Dr.PadminiPhD Kumar

Classics

4  

Dr.PadminiPhD Kumar

Classics

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 10 பாசமலர்களின் பரிதவிப்பு

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 10 பாசமலர்களின் பரிதவிப்பு

5 mins
308



              முருகன் முன்னால் வர பின்னால் பெட்டி படுக்கை ஏந்தியபடி வந்தார் பெரியண்ணா.சம்பந்தி அம்மாளுக்கு வணக்கம் செய்ததும் அவர் மிகவும் அன்புடன் விசாரித்தார்,”எப்பொழுது வந்தீர்கள்…. ரயில் தாமதம் இல்லையே…. ஆமாம்….. இப்ப எல்லாம் ரயிலை நம்பமுடியவில்லை. நல்லது……வீட்டில் எல்லோரும் நலம்தானே ? மருமகள் எப்படி இருக்கிறாள் ? குழந்தைகள் இப்போ ஸ்கூலுக்கு போவார்கள் இல்லையா……. பெரியவன் நாலாவது போகிறான் என்று கேள்விப்பட்டேன். வயசாயிடுச்சு இல்லையா….. ஞாபகசக்தி குறைந்து கொண்டு வருகிறது.”  


        அம்மாளிடம் உள்ள சுவாரசியமே இதுதான். தானே கேள்வியும் கேட்பார்கள்; தானே பதிலையும் சொல்வார்கள்.அவர்களின் கேள்வி பதில்களுக்கு இடையே பெரியண்ணா ரொம்பவும் சிரமப்பட்டு,”ஆமாங்க.. வேற என்னங்க…அப்படியே தாங்க..” என்று சொல்லி நிற்கும்போதே ப்யூன் வந்து அம்மாவிற்கு சலாம் செய்து,”அம்மா, அந்த ஐயா உங்களைப் பார்க்க வந்திருக்காங்க.”என்று சொல்லி மரியாதை நிமித்தம் தன் கலைந்திருந்த சிவப்பு தோள்பட்டையை சரிசெய்து நின்றான்.


           “ யார்?.....சண்முகமா….அட,மறந்தே போனேன்.”சம்பந்தி அம்மாள் சிறிது நேரத்தில் சங்கடப்பட்டு போனார்.

“ உடனே கூட்டிட்டு வரணுமா இல்லையா….அவர் என்ன அன்னியமா!”

 அம்மா மேலும் அதே வேகத்தில் பெரியண்ணா பக்கம் திரும்பி பரபரப்பாக பேசினார், “நல்லது… நீங்கள் கை கால் முகம் கழுவி உடை மாற்றிக் கொள்ளுங்கள். பிரயாணக் களைப்பு இருக்கும்.நான் கொஞ்சம்……”பின் என்னிடம் விரிவாகச் சொன்னார், “ஷாலினி,உன் பெரியண்ணாவை அவர் அறைக்கு அழைத்துக்கொண்டு போய் அங்கேயே அவருக்கு டிபன் ஏற்பாடு செய்.”

         அறைக்குள் வந்ததும் பெரியண்ணா கேட்டார்,

                     “எப்படி இருக்கிறாய் ஷாலூ ?”

   “ நல்லா இருக்கேண்ணா….அண்ணி எப்படி இருக்காங்க?”

“ நல்லா இருக்கா,அவளுக்கென்ன வலி அதிகமானால் தான் கஷ்டப்படுகிறாள்.” 

    “சீனு….? பானு…..?”

“அவர்களுக்கென்ன…. விளையாட்டுத்தனம் அதிகமாயிடுச்சு. எவ்வளவு சொல்… இருவருக்கும் படிப்பில் கவனம் இல்லை.”அண்ணாவின் நெற்றிக்கோடுகள் ஆழமாகின.

                     “ கிச்சு என்னை நினைக்கிறானா ? அண்ணா,”

“அவனுக்கு அவ்வளவு நினைவு இல்லை… மூன்று நாள் தான் இருந்தாய்…… போனதடவை வந்தபோது…. இப்போ இரண்டரை வருஷம் போயிருக்கும்.” சிறிது நேரம் மௌனம். பின்னர் சொன்னார்,” சீனுக்குதான் வரவேண்டும் என்று ஆசை.” “அடடா அழைச்சிட்டு வந்து இருக்கலாமே ஏன் அண்ணா அழைச்சிட்டு வரலை ?”

