Dr.PadminiPhD Kumar

Classics

5  

Dr.PadminiPhD Kumar

Classics

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 6 வேண்டாம் வாணி வேண்டாம்

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 6 வேண்டாம் வாணி வேண்டாம்

3 mins
348



              வாணி சென்னை நகரின் சிறந்த கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவி;நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்;எப்பொழுதும் அமைதியாக இருப்பாள்;அவள் வாய்விட்டு சிரித்து யாரும் பார்த்ததில்லை;தன் எண்ணங்களை தன் மனதிலேயே வைத்துக் கொள்வதைத் தவிர பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை.


         வாணியின் அம்மா சீதாவின் தங்கை கீதா. மும்பையில் ஒரு பணக்கார குடும்பத்தில் அவளை மணமுடித்துக் கொடுத்தார்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது தன் அக்கா வீட்டிற்கு வந்து கீதா தன் உயர்தர குடும்பத்தின் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்வது வழக்கமான ஒன்று.அவளுக்கு ஒரே பெண் தாரிணி.


செல்வச்செழிப்பான தாரிணி சிறிது குண்டாக இருந்தாள். கீதாவிற்கு வாணியை பார்க்கும்போதெல்லாம் தன் மகள் தாரிணியை அவளோடு ஒப்பிட்டுப் பார்த்து அங்கலாய்த்து பெருமூச்சு விடுவாள். எப்போதும் சாக்லேட்,ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டு குண்டாகிக் கொண்டே போகிறாளே என்று கவலைப்படுவாள்.


          கீதாவும் தாரிணியும் மும்பையிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒரு பெரிய சூட்கேசும் அவர்களுடன் வரும். சூட்கேஸில் என்ன இருக்கும் என்று வாணிக்கும் அவள் அம்மா சீதாவிற்கும் நன்றாகவே தெரியும்.கீதாவின் பழைய புடவைகள், தாரிணியின் பழைய ஸ்கர்ட், சுடிதார், ஹேண்ட்பேக், கிளிப், வளையல்கள் என அவர்கள் பயன்படுத்திய துணிமணிகள் பொருட்கள் இவைகளால் நிரப்பப்பட்டது தான் அந்த சூட்கேஸ். அதை சென்னை வந்ததும் திறந்து எல்லோருக்கும் கொடுப்பது வாடிக்கையான ஒன்று.வாணியும் அவள் அம்மாவும் எதுவும் சொல்லாமல் அவைகளை வாங்கிக்கொள்வார்கள்.


          வாணிக்கு ஒரு அண்ணனும், தங்கையும் உண்டு. அண்ணன் அவ்வளவாக யாரிடமும் பழக மாட்டான்.காலையில் தன் நண்பர்களோடு வெளியே சென்று விட்டால் இரவில் படுக்கத்தான் வீட்டிற்கு வருவான். வாணியின் அப்பாவும் காலையில் வேலைக்காக செல்பவர் இரவில் தான் வீடு திரும்புவார்.நாள் பூராவும் உழைத்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை. வாணியின் அம்மா தையல் தெரிவதால் அக்கம் பக்கம் தெரிந்தவர்களுக்கு தைத்துக் கொடுத்து ஏதோ அவளால் முடிந்த வரையில் குடும்பத்திற்கு உழைத்துக் கொடுப்பாள். மகனும் மகளும் கல்லூரிப் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றால் குடும்பம் தலைநிமிர முடியும் என்று பெற்றோர் இருவரும் எண்ணினர்.


          சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்கள் இடையே நெருக்கம் ஏற்படுவது இயற்கை.வாணிக்கும் அவர்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டு மாமி மீனாட்சிக்கும் ஒருவித நெருங்கிய நட்பு இருந்தது. மதுரையை சேர்ந்த மீனாட்சி மாமிக்கு குழந்தை இல்லை. வாணியிடம் மிகவும் அன்புடன் பேசுவார். வாணி தன் வீட்டில் அமைதியாக படிக்க முடியவில்லை என்றதும் மீனாட்சி மாமி தன் வீட்டில் வந்து படிக்கச் சொன்னதால் வாணி படிக்க என்று மீனாட்சி மாமி வீட்டிற்கு போவது வழக்கமாயிற்று.தினமும் சாயந்திரம் படிக்கச் சென்றால் இரவு சாப்பாட்டிற்கு தான் வீட்டிற்கு வருவாள். இது அடுக்குமாடி குடித்தனக்காரர் அனைவரும் அறிந்த ஒன்று.


            ஒருமுறை மீனாட்சி மாமியின் உறவுக்காரப் பையன் அசோக் மதுரையிலிருந்து வந்திருந்தான். அவன் மதுரைக் கல்லூரியில் பிடெக் படித்து முடித்திருந்தான்.எம்பிஏ படிக்க அமெரிக்கா போகும் எண்ணத்தில் சென்னை வந்திருந்தான். மாமாவிற்கும் மாமிக்கும் அளவில்லாத சந்தோஷம்.அவனை அன்புடன் உபசரித்து தங்கள் வீட்டில் தங்க வைத்தனர்.வாணி வழக்கம்போல படிக்கப் போன போது மாமி அசோக்கை வாணிக்கு அறிமுகப்படுத்தினாள். அந்நியனை கண்டதும் வாணி வீட்டிற்கு திரும்ப எண்ணினாள்.


