Dr.PadminiPhD Kumar

Classics

4  

Dr.PadminiPhD Kumar

Classics

பாட்டி வரப்போறாங்க

பாட்டி வரப்போறாங்க

4 mins
620



       ஆம்; மாதவனின் அம்மாவிற்கு 70 வயது. இனியும் அம்மாவை தனியாக கிராமத்தில் வாழ விடுவதில் நியாயமில்லை என சொல்லி கிராமத்தார்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி சென்னை தலைநகரில் வாழும் மாதவனை வந்து அழைத்துப் போகச் சொல்லியதன் காரணமாகத் தன் கடைசி நாட்களை தன் மகன் மருமகள் பேரன் பேத்திகளுடன் வாழ 70 வயதான காமாட்சி பாட்டி வரப்போறாங்க…. சென்னைக்கு.


மாதவனும் அவன் மனைவி மல்லிகாவும் நன்கு படித்த பண்பாளர்கள்.மாதவன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். சென்னையில் உள்ள பிரபலமான பெரிய தொழிற்சாலையில் வேலை; கைநிறைய சம்பளம்; ..வீடு கார் என வசதியாக வாழ்கின்றான்.மல்லிகாவும் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுவதால் உயர் நடுத்தர குடும்பமாகப் பணப்பிரச்சனை இன்றி வாழ்க்கை ஓடுகின்றது. இதனால் பாட்டி வருவதால் பணப் பிரச்சினை ஏற்படப் போவதில்லை. ஆனால்…


காமாட்சி பாட்டி 70 வயது வரை கிராமத்திலேயே வாழ்ந்து விட்டாள். போன வருடம்தான் தாத்தா தனது 80 வயதில் காலமானார். அதுவரை தம்பதிகள் இருவரும் ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை தான் வாழ்ந்தார்கள். கிராமத்தில் டிவி கிடையாது; வீட்டில் பாத்ரூம் வசதியும் கிடையாது.கிராமத்தை ஒட்டி மணிமுத்தாறு ஓடியதால் காலை கடன்களை முடித்து குளித்து வர கிராமத்தினர் அனைவரும் ஆற்றங்கரை பக்கம் போவது வழக்கம்.அமைதியான சூழலை கொண்ட பசுமையான கிராமம் அது.


அதிகாலையிலேயே எழுந்து வயல் வேலைகள் பார்ப்பது, மதியம் வீட்டில் உணவு உண்ட பின் சிறிது நேரம் ஓய்வெடுப்பது, மாலையில் கோவிலுக்குப் போவது,மற்ற உறவினர்கள் அக்கம் பக்கத்தார் அனைவரையும் கண்டு அளவளாவி இரவில் ஊர் அடங்கும் நேரத்தில் அயர்ந்து தூங்குவது என தம்பதியர் இருவருக்கும் வாழ்க்கைச் சக்கரம் அமைதியாக கிராமத்து இயல்போடு ஒன்றி ஓடியது. இப்போது மாடல் மயமான நகர வாழ்க்கைக்கு பாட்டியைத் தயார் செய்ய வேண்டுமே!


உயர் நடுத்தர குடும்பத்தினர்கள் வாழும் ஆடம்பர மாடிக் குடியிருப்பு பகுதியான ‘டைமண்ட் டவர்' எனப்படும் பல அடுக்கு மாடி குடியிருப்பில் தான் மாதவன் குடும்பமும் வாழ்கின்றது. பல அடுக்கு மாடி குடியிருப்பானாலும் வீடு விஸ்தாரமாக மாடலாக இருக்கும். மூன்று படுக்கையறைகள் கொண்டது ; மகனுக்கும் மருமகளுக்கும் ஒரு அறை; பேரன் பேத்தி படிக்க படுக்க என்று அவர்களுக்கென ஒரு அறை; விருந்தினர் யாரும் வந்தால் தங்க ஒரு அறை என ஒதுக்கி வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.


