Dr.PadminiPhD Kumar

Classics

5  

Dr.PadminiPhD Kumar

Classics

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 20 முதுமை ஒரு வரமா ? சாபமா?

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 20 முதுமை ஒரு வரமா ? சாபமா?

3 mins
398


                   

                சாவித்திரிபாட்டிக்கு 70 வயது; கணவர் இறந்தபின் மகனுடன் தான் வாசம். மருமகள் ஆரம்பத்தில் மிக நன்றாக கவனித்துக் கொண்டுதானிருந்தாள். இரண்டு குழந்தைகள் என்றான பின் கவனிப்பு குறைவது போல் சாவித்திரிக்கு தோன்ற ஆரம்பித்தது. காலையில் மகன் ஆபீஸ் கிளம்பும் முன் தாயின் அருகில் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒரு பார்வை பார்ப்பான். தாயைப் பார்த்து, “மருந்து எல்லாம் வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறீர்களா? இரவில் ஏன் லேட்டா சாப்பிடுறீங்க? நான் வரும் வரை காத்திருக்க வேண்டாம்.” என கண்டிப்பு கலந்த மரியாதையுடன் சொல்லிச் செல்வான்.சாவித்திரிபாட்டிக்கு இது பத்தாது.


            ஒரே மகள் தேவகியை டெல்லியில் உயர்ந்த பதவியில் இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண் கேட்டு வந்தபோது சாவித்திரிக்கு சென்னையில் இருந்து பார்த்து பார்த்து பாசமுடன் வளர்த்த பெண்ணை அவ்வளவு தூரத்திற்கு கட்டிக் கொடுப்பதற்கு சிறு தயக்கம். உறவினர்கள்,” விரும்பி வந்த வரனை விலக்கக் கூடாது” என்று சொன்னதால் வேறு வழியின்றி,” ஜாதகம் பார்த்து சொல்கிறோம்” என சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தனர் சாவித்திரியும் அவள் கணவரும். ஜோசியரோ,” பத்துப் பொருத்தமும் பக்குவமாய் அமைந்திருக்கிறது” என்று சொல்லவும்,திருமணம் தடபுடலாக நடந்தேறியது. ஒரே வாரத்தில் மறுவீட்டு அழைப்பு, தனிக்குடித்தனம் என்று மகள் தேவகி டெல்லியில் செட்டிலானாள்.


           வளைகாப்பு, பிரசவம் என்று முதல் குழந்தைக்காக சென்னை வந்த தேவகியை இரண்டாவது குழந்தைக்கு,”டெல்லியில் எல்லா வசதிகளும் சிறப்பாக இருக்கும் போது சென்னைக்கு ஏன் போக வேண்டும்” என சொல்லி மாப்பிள்ளையும் மாமனார் மாமியாரும் அவளை சென்னைக்கு அனுப்பவில்லை. குழந்தைகள் படிப்பு, ஆபீஸில் அவருக்கு வேலை அதிகம், லீவு கிடைக்கவில்லை எனப் பல காரணங்களால் தேவகிக்கு அடிக்கடி சென்னை வந்து அம்மாவை பார்க்க முடிவதில்லை. மேலும் அண்ணனும் அண்ணியும் அம்மாவை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணமும் அவளை சென்னைக்கு வரவிடுவதில்லை.


          ஆனால் இங்கே சாவித்திரி பாட்டியின் நிலை வேறு. ஆயிரம்தான் மகனும் மருமகளும் தன்னை குறைவின்றி கவனித்தாலும் தன் மகள் தன்னை பார்க்க வர மாட்டாளா என்ற ஏக்கம்தான் அடிக்கடி அவளை வாட்டும்.பேரனும் பேத்தியும் அவ்வப்போது அவள் அருகில் வந்து,” ஐயாம்மா, எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா?” என்று கேட்பார்கள். சில சமயம் பேரனோட அல்லது பேத்தியோட நண்பர்கள் வந்தால் சிரிப்புச் சத்தம் கேட்டதும் சாவித்திரி பாட்டிக்கும் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள ஆசை வரும்; மெதுவாக நடந்து ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தாள். பேரன் பேத்தி நண்பர்கள் அவளை கண்டதும்,” ஹாய் பாட்டி”என்று கையசைப்பார்கள். பெரியவர்களைக் கண்டால் இரு கை கூப்பி வணக்கம் சொல்லவேண்டும் என்பதோ, காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதோ நகரத்து குழந்தைகளுக்கு தெரிவதில்லை. மனதில் மரியாதை இருந்தால் போதும் என நினைக்கின்றனர்.

           பாட்டி அவர்களிடம் பேச முயன்றால்,பல் இல்லாத காரணத்தால் அவள் பேச்சு அவர்களுக்கு புரிவதில்லை. பேத்தியைப் பார்த்து,” பாத்லூம் போகணும்” என்று சொன்னதும் அவளது தோழிகள் அனைவரும் கொல்லென்று சிரித்து,” பாட்டிக்கு பாத்லூம் போணுமாம்” என்று அவளை மாதிரி பேசி காட்டினர். பேத்தியும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக் கொண்டு அவளை பாத்ரூம் கூட்டி போனாள்.


