STORYMIRROR

DEENADAYALAN N

Classics

4.4  

DEENADAYALAN N

Classics

ஞாயம்தானா? - பத்து

ஞாயம்தானா? - பத்து

3 mins
23.5K



அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


காலார சற்று நடந்து விட்டு வரலாம் என்று அருகில் இருந்த பூங்கா ஒன்றிற்குள் நுழைந்தேன். ஐந்தாறு பெரியவர்கள் – ஓய்வு பெற்ற முதியவர்கள் - புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் மூர்த்தி சாரும் உட்கார்ந்திருந்தார்.


எதற்கு அவரைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று எண்ணி சற்று ஒதுங்கி நடந்த போது, ‘எழுத்தாளரே…’ என்று மூர்த்தி சார் குரல் கொடுத்தார். அருகில் சென்றேன்.


‘இது சேது, இது ரஹ்மான், இது கிருஷ்ணமூர்த்தி, இது டேவிட், இது பரசுராமன் என்று ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தி வைத்தார். எல்லோருக்கும் புன்னகையுடன் ஒரு வணக்கம் வைத்தேன்.


‘எங்களுக்குள்ளே ஒரு முக்கியமான சப்ஜெக்ட் ஓடிகிட்டிருக்கு. உட்கார்ந்து நீயும் உன் அபிப்பிராயத்தை சொல்லேன்..’ என்றார் மூர்த்தி சார். நானும் அருகில் சென்று அமர்ந்தேன்.


‘என்னைப் பற்றிய அறிமுகப் படலம் முடிந்ததும் பரசுராமன் ஆரம்பித்தார்.

‘தம்பி.. இந்த வயசுலே ஒரு அஞ்சு வயசுப் பிள்ளையை நான் தத்து எடுத்துக்க வாய்ப்பிருக்கா..?’


முதலில் எனக்குப் புரியவில்லை. ‘என்ன கேட்டீர்கள்?’ என்று மறுபடியும் கேட்டேன்.


‘இல்லே.. அவரு அஞ்சு வயசுலே ஒரு குழந்தை கெடச்சா தத்து எடுத்துக்க விரும்புறாரு’ என்று விளக்கினார் மூர்த்தி மாமா.



‘சார்.. தத்துங்கறது நீங்க நெனைக்கிற மாதிரி அவ்வளவு எளிது அல்ல. அது கெடக்கட்டும்.. உங்க பிரச்சினைதான் என்ன.. சொல்லுங்க?’


பரசுராமன் சொல்ல ஆரம்பித்தார்..


‘தம்பி.. மனைவி இல்லே.. கடந்த அஞ்சு வருஷமா நான் என் ஒரே மகன் மருமகளோடதான் இருக்கேன். ஆரம்பத்துலே ஒரு ரெண்டு வருஷம் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. ஆனா போகப் போக சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பிரச்சினை வர ஆரம்பிச்சிருச்சி..’


‘இதுலே என்ன சார் புதுசா இருக்கு.. பெரும்பாலும் மகன்-மருமகளோட தங்கி இருக்கறவங்களுக்கு இதெல்லாம் இருக்கத்தானே செய்யும். அதுலேயும் நீங்க மனைவி இல்லாம தனியா தங்கி இருக்கறீங்க. அட்ஜஸ்ட் பண்ணிகிட்டுப் போக வேண்டியதுதான்’ – என்றேன் நான்.


‘அப்பிடிதான் இருக்கேன் தம்பி.. எல்லா விஷயத்துலையும் அனுசரிச்சி போகிற எனக்கு, என் பேரன் பேத்திகளோட விஷயத்துலே மட்டும் அப்படி இருக்க முடியலே..’


‘அப்பிடியா.. என்ன மாதிரி பிரச்சினை..?’


‘குழந்தைகளை ஓவரா கண்டிக்கிறது.. தண்டனை கொடுக்கிறது.. சாப்பிடலேன்னா ‘பூச்சாண்டி’ பேரை சொல்லி பயமுறுத்துறது.. அவங்களை படிக்க உக்காற வெச்சிகிட்டு இத முடி அத முடின்னு ‘டார்ச்சர்’ குடுக்கிறது.. நாம ஏதாவது ‘சரி விடு’ன்னு குழந்தைகளுக்கு ஆதரவா பேசுனா ‘நீங்க உங்க வேலைய பார்த்துகிட்டு சும்மா இருங்க’ ன்னு சொல்றது..’


‘இதெல்லாம் செய்யிறது யாரு.. உங்க மருமகளா மகனா..?’


‘ரெண்டு பேருந்தான்...’


‘சார்.. குழந்தைகள் ஒழுக்கமா இருக்கணுமின்னா – குழந்தைகள் ஒழுங்கா படிக்கணுமின்னா – குழந்தைகள் இந்த போட்டி நிறைந்த உலகத்துலே சமாளிச்சி நடக்கணுமின்னா – இந்த கண்டிப்பெல்லாம் தேவைதான சார்.. ஏன் சார்.. ஒரு அப்பா அம்மாவுக்கு அவங்க குழந்தை மேலே அக்கறை இருக்காதா.. இதெல்லாம் அவங்களுக்குத் தெரியாதா;;’


‘அப்பிடி இல்லே தம்பி..

ஒரு குழந்தையெ எப்பவுமே பயத்துலையும் கண்டிப்புலையுமே வெச்சிருக்கக் கூடாது.. அதோட சுதந்திரமான குழந்தைப் பருவத்தை அது எப்பொதான் அனுபவிக்கிறது? அது மட்டும் இல்லாமல், அந்தக் குழந்தைக்கு ‘நமக்கு ஒருத்தரு ஆதரவா இருக்காங்கன்னு’ ஒரு நம்பிக்கை இருக்கணும். இல்லேன்னா வளர வளர அது நேர் வழிலே இருந்து தவறிடும்’


‘அது மட்டும் இல்லே தம்பி..’ அவரே தொடர்ந்தார். ‘ஒரு தடவை அந்தக் குழந்தைக்கு ஒரு கடினமான பனிஷ்மெண்ட் குடுத்துட்டாங்க.. அது ஓடி வந்து ‘தாத்தான்னு..’ என் காலக் கட்டிகிட்டு அபயம் கேக்கற மாதிரி என் மூஞ்சியப் பாக்குது.. 

 (கொஞ்ச நேரம் நிறுத்தி கண்ணீர் பொங்க அழுதார் பரசுராமன்)

... நான் கையை நீட்டி ‘ சரி.. விட்டுடுங்கன்னு..’ அவங்களை தடுத்துட்டு ஏதோ சொல்ல வந்தப்போ ‘இதிலெல்லாம் நீங்க தலையிடாதீங்கன்னு.. குழந்தையை அழ அழ...’


மீண்டும் கொஞ்ச நேரம் விக்கி விக்கி அழுதார் பரசுராமன். எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. அங்கிருந்த அத்தனை பெரியவர்களும் இறுகிய முகத்துடன் கண்கலங்க அமர்ந்திருந்தார்கள்.


'குழந்தையை அழ அழ என்னிடமிருந்து பிரித்து இழுத்துக் கொண்டு சென்று விட்டார்கள். அன்னிக்கே நான் செத்துட்டேன் தம்பி.. அதுக்கப்புறம் குழந்தையை எங்கிட்ட அவ்வளவா அண்ட விடறதில்லே.. எங்கிட்ட இருந்து தள்ளியே வெச்சிருக்காங்க..


கொஞ்ச நாள் போகப் போக குழந்தையும் அந்த சூழ்நிலைக்குப் பழகிருச்சி தம்பி.. இப்போ எங்கிட்டே வர்றதில்லே.. எந்த அபயமும் கேக்கிறதில்லே.. மொத்தத்துலே நான் தனிச்சி விடப்பட்டேன் தம்பி..’ மீண்டும் குரல் தளுதளுத்தது.


சற்றுநேரம் விரக்தியாய் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கரைந்தன.


‘இப்போ அந்த வீட்லே இருக்கவே பிடிக்கலே தம்பி.. கடவுள் புண்ணியத்துலே பென்ஷன் பணமும் சொந்த வீடும் இருக்கு. அங்கேயே போய் தனியா இருந்துக்கலாம்னுட்டுப் பாக்கறேன்.. இப்பொதான் இந்த சேது ‘தத்து’ ஐடியா சொன்னாரு. கரெக்ட்டா நீங்களும் வந்தீங்களா.. அதான்.. என்று பரிதாபமாய்ப் புன்னகைத்தார்.. அவர் முகம் ஒரு குழந்தையின் முகம் போல் இருந்தது.


இல்லே சார்.. இந்த வயசுலே தத்துக்தெல்லாம் சாத்தியம் இருக்க வாய்ப்பு இல்லே..


‘இல்லே தம்பி அவங்க மட்டும் ஒரு குடும்பம் போல இப்போ சந்தோஷமாத்தான் இருக்காங்க… என் பேரன் கூட ரொம்ப ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கான்.. இப்பொ எல்லாம் அவனை அவங்க மெரட்றதில்லே.. அவனுக்கு வேணும்ங்கற அத்தனை பரிவும் பாசமும் அவங்ககிட்டயிருந்தே கெடச்சிருது… சத்தியமா என் பேரன் சந்தோஷத்தப் பார்த்து எனக்கு மனசெல்லாம் நெறஞ்சு பூரிச்சி போச்சி தம்பி.. நானும் தனியா ஒதுங்கிட்டா அவங்க இன்னும் ஃப்ரீயா இருக்கலாம்.. எனக்கும் ‘பேரனப் பாக்க முடியலே’ங்கற ஒரு கவலையத் தவிர வேறு எந்த டென்ஷனும் இருக்காது..’


சற்று நேரம் அமைதி நிலவியது. பின் ஒவ்வொருவராக எல்லோரும் விடை பெற்று பிரிந்து சென்றார்கள்.


நான் மட்டும் அங்கிருந்த செடி கொடிகளை வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


‘தத்து’ என்பது அவருடைய வயதிற்கு சாத்தியமில்லாத ஒன்று. என்றாலும், அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால், அப்படி ஒரு குழந்தையை பேரக்குழந்தையாக தத்து எடுத்துக் கொண்டு – தன் உண்மைப் பேரக் குழந்தைக்கு ஈடாக நினைத்துக் கொண்டு - அவரால் நிம்மதியாக வாழ முடியுமா?


முடியவே முடியாது என்பது என் அபிப்பிராயம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




Rate this content
Log in

Similar tamil story from Classics