விட,  நாலு பேர் நம் வேலையில் சேருவது நமக்குப் பெருமை. “

      தொடர்ந்த கைதட்டலுக்கு இடையே,

     “  திரைத்துறை நண்பர் மத்தியில், உங்களிடம்  என் பேச்சு பயனளிக்காது.  இனியாவது, எல்லோரும் நிகழ்ச்சி நிரல் நேரத்தை கடைபிடித்து வருவது உகந்தது”  பேசிய இராமசாமி,

       இயக்குனர் சிங்காரத்தை திரும்பிப்பார்த்துவிட்டு தன் பேச்சை முடிக்க,

      அடுத்த அழைப்பு... இயக்குனருக்கு.

      மீண்டும் பலத்த கைதட்டலுக்கிடையே மத்தியில் பேச்சை தொடங்கினார் இயக்குனர் சிங்காரம்.

    “  அனைவருக்கும் வணக்கம்.  மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு என் சிறப்பு  வணக்கம்.வரும் வழியில், ரசிகர்களின் அன்பு அழைப்பு காரணமாய் எனது வருகை  காலதாமதமாகிவிட்டது.மிகவும் வருந்துகிறேன்.  பள்ளி நிர்வாகம் என்னுடைய பேச்சிற்கு முன் , என்னைப் பற்றி A.V . போட..  தகவல்கள் கேட்க நான் மறுத்து விட்டேன்.  காரணம் ., என்னைப் பொருத்தமட்டில்,  எனக்கான தனிச்சிறப்பு எதுவும் கிடையாது.  நான் சாதாரணமானவன். உங்களோடு சரிசமமானவான். “ 

      மீண்டும் கைதட்டல் வர,  தொழிலதிபர் இராமசாமி முகம் சுளித்தார்.

     “  எனக்குப் பேச பத்துநிமிடம் போதும்.  மாணவச் செல்வங்களே.,  நான் தினந்தினம் எனக்கு நினைவு படுத்தும் பொன்மொழி உங்களுக்காக கூறுகிறேன். 

                               வரலாற்றில்...

                               எல்லோருக்கும்

                               பக்கங்கள் உண்டு.

                              அதை நிரப்புவதும்

                              காலியாக வைப்பதும்

                              அவரவர் கையில்.

                              நினைவில் கொள்ளுங்கள்.  நீங்கள் நினைத்தால் மட்டுமே  இருப்பீர்கள் வரலாறாய்.. வரலாற்றில். “

       “  அருமை, அருமை.  பாராட்டுக்கள்”  பள்ளி முதல்வர் மைக் முன்பு வந்து பாராட்டிக் கைதட்ட,

        கைத்தட்ட  மனமின்றி,  கைதட்டினார் இராமசாமி.

      “  ஆசைப்படு.. பெரிதாய் . கூடவே, முயற்சி மிகப் பெரிதாய் வேண்டும்.  அதனிலும் , மன உறுதி  மிக, மிகப் பெரிதாய் வேண்டும் .

அதற்கான ஒரு தன்னம்பிக்கை கவிதை.

                                          “அலை”

                                        கடல்..அலை..

                                      தொலைத்ததைத்

                                      தேடும்..ஓர் பார்வை.

                                      தடுத்தேன் தற்கொலையை.

                                      அலைகள் மோதி..

                                  ஓய்வதில்லை கரையில்!

                                  போராடு.. வெற்றிக்கனி

                                      உறுதி...உண்மை.

           இது ஒரு “ க்ளிக்” புதுக்கவிதை. ஆசிரியர் மதுரை முரளிக்கு நன்றி.     

           மாணவர்களே., உங்களுடைய நோக்கம் நல்லதாக இருக்கட்டும் . அதனை இன்றே தீர்மானித்து, தேடலை தொடங்குகள்.. இன்றே . ” என்று சொல்லி இடைவெளி விட்ட சிங்காரம்,

       தொழிலதிபர் இராமசாமியைப் பார்த்து கைகூப்பி வணங்க,

       சற்றே சங்கடத்துடன் எழுந்து வணங்கினார் இராமசாமி.

       “ இராமசாமி ஐயா.. நல்ல படிப்பாளி. பெரிய தொழிலதிபர். கடுமையான உழைப்பாளி . அவருடன்.. இந்த மேடையில் சரிசமமாய் நான். அவருடைய A.V.யில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார்.  அவர் படித்து முடித்ததும் ,வேலை தொடர்பான தேடலில்,  தான்  ஒரு பைக் விபத்தில் சிக்கி,  15 நாட்கள் நினைவு இழந்த நிலையில், இருந்ததைப்  பகிர்ந்துகொண்டார்.  அதோடு,  அச்சமயம், முகம் தெரியாத ஒருவர் அவரைக்  காப்பாற்றி, இரத்தம்  தந்து மருத்துவமனையில் நினைவு திரும்பும் வரை உடன்  இருந்து கவனித்ததை கண் கலங்கக் கூறினார்.  அவருக்கு  தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும், அவரை என்னால் அறியமுடியவில்லை என்றும்,  தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். “  பேசிய சிங்காரம் மீண்டும் இடைவெளி விட்டு சஸ்பென்ஸ் தர,

         சற்று குழப்பம் கலந்த ஆச்சரியத்துடன் இயக்குனரை திரும்பி பார்த்தார் இராமசாமி.

         மனம் சற்று படபடப்பாய்.. இராமசாமிக்கு.

