ஞாயம்தானா? - பதினேழு
ஞாயம்தானா? - பதினேழு


அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குள்ளும் ‘நல்லவர்கள்-கெட்டவர்கள்’ இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குள்ளும் ‘நல்லவர்கள்-கெட்டவர்கள்’ இருக்கிறார்கள்.
நூறடி உயரமுள்ள ஒரு சுவற்றில் வெள்ளையடிக்க ஒருவர் ஏறுகிறார். சாரம் கட்டி அதில் ஏறி நின்று சுவற்றில் வெள்ளையடிக்கிறார். என்றாலும் இன்னொரு கயிற்றை எடுத்து, ஒரு பலமான - உயரமான இடத்தில் அந்தக் கயிற்றின் ஒரு முனையைக் கட்டி விட்டு, இன்னொரு முனையை அவர் தன் இடுப்பில் பக்கபலமாக கட்டிக் கொள்கிறார். முப்பது வருடங்களாக உயரங்களில் ஏறி வெள்ளையடிப்பவர் தான் அவர். என்றாலும் ஏதோ ஒரு கவனப்பிசகால் சாரம் முறிந்து சரிந்து விட்டால், அந்தக் கயிறு அவரைக் கீழே விழுந்து விடாமல் காப்பாற்றும் என்று நம்புகிறார்.
இதில் சாரம் என்பது தன்னம்பிக்கை. கயிறு என்பது கடவுள்நம்பிக்கை.
பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெறுவது, சிறந்த வேலையைப் பெறுவது, பணம் சம்பாதிப்பது, நல்ல மனைவி அமைவது, நல்ல குழந்தைகள் அமைவது வியாபாரத்தில் முன்னேறுவது, தேர்தலில் வெற்றி பெறுவது, என்று மனிதர்களுக்கு பல நோக்கங்கள் உண்டு.
இதில் வெற்றியடைவதற்காக மனிதர்கள் எடுக்கும் முயற்சிதான் (சாரம் என்னும் அவர்களின்) தன்னம்பிக்கை!
அந்த முயற்சி வெற்றியை அடைய முடியாமல் போய் விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் செய்யும் பிரார்த்தனைதான் (கயிறு என்னும் அவர்களின்) கடவுள்நம்பிக்கை!
(பிரார்த்தனை என்பது எண்ணங்களின் குவியல்தான். எண்ணங்களுக்கு என்று ஒரு ‘சக்தி’ உள்ளது. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் ‘எண்ணங்கள்’ என்கிற புத்தகத்தில் எண்ணங்கள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பதை எடுத்துரைக்கிறார்.)
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், ‘கடவுள்நம்பிக்கை’யை, ஒரு பக்கபலமாக வைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ‘கடவுள்நம்பிக்கை’யை ஏற்றுக் கொள்ளாததால் அதை ஒரு பக்கபலமாக வைத்துக் கொள்வதில்லை.
உண்மையில் யோசித்துப் பார்த்தால், எந்த பக்கபலமும் வைத்துக் கொள்ளாமல், தன்னைம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்களின் மனோ தைரியத்தையும் மனோ வலிமையையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.
ஆனால் அதே சமயம், எந்த வித பெரும் பிரயாசையும் இல்லாமல், ‘பிரார்த்தனை’ என்பதன் மூலம் தங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பக்கபலத்தை அவர்கள் அநியாயமாக இழக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
இந்த என் கருத்து சரியா..? தவறு இருந்தால் குறிப்பிடவும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?