ஆனால் அசோக் அவளிடம் மாமி அவளைப்பற்றி சொல்லியதாகவும் அதனால் இங்கேயே எப்போதும் போல் படிக்கலாம் என்றும், தான் அங்கே தங்குவதால் அவளுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவாக இருக்காது எனவும் கூறினான்.இதனால் வாணிக்கும் மாமி வீட்டிற்கும் இடையே உண்டான போக்குவரத்து குறைவில்லாமல் போய்க்கொண்டிருந்தது.


          அசோக்கும் வாணியும் படிப்பு சம்பந்தமாக தங்கள் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இடையே ஒரு அன்னியோன்யம் ஏற்படுவதை மாமியும் கவனித்தாள். அசோக் தனக்குத் தேவையான புத்தகங்களை வாணியின் கல்லூரி லைப்ரரியில் இருந்து எடுத்து வரச் சொல்வான். புத்தகங்களின் பரிமாற்றமும் புன்னகையின் பரிமாற்றமுமாக அவர்கள் நட்பு விரிவடைந்தது.    

     

        வழக்கம் போல் மும்பையில் இருந்து கீதா சித்தி தாரிணியுடன் வந்தார்கள். வந்தவள் கண்ணில் அசோக் தென்பட்டான்.அவ்வளவுதான்….. சித்தி நேரே மீனாட்சி மாமியிடமும் மாமாவிடமும் அசோக் பற்றிய விவரங்களை சேகரித்தாள்.மறுநாளே அசோக்கின் பெற்றோர்களிடம் போனிலேயே பேசி சம்பந்தம் பேசி முடித்துவிட்டாள். அசோக்கிற்கும் தாரணிக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் மறுவாரமே கோலாகலமாக நடைபெற்றது.ஒரே மாதத்தில் திருமணம்.


திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அசோக்கும் தாரிணியும் அமெரிக்க பயணம் என்றும் நிச்சயதார்த்தத்தன்று பேசி முடிவு செய்தார்கள். மாமிக்கு மனதில் சிறு நெருடல் இருந்தது.ஆனால் திருமணத்திற்கு வாணியும் அவள் குடும்பத்தினரும் வந்திருந்தது யாருக்கும் எந்த மனவருத்தமும் தெரியாமல் திருமணம் முடிந்து தம்பதிகள் அமெரிக்கா பறந்தனர். 


                        ஒரு வருடம் ஓடியது.தாரிணிக்கு அமெரிக்காவிலேயே வளைகாப்பு, பிரசவம் என்று சித்தி அமெரிக்கா சென்றார்.ஏற்கனவே உடல் பருமன் கொண்ட தாரிணிக்கு அமெரிக்கா சென்றதும் பல பிரச்சனைகளை உண்டாக்கியது. பிரசவம் சிக்கலாகி குழந்தையை பார்க்காமலேயே தாரிணி உயிர்நீத்தாள்.விபரம் தெரிந்ததும் வாணி குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்தனர்.மீண்டும் சில மாதங்கள் உருண்டோடின காலச்சக்கரம் தான் எதற்காகவும் நிற்பதில்லையே!


         அசோக்கின் அமெரிக்க படிப்பு முடிந்ததால் சித்தி குழந்தையுடன் அசோக் இந்தியா திரும்பினான்.கடந்த இரண்டு வருடங்களில் வாணி,அவள் அண்ணன் இருவரும் படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தனர். அண்ணனுக்கு நல்ல பெண் அமைந்ததால் அம்மா அப்பா அவன் திருமணத்தை முதலில் பேசி முடித்தனர்.


புதிதாக வந்த மருமகள் வாணியின் திருமணம் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் சித்தி கீதாவிடமிருந்து தகவல் வந்தது போன் மூலமாக. அசோக் மறுமணம் செய்து கொள்ள சம்மதித்து இருப்பதாக.அனைவரும் வாணியை பார்த்தார்கள். விபரம் அறிந்த மீனாட்சி மாமி சொன்னார்,”வேண்டாம் வாணி,வேண்டாம்….”என்று. ஆனால் குடும்பத்தினர்களின் எதிர்பார்ப்பு வாணிக்கு புரிந்தது.


 அவளின் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. தாரிணி வாழ்ந்த வாழ்க்கை என் வாழ்க்கை. என் வாழ்க்கையை யாரும் பறிக்கவில்லை; நான் தான் மற்றவர்களுக்காக என் வாழ்வை விட்டுக் கொடுத்தேன்; விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. இனிநான் என் வாழ்க்கையை வாழ்வேன்.” அண்ணியிடமும், அம்மாவிடமும் சரி எனச் சொல்லி அமைதியானாள்.



Rate this content
Log in

Similar tamil story from Classics