ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 3
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 3


கதை 3:
அம்மா, இது என்ன மாயம்!!
உயிருடன் இருந்த வரையில் நான் அம்மா பக்கத்தில் ஒரு ஐந்து நிமிடம் கூட உட்கார்ந்தது இல்லை; அவளைப் பார்த்ததும் இல்லை; அவள் கூறும் வார்த்தைகளை கொஞ்சம் கூட செவிசாய்த்து கேட்டதில்லை; அவளைப் பற்றி சிறிதளவு கூட நினைத்துப் பார்த்ததில்லை.ஆனால் இன்று அவள் இல்லை என்றதும் எனக்கே தெரியாமல் என்னையும் அறியாமல் ஒவ்வொரு நிமிடமும் அவள் குரலைக் கேட்கிறேன்; அவளையே நினைக்கிறேன். இது என்ன மாயம்!
ஒவ்வொரு வருடமும் பனிக்கால விடுமுறையிலும் கோடைகால விடுமுறையிலும் சந்தானம் தன் மனைவி ஜானகி,மகன் ஆதி,மகள் பாரதி இவர்களுடன் அம்மாவைப் பார்க்க தான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு காரில் வந்து இறங்குவான்.அப்பாவின் அகால மரணத்திற்குப்பின் அம்மாவும் தனியாளாக அந்த வீட்டில் வாழ்ந்து அவனையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்தாள்.
மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தானம் புறப்பட்டான்.அம்மா தனியாக வீட்டில் இருந்தாள். ஆனால் உண்மையில் அவள் தனியாளாக தன்னை ஒருபோதும் நினைத்ததில்லை. அவளுடன் பிங்கி என்ற ஒரு பெண்நாய், மீட்டு என்று ஒரு கிளி, வீட்டின் பின்புறத்தில் ஒரு மாதுளை மரம், அவரைக்கொடி அவளின் உறவாக அங்கே வளர்ந்தன. அம்மா அவர்களுடன் பேசிக்கொண்டே தான் தன் வேலைகளை கவனிப்பாள்.
ஒருமுறை பேரன் ஆதி அவள் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கிண்டல் செய்தான்,”ஐயாம்மை! யார் கிட்டே பேசறீங்க? இங்கே தான் உன் பேச்சை கேட்க யாருமே இல்லையே?” ஆனால் அம்மா,”ஏன் யாருமில்லை?இதோ இங்கே பிங்கி இருக்கு; மீட்டு இருக்கு; மாதுளை இருக்கு; அவரை க்கொடி இருக்கு; இதெல்லாம் கேட்டுக்கொண்டே தானே இருக்கிறது.” என தயங்காமல் புன்னகையுடன் பதில் சொன்னாள்.
இரவிலோ கதையே வேறு மாதிரி. தனிமையையே தன் வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட அம்மா வீட்டு மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு வானில் தெரியும் விண்மீனிடம் பேச ஆரம்பிப்பாள். இவ்வாறு பகலிலும் இரவிலும் வீடு முழுவதும் சுற்றிவரும் அம்மா இனியில்லை. புரோகிதர்கள் வந்தனர். இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்தன.புரோகிதர்கள் செல்லும்முன்,” தம்பி, அம்மாவை மறக்காமல் இதே போல் ஒவ்வொரு வருடமும் திதி கொடுத்து விடு.” எனச்சொல்லி புறப்பட்டார்கள்.
நாளை காலையில் வெளிநாடு செல்ல புறப்பட வேண்டிய எல்லா ஏற்பாடும் செய்தாயிற்று.ஆனால் காலையில் காரில் ஏறுமுன் ஏனோ தெரியவில்லை சந்தானம்,” ஆதி, பாரதி வாங்க நாம் போய் பிங்கி,மீட்டு, மாதுளை, அவரை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு சொல்லி விட்டு வரலாம்.” என்று சொன்னதும் அவனை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.