பெஸ்ட் டீச்சர்
பெஸ்ட் டீச்சர்


கபிலனும் விமலனும் நெருங்கிய தோழர்கள். ஒருநாள் இருவரும் முயல் ஆமை கதையை விவாதித்தவாறு நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் வயதான பெரியவர் தம்பிகளா! எனக்கு கண்தெரியாது. என்னைத்தூக்கி அக்கறையில் விடுகிறீர்களா எனக் கேட்டான்.
நாங்கள் பளு தூக்கும் பயிற்சிக்கும்,அம்புவிடும் பயிற்சிக்கும் இன்றுதான் முதன்முதலாகச் சென்று கொண்டிருக்கிறோம். எங்களைப்போய் தூக்கச் சொல்கிறீர்களே ஐயா!….
சரிப்பா! நீங்கள் சென்று வாருங்கள்……..
கலைகள் கற்றுத்தரும் வசந்த கலைக்கூடத்திற்குச் சென்று வெகுநேரம் ஆகியும் குரு வரவில்லை.
என்னடா! வம்பா போச்சு……….
அந்த காலத்துல கடல் வழி விடவில்லை என்று அம்பால் கடலை வற்றச் செய்தார்கள். சர அம்புகளைக் கோர்த்து போரிட்டார்கள் என இதிகாசம் சொல்கிறதே என போர்க்கலை கற்றுக்கொள்ள இவரிடம் வந்தால் இவர் இன்னமும் வரவில்லையே!
சற்று வயதானவராம்…நன்றாக அர்ச்சுனன் வில் பயிற்சி பெற்றுக்கொண்டதைப்போல கற்றுத் தருவார் எனச் சொன்னார்கள். அதை நம்பித்தான் வந்தேன்.
வாசலில் எவ்வளவுநேரம்தான் நிற்பது ..என அலுத்துக்கொண்டான் கபிலன்.
தெருவெங்கும் ஒற்றர்போல நடக்கும் செய்தியெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்கள்.. அவர்களுக்கு ஒத்துவராதவர்களை அசிங்கமான செய்திகள் பரப்பி துன்பப்படுத்துகிறார்கள் என கேள்விப்பட்டேன். அதுபோல நம்ம வீட்டிலும் யாராவது செய்தால் ஒரே அடியில் எழுந்திருக்கமுடியாதபடி செய்யவேண்டும் என நினைத்துதான் வந்தேன்.
வாசலில் செருப்பு சத்தம் கேட்க தூக்கிச் செல்லும்படி சொன்ன பெரியவரை ஒரு பையன் அழகாக உள்ளே நாற்காலியில் அமர வைத்தான்.
ஐயா! நீங்கள்தான் குரு என்பது தெரியாது. மன்னித்துவிடுங்கள்.
முதலில் வயதானவர்களுக்கு உதவும் மனப்போக்கு இருந்தால் மட்டுமே கற்ற கலைகள் கைகொடுக்கும். இறைவனும் உங்கள் பக்கம் இருப்பான்.உங்களுக்கு எனது கலைகள் கற்றுத் தருவதை இறைவன் விரும்பவில்லை. சென்று வாருங்கள். எவனொருவன் தனது சொந்தத் தேவைகளுக்காக கலைகள் கற்றுக்கொள்ள நினைக்கிறானோ அவனது கலை அவனுக்கு இறுதிவரை வராது.
இவர் பெரிய இவரு…….வாடா போகலாம்..கொஞ்சம் விட்டால் பெரிய மகாத்மாமாதிரி பேசுவார்… மனதில் பெரிய துரோணர்னு நினைப்பு…பணம் வாங்காமலா சொல்லித்தர்றாரு……இது 22 ஆம் நூற்றாண்டு என்பதை மறந்துட்டு கிழவர் பினாத்துறாரு………
எங்க அம்மாகிட்டே சொன்னால் இவரைவிட பெஸ்ட் டீச்சர் பார்த்துத் தருவாங்கடா..என சொல்லியபடி கபிலன் விமலனின் கையைப் பிடித்தபடி வெளியேறினான்.