பாட்டி வருவதால் விருந்தினர் அறையை சுத்தம் செய்து பாட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறையின் நடுவில் மரக்கட்டில், அதன்மேல் மெத்தென்ற மிருதுவான பருத்தி படுக்கையும் தலையணையும்.கட்டிலுக்குப் பக்கத்தில் அறையின் ஒரு மூலையில் ஒரு ஸ்டூல்; அதன் மேல் தண்ணீர் குடுவை, டம்ளர், பாட்டிக்கு தேவையான மருந்து தைல பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.


 தினமும் காலையில் ஒன்பது மணிக்குள் மாதவன், மருமகள் மல்லிகா, பேரன் கண்ணன், பேத்தி பவானி நால்வரும் தத்தம் கடமைகளுக்காக வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுப் போய் விடுவார்கள். மாலை 4 மணிக்கு மேல்தான் ஒவ்வொருவராக வீட்டிற்குள் வர ஆரம்பிப்பார்கள்.எனவே காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை தனிமைதான் பாட்டிக்குத் துணை.

“பாட்டிக்குத் தனியா போர் அடிக்குமே…. இல்ல…”என ப் பவானி கேட்க, உடனே பேரன் கண்ணன் பெற்றோரிடம், “பாட்டிக்கென ஒரு டிவி வாங்கலாமே!” என யோசனை சொல்ல, பாட்டி அறையில் ஒரு டிவியும் டிவியை வைக்க ஒரு ஸ்டாண்டும் வாங்கி வைக்கப்பட்டன.


பாட்டி சென்னைக்கு வந்தாயிற்று. அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை அண்ணாந்து பார்த்து வியந்து போனாள். மகனின் வீடு நாலாம் மாடியில் இருப்பதாக சொன்னதும்,” எப்படிப்பா ஏறி ஏறி இறங்குவது?” எனக்கேட்க பேரன் உடனே, “கவலைப்படாதே பாட்டி லிஃப்ட் இருக்கு.” என சொன்னதும் பாட்டியின் வியப்பு மேலும் அதிகமாயிற்று. பேராண்டி லிஃப்டில் எப்படி ஏற வேண்டும் என்பதை விவரித்துக் கொண்டு பாட்டியை வீட்டிற்கு அழைத்து வந்தான்.


வீட்டிற்குள் நுழைந்ததும் மருமகள் பேத்தி இருவரும் அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். காமாட்சிக்கு பெருமையாக இருந்தது மருமகள் நகரத்தில் இருந்தாலும் நம் பாரம்பரியம் நடைமுறைகளை மறக்காமல் கடைப்பிடிப்பதைப் பார்த்து. மருமகள் மாமியாரை அவரது அறையில் தங்க ஏற்பாடு செய்து பாத்ரூமில் இருக்கும் வெஸ்டர்ன் டாய்லெட்டில் விரலால் அழுத்தி ஃப்ளஷ் செய்வது வரை சொல்லிக் கொடுத்து அக்கறையுடன் கவனித்து விட்டு சமையல் அறைக்குள் சென்றாள். பேராண்டி பாட்டியை கட்டிலில் உட்கார சொல்லி டீவியை ஆன் செய்து ரிமோட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என விளக்க ஆரம்பித்தான்.


கிராமத்தில் தன் வீட்டு ஜன்னல் வழியாக வெளி உலகை பார்ப்பது போல் இங்கே டிவி எனும் சதுரப் பெட்டி வழியாக நிகழ்வுகளைப் பார்க்கும்போது பாட்டிக்கு வியப்பாகவே இருந்தது. ரிமோட் பட்டன்களை மாறி மாறி அமுக்கி ஒவ்வொரு சேனலாக காட்டிக்கொண்டு விவரித்தான் பேரன். அவன் விவரிப்பது சரிவர புரியாவிட்டாலும் புரிந்து கொள்ள முயற்சி எடுக்க ஆரம்பித்தாள் காமாட்சி பாட்டி.


ஒரு வழியாக ஒரு மாதம் கழிந்தது. பாட்டிக்கும் மகன் வீடு வாசம் பழகிப் போனது. டீவியை ஆன் செய்வதற்கும் சேனல் மாற்றி பார்ப்பதற்கும் காமாட்சி பாட்டி கற்றுக் கொண்டாள். பொதுவாக டிவியை ஆன் செய்தால்” டமால்… டுமீல்” என்ற வெடிச்சத்தம் நிறைந்த சண்டைக்காட்சிகளும், அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் ஆடும் நடனக் காட்சிகளும், ஹீரோ - ஹீரோயின் சேர்ந்து டூயட் பாடும் பாடல் காட்சிகளும்தான் ஓடும். இவையெல்லாம் பாட்டிக்கு சற்றும் பிடிக்கவில்லை. மருமகளிடம் இதைப்பற்றி சொல்லியதும் மருமகள் மல்லிகா தன் பக்கத்து வீட்டு தோழியிடம் இது பற்றி பேசியபோது அவர் இந்து மத சம்பந்தமான சொற்பொழிவுகள் போடப்படும் சேனல் பற்றிய தகவலைத் தெரிவித்தார்.


பாட்டிக்கு இப்போதெல்லாம் இந்து மதம் தொடர்பான பக்தி சேனல் மிகவும் பிடித்துப் போயிற்று. அதில் வரும் பக்தி பாடல்கள் கேட்டு மிகவும் உருகிப் போவாள். ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவுகளை நேரம் தவறாமல் கேட்க பழகிக் கொண்டார். இந்நிலையில் ஒருநாள் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதே நிகழ்ச்சி தடைப்பட்டு விட்டது. இதனால் “அவருக்கு என்ன ஆயிற்று? பாதியிலேயே பேச்சை நிறுத்தி காணாமல் போய் விட்டாரே… ஏன்?”என்று மிகவும் கவலைப்பட்டு வீட்டில் எல்லோரிடமும் புலம்ப ஆரம்பித்தாள்.


வீட்டில் சமையல்காரி முதற்கொண்டு ப்ரோக்ராம் முடிந்த விபரத்தை விளக்கும்படி ஆயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக பாட்டிக்கு டிவி நிகழ்ச்சிகளின் விபரம் புரிய ஆரம்பித்தது. இப்போது அவள் மனதில் அமைதியுடன் டிவி பார்க்கப் பழகிக் கொண்டாள். இந்நிலையில் நகரமெங்கும் கொரோனா பரவ ஆரம்பித்தது. அரசாங்க ஆணையாக ஊரடங்கு வெளியானதும் ஊர் முழுவதும் அல்லோலகல்லோலப் பட்டது. பேரன் பரபரப்பாக பாட்டியிடம் வந்து கொரோனா, ஊரடங்கு உத்தரவு பற்றி மிகவும் படபடப்புடன் சொன்னான்.அவன் பள்ளிக்கு போக முடியவில்லை.


பவானி, மல்லிகா, மாதவன் அனைவரும் வீட்டிலேயே இருந்தனர். பாட்டி இதைப் பற்றி கேள்விப்பட்டதும் நிச்சயமாக மிகவும் பதட்டப்பட்டு கவலைப் படுவார் என்று கண்ணன் எண்ணினான். ஆனால் பாட்டி மிக அமைதியாக இருந்தாள். என்றும் போல் தனக்கு பிடித்த சேனல்களை டிவியில் பார்த்துக் கொண்டு, உலக நன்மையை எண்ணி தன் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டு அமைதியாக இருப்பதை அனைவரும் வியப்போடு பார்த்தனர்.


அவர்களுக்குத் தெரியாது கிராமத்தில் கிராம மக்கள் அனைவரும் மகாமாரி போன்ற நோய் பரவும் போது ஒருங்கிணைந்து நோய் தாக்கியவர்களைக் காக்கவும், வருமுன் காப்போம் என்று மற்றவர்களை நோய் தாக்காமல் காக்கவும் பழகிக்கொண்டு வாழ்ந்தார்கள் என்பது.நகரத்தார்களுக்கு புரியாத புதிராகவே பாட்டி அமைதியாக வளைய வருவதை அனைவரும் வியப்போடு பார்த்தனர்.



Rate this content
Log in

Similar tamil story from Classics