       இரவில் படுத்ததும் கால் வலிக்கும். மகனோ மருமகளோ வந்து சிறிது நேரம் காலை பிடித்து விட்டால் சுகமாக இருக்குமே என்று தோன்றும்.அந்தக் காலத்தில் மாமனார் மாமியாருக்கு செய்யும் பணிவிடைகளில் கால் அமுக்கி விடுவது என்பது மகன் மருமகளின் தினசரி பணிவிடை ஆக இருந்தது. இப்போதோ மகன் அம்மா தூங்கி விட்டார்களா என அறைக்குள் பார்க்கும்போது தூங்காமல் கட்டிலில் உட்கார்ந்து இருந்தால் உள்ளே வந்து விளக்கைப் போட்டு,” என்னம்மா? ஏன் தூங்கவில்லை?” என்று கேட்கும்போது ஏக்கத்துடன்,” கால் வலிக்குது” என்று சொன்னால் உடனே ஒரு மாத்திரையை கொண்டுவந்து நீட்டுவான்.மருமகளும் தன் பங்குக்கு டம்ளர் தண்ணீரை நீட்டுவாள். இவர்களிடம் அன்பு உண்டு; மரியாதை உண்டு; ஆனால் புரிதல் எனும் பரிவு இல்லையே என்ற ஏக்கத்துடன் மாத்திரையை வாங்கிப் போட்டுக் கொண்டு படுத்துவிடுவாள்.


தன் நடுங்கும் கரங்களால் மகளுக்கு கடிதம் எழுதி மகனிடம் கொடுத்தாலும் அதை மறக்காமல் தன் ஆபீஸ் கடிதங்களுடன் மறுநாளே போஸ்ட் செய்தான்.

      

 தேவகிக்கு அம்மாவின் கடிதத்தைப் படித்ததும் அம்மாவின் ஏக்கம் புரிந்தது. ஆனால் உடனே “அம்மாவைப் பார்க்க வருகிறேன்” என அண்ணன் அண்ணிக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் போன தடவை சென்னை சென்றபோது அண்ணனும் அண்ணியும் அம்மாவை மாதாமாதம் டாக்டரிடம் காண்பிப்பதாகவும், ரிப்போர்ட்களைத் தன்னிடம் காட்டி எந்த அளவிற்கு அவரை கவனித்துக் கொள்வதாகவும் கூறி, அம்மாதான் டயத்துக்கு மாத்திரை சாப்பிட மறுப்பதையும், வலி வந்தால் மாத்திரை எடுத்துக் கொள்வதில்லை என்பதையும் சொன்னார்கள். நிதானமாக யோசித்து தன் தாய்க்கு பதில் எழுதினாள்,


 அன்புள்ள அம்மாவிற்கு,

 உங்கள் கடிதம் கிடைத்தது.எனக்கும் அங்கு வந்து உங்களுடன் சில நாட்கள் தங்க வேண்டும் என ஆசை தான். ஆனால் தற்சமயம் உடனே புறப்பட வசதிப்படவில்லை. கால் வலி இருப்பதாக எழுதியிருந்தீர்கள் ;மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்; டயத்துக்கு சாப்பிடுங்கள்; அண்ணன் அண்ணியும் குழந்தைகளும் உங்களை அன்புடன் கவனிப்பதால் தான் நான் இங்கே நிம்மதியாக இருக்க முடிகிறது. நான் முடிந்தால் நிச்சயமாக ஏப்ரல் மே மாதங்களில் இங்கே வெயில் அதிகமாக இருக்கும் போது அங்கு வருகிறேன்; அல்லது முடியாவிட்டால் செப்டம்பர் மாதத்தில், டிசம்பரில் வரப் பார்க்கின்றேன். கவலைப்படாமல் இருங்கள். எல்லோரையும் நான் கேட்டதாகச் சொல்லுங்கள்.


இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள் தேவகி

 கடிதம் இங்கே முதுமையின் வாசலில் வாழும் சாவித்திரி பாட்டிக்கு ஒரு கண்துடைப்பாக அமையுமே தவிர மன ஏக்கங்களை நீக்கும் மருந்தாக அமையாது. தன் பிள்ளைகள், பேரன்-பேத்திகள் என தன்னருகே இருந்தாலும், தன்னை விட்டு விலகி தூர இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை கண்டு பெருமையுடன் பூரிப்படையும் முதியோர்களுக்கு முதுமை ஒரு வரமே; ஆனால் பரிவும் புரிதலும் இல்லாத நிலையில் அந்த முதுமை ஒரு சாபம் ஆகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.


Rate this content
Log in

Similar tamil story from Classics