“ நீ வேற.. ஸ்கூல்…. படிப்பு…” அண்ணா ஒவ்வொரு காரணமாக அடுக்கிக் கொண்டே போனார்.

           வெளியே சம்பந்தி அம்மாள் சண்முகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்,”அம்மா ஊரிலிருந்து வந்து விட்டார்களாமே…. பியூன் சொல்லிட்டு இருந்தான்…. முந்தா நாள் சாயந்திரம் வந்து விட்டதாக. அவங்க கால் வலி எப்படி இருக்கு….அகிலைக் கேட்டேன்…. ஹோமியோபதி டாக்டர் தான் அற்புதமா பார்த்தார்கள் என்று நீ  சொன்னதாக ஞாபகம்.. ஊரில் சீசன் எப்படி இருந்தது? இப்ப எல்லாம் ரொம்பவே குளிராக இருக்குமே…. சரி..கோடையில் இந்த தடவை எங்கே போக உத்தேசம் ? நீ மலைக்கு போக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். யார்? ஷாலினியா….வீட்டில்தான் இருக்கிறாள்…. முருகா, மருமகள் ஷாலினியை கொஞ்சம் கூப்பிடு.”

“இங்கே பார், ஷாலினி, சண்முகம் பெட்டி நிறைய ஆப்பிள் கொண்டு வந்து இருக்கிறான். அவனுக்கு கொஞ்சம் சூடாக காப்பி கொடு.”

    முருகன் அறைக்குள் தேனீர் தட்டை வைத்து விட்டு போனான். பால், சர்க்கரை எல்லாமே தனித்தனி கப்களில்.

“ பெரியண்ணா, சர்க்கரை எவ்வளவு போடட்டும் உங்களுக்கு?” 

“ கொஞ்சமா போடு… நிறைய வேண்டாம் .”

கேட்ட பிறகுதான் எனக்கு உறைத்தது எனக்கு மட்டும் எப்படி தெரியும் அண்ணா எவ்வளவு சர்க்கரை போட்டுக் குடிப்பார் என்று. இப்படி தேநீர் குடிப்பது எல்லாம் எங்களுக்கு எங்கே தெரியும். பிள்ளைகளுக்கு காலங்காத்தாலே கம்பு, கேழ்வரகு கூழ் மோரோடு செம்பு நிறைய கொடுப்பது வழக்கம்.

        “அண்ணா இது சாப்பிடுகிறீர்களா ?”

    “ இது என்னம்மா ?”அண்ணா அப்பாவியாக கேட்டார்.

 “ பாஸ்ட்ரி அண்ணா.” வேலைக்காரன் எங்கேயாவது நின்று இதைக் கேட்டு விடுவானோ என்று பயந்து கொண்டே சொன்னேன்.


“ வேண்டாம்.. வச்சிடு.. முட்டை போட்டிருப்பார்கள்….” அண்ணா மென்மையாக மறுத்து சொன்னார். சிறிது நேரம் மௌனத்தில் கரைந்தது. இருவரிடமும் பல நாட்களுக்குப்பின் பார்த்ததில் உண்டான மகிழ்ச்சியோ ஆவலோ உபசரிப்பில் தெரியவில்லை.உணர்வுக் குவியல்கள் எங்கோ காணாமல் போயிற்று. மீண்டும் மௌனம்.ஷாலினியே மௌனத்தை கலைத்தாள்.

        “குளிக்கிறீர்களா …. அண்ணா”

“இப்போது என்ன அவசரம்..சிறிது நேரம் சம்பந்தி அம்மாளிடம் பேசிவிட்டு வருகிறேன்.”

“ இல்லை அண்ணா, ஷாலினி பரிதவித்து சொன்னாள்,”மாமியார் உங்களை நான் சரியாக கவனிக்கவில்லை என்று நினைப்பாங்க.”


“ சரி, சரி,” அண்ணா சிரித்தார், அப்படின்னா நீ சொல்றபடியே ஆகட்டும். குளித்துவிட்டு வருகிறேன்.” சூட்கேசை திறந்து டவல் சோப் எடுத்ததும் நான் அவரை தடுத்தேன்.வெளியே ஏன்ணா இதெல்லாம் எடுத்தீங்க.டவல் தான் பாத்ரூமில் இருக்கