DEENADAYALAN N

Classics


5  

DEENADAYALAN N

Classics


ஞாயம்தானா? – பத்தொன்பது

ஞாயம்தானா? – பத்தொன்பது

3 mins 639 3 mins 639


அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


‘உங்க பையன் எங்கே இருக்கார்?’


‘யு எஸ் லே..!’


‘உங்க பொண்ணு எங்கே இருக்காங்க?’


‘ஆஸ்திரேலியாலே..’ஒரு காலத்தில் சில பெற்றோருக்கும் மற்றோருக்கும் பெருமையாக நடந்த கேள்வி-பதில்கள்தான் மேற்கண்டது.‘அவுங்களுக்கென்னப்பா… பையன் கனடாலே இருக்கான்.. பொண்ணு சிங்கப்பூர்லே இருக்கு.. சும்மா டாலரா கொட்டுது.. இவங்க ரெண்டு பேரும் அப்பப்போ ஜாலியா கனடாவும் சிங்கப்பூரும் போயிட்டு வந்துகிட்டு, இங்க நிம்மதியா சுத்திகிட்டிருக்காங்க..’


ஒரு காலத்தில் சில வயதான பெற்றோர்களைப் பார்த்து சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை.ஆனால் இப்போது… ‘பையன் கனடாலே இருக்கானாம்.. பொண்ணு சிங்கப்பூர்லே இருக்காளாம்.. பாவம் இவங்க ரெண்டு பேரும் இங்கே ஏதோ வாழ்க்கையை ஓட்டிகிட்டிருக்கிறாங்க’ என்றுதான் அதிகம் பேசப்படுகிறது.ஆரம்பத்தில் ‘கொஞ்ச நாள் நம் பையனும் / பெண்ணும் வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவிக்கட்டுமே..’ என்று பெற்றோர் மனதாற ஆசைப் பட்டு மகிழ்ச்சியாக அனுப்பி வைப்பார்கள். இரண்டு மூன்று வருடங்கள் கழித்து பிள்ளைகளுக்கு திருமண வயது வரும். அவர்களை ஊருக்கு வரவழைத்து திருமணமும் செய்து வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள். பிள்ளைப் பேறு போன்ற காரணங்களுக்காக பெற்றோரும் ஓரிரு முறை வெளிநாடு சென்று வருவார்கள். அதன்பின், ‘அந்த நாடு ஒத்துக்கொள்ளவில்லை. நம்ம ஊரைப் போல் சந்தோஷம் இல்லை.’. என்று முதல் முறை சென்று வரும் போதே சில பெற்றோர் சொல்லி விடுவார்கள். இரண்டாம் முறை செல்பவர்களில் பெரும்பாலோர், உடல் நலமின்மை, மன உற்சாகமின்மை போன்ற காரணங்களால் ‘விசா’ முடியும் வரை கூட இருக்க முடியாமல், பாதியிலேயே திரும்பி வந்து விடுவார்கள். 90 சதவிகிதம் பெற்றோர் அதன் பிறகு செல்ல மாட்டார்கள்.


அதன் பின், ஆரம்பத்தில், உறவுகளின் வீடுகளுக்குப் போவார்கள். ‘ஷாப்பிங் மால்’களுக்குப் போவார்கள். திரைப்படத்திற்குப் போவார்கள். கோயில் குளங்களுக்குப் போவார்கள். பார்ப்பவர்கள் எல்லாம், ‘ஆஹா.. எவ்வளவு ஜாலியாக இந்த ஜோடி ஊர் சுற்றுகிறது.. கொடுத்து வைத்தவர்கள்’ என்பார்கள்.


ஆனால் எல்லாமே ஓரிரு மாதங்களுக்குதான். அதன் பிறகு, தங்கள் குழந்தைகளுக்காகவும் பேரன் பேத்திகளுக்காகவும் ஏங்கத் தொடங்குவார்கள். பின் எங்கு சென்றாலும் மனம் ஒட்டாது. வெளிப் பார்வைக்கு அவர்களின் முகம் சாதாரணமாய் தெரியும். ஆனால் உள்ளுக்குள் கவலையுடன் இருப்பார்கள். பின் அங்கு இங்கு செல்வதை குறைத்துக் கொள்வார்கள். வீட்டிலேயே அடைந்து கிடப்பார்கள். காலை உணவை பன்னிரண்டு மணிக்கு உண்பார்கள். மதிய உணவை மாலை நான்கு மணிக்கு, பெயரளவில் தொடுவார்கள். இரவு உணவைப் ‘பார்த்து’ விட்டு படுத்துக் கொள்வார்கள். பின்னிரவு இரண்டு மணி மூன்று மணிக்கு, உறக்க தேவனே வந்து பரிதாபப்பட்டு ஆலிங்கனம் செய்து தூங்க வைத்துவிட்டுப் போவான். பேரன் பேத்திகளை இணையதளம் மூலமாக பார்ப்பார்கள். அங்கே பேரன் பேத்திகள் கையில் ஒரு செல்பேசியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ‘இந்த தாத்தாப் பேரு என்னான்னு சொல்லு.. இந்தப் பாட்டியோட பேரு என்ன சொல்லு..’ என்று அங்கே இருப்பவர்கள் நம் பேரன் பேத்திகளிடம் நம் பெயரையே கேட்கும் சமயங்களில், நம் நெஞ்சில் ஒரு வெடி குண்டு இறங்குவது போல் இருக்கும். நம் பெயரை அவர்கள் தப்பாக சொல்லி விட்டால், நம் நெஞ்சு வெடித்து தூள் தூளாக சிதறி விடும். ஒரு நாள் அவர்களைப் பார்க்காமல் இருந்தால் மனசு கிடந்து பதறும். அப்படி அவர்களைப் பார்த்துவிட்டால், அதிர்ஷ்டம் இருந்து பேசியும் விட்டால், ஏதோ சாதனை புரிந்தது போல் இருக்கும். அதன்பின் அவர்கள் கைப்பேசி இணைப்பைத் துண்டிக்கும் போது, நம் மனம் கணக்கும். சில நிமிடங்கள் நன்றாக இருப்பது போல் இருக்கும். அதன்பின் மனம் மீண்டும் வெறுமையாகும். கிழவனும் கிழவியும் ஏழுக்கு ஏழு மெத்தையில் இந்தக் கடைசியில் ஒருத்தரும் அந்தக் கடைசியில் ஒருத்தரும் படுத்துக் கொண்டு, சத்தம் வராமல், விசும்பி விசும்பி அழுது கொண்டிருப்பார்கள். அவர்களின் முதுகுகளின் குலுங்கல் அதிர்வைப் பார்த்தால், அவர்கள் விசும்பவில்லை – கதறுகிறார்கள்’ என்று புரியும்.


இதன் மறு பக்கத்தில் இன்னொரு ஞாயமும் உண்டு. ‘‘எல்லாப் பிள்ளைகளும் விரும்பி வெளிநாடு சென்று விடுவது இல்லை. அவர்களிலும் பலர் மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் அங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் அம்மா அப்பா உறவுகளை விட்டு இருக்க ஆசையா என்ன? அவர்களின் மற்றும் அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளவே சில சமயம் வெளிநாட்டு வேலை அவசியத் தேவையாக இருக்கிறது. உறவு, நட்பு, ஊர் என்றெல்லாம் பார்த்தால் பொருளாதாரம் இல்லாமல் போய் விடுகிறது. பிழைப்பு மிகவும் கடினமாகி விடுகிறது. பொருளாதாரத்தைச் சுற்றிதான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பிரதானமாக கவனித்துக் கொண்டீர்களோ அப்படித்தான் அவர்கள், அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை பிரதானமாக பார்க்கிறார்கள். ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்று அந்தக் காலத்திலேயே சொல்லி வைக்கவில்லையா’குழந்தைகள், தங்கள் உறவுகளையும், நட்பையும், ஊரையும், சூழலையும், கலாச்சாரத்தையும், குடும்ப/தெரு/நாட்டு விழாக்கள்-பண்டிகைகளையும், அம்மாவையும், அப்பாவையும் விட்டுவிட்டு எங்கோ இருக்கும்போது, இங்கே இருக்கும் முதிய பெற்றோர்கள் எப்படி இயல்பாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும்?


வாசக அன்பர்களே! உங்கள் கருத்து…?Rate this content
Log in

More tamil story from DEENADAYALAN N

Similar tamil story from Classics