        “  நான் சொல்வதை தயவு செய்து யாரும் தவறாக எடுக்க வேண்டாம் இது தற்பெருமை அல்ல . அவர் பார்க்க விரும்பிய மனிதன் நான். இந்த  சிங்காரம்”  முடிக்கும் முன் சரேலென எழுந்த இராமசாமி,

        ஓடிப்போய் குனிந்து,  சிங்காரம் காலைத் தொட முயல,

        அரங்கமே அதிர்ச்சியாகி அமைதியானது சில நிமிடங்கள்.

        இராமசாமியின் கண்கள் குளமாய்.

        சிங்காரம் குனிந்து,  இராமசாமியை இழுத்து அணைக்க,

        ஒரு ‘சென்டிமென்ட்’ காட்சி..  நிஜ சினிமாவாய்...மேடையில் பலருக்கும் கண்முன்னே விரிந்தது. 

        மைக்கை வாங்கிய இராமசாமி,

        “ நா.. நான், இராமசாமி  இந்த நிலைக்கு இப்படி உயர்ந்து உங்க முன்னாடி உயிரோடு நிற்க.. சிங்காரம் சார் தான் காரணம்.  உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன்”  என்று இரு கையெடுத்துக் கும்பிட,

        அவசரமாய் அதை தடுத்த சிங்காரம், 

        “ மானவர்களே, உங்களில்  பல பேர் “ கர்ணதானம்” பற்றி  கேள்விப்பட்டு இருக்கமாட்டீங்க. மகாபாரத்தில,  கர்ணன் ஒரு விசேஷமான பாத்திரம். அவர் ஒரு தடவை எண்ணெய்க் குளியலுக்கு தயாரான சமயத்தில, தானம் கேட்டு ஒருத்தர் வந்தார்.  உடனே கர்ணன் தன் இடப்பக்கம் இருந்த பொற்காசுகளை இடதுகையால் அப்படியே அள்ளிக் கொடுத்திட்டாரு. பக்கித்தில இருந்த வேலையாள், அரசரே, ‘ இடது கையினாலே தானம் செய்யலாமா?’ - ன்னு கேட்டப்ப, மனித மனம் வினாடிக்கும் குறைவான நேரத்தில மாறிடும். நான் பொற்காசுகளை கை மாற்றினா, மனசு உடனே மாறிட  வாய்ப்பிருக்கு. அவருடைய பதில் அவருடைய உயர்ந்த கொடையைக் குறிக்குது. நீங்களும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் , மத்தவங்களுக்கு உதவி பண்ணுங்க. உங்க எல்லோருக்கும் , இவ்வளவு நாளா என் நண்பர் இராமசாமிக்கிட்ட

நான் செய்த உதவியை  ஏன் சொல்லலை? ன்னு கேள்வி மனசில எழும்.” மேடையிலிருந்த கண்ணாடி டம்ளலிருந்து தண்ணீரை ஒரு மடக்கு விழுங்கியவர்,

        தொடர்ந்தார்.

        “ நாம மற்றவங்களுக்கு செய்த உதவியை , நாம உடனே மறந்திடணும். அவங்க மறந்தாலும்..”  சிரிப்புடன் மாணவர்களைப் பார்த்து கை காட்ட, 

மீண்டும் கைதட்டல்.

        “ இறுதியா  ஒரு முக்கியமான விஷயம்.  நான் ரொம்ப ஒழுக்கமா,  நல்ல உழைப்பாளியா இருக்கறதுனால தான்,  மக்கள் ரசிக்கிற இயக்குனராக இருக்கேன்.உங்க முன்னாடி நிற்கறேன்.  அதுக்கு நம்ம இராமசாமி ஐயா தான்  முக்கியக் காரணம். “  என இராமசாமியைக்  காட்ட,

         “ எ.. எப்படி?  என்ன சொல்ல வர்றீங்க? “  என இராமசாமி உள்பட அரங்கமே இருக்கையின் நுனிக்கு நகர்ந்தது.

         “  இந்த இராமசாமி தான் எனக்கு ரோல்மாடல்.  ஆமா,  இவன் என் வகுப்புத் தோழன்.  என் நிஜப் பெயர் மனோகரன். “  சொன்ன சிங்காரம் ,  தன்னுடைய வகுப்பு நினைவுகளை,  இராமசாமியைப்  பற்றிய உயர் மதிப்பீட்டை மேடையில்  பகிர,

           தாவி கட்டி அணைத்துக்கொண்டார் இராமசாமி.

          “ பள்ளி நிர்வாகத்திற்கு என் சிறப்பு நன்றி.  என் தொடர்பான விஷயங்களை ரகசியமாய் காத்து, தந்து உதவியமைக்கு மிக்க நன்றி. குறிப்பாய் நண்பர் இராமசாமியின் A.V. தகவல்களை முன்னரே என்கிட்ட பகிர்ந்ததுக்கு.  வணக்கம் “ சொல்லிவிட்டு,

         இராமசாமியின் பக்கம் திரும்பிய சிங்காரம்,

        மறுபடியும் கட்டியணைத்து, 

        “ நம்முடைய நட்பின் ஆழம்.. ஈரம் , இன்னும் காயலை. காரணம்,  நம்முடைய ஈரநெஞ்சம். “  முத்தாய்ப்பாய் முடித்து,

         உறைந்து போயிருந்த நண்பன் இராமசாமியை லேசாய்த் தட்டி உயிர்ப்பித்தார் இயக்குனர் சிங்காரம்.

        ‘ஓ’ எனப் பேரிரைச்சைலுடன் கொட்டிய மழை, சாமியான பந்தலையும் தாண்டி,  அனைவைரையும் முழுதாய் நனைக்க, 

         அங்கே உடலும், உள்ளமும் ஈரமானது.

                                          -@-@-@



Rate this content
Log in

Similar tamil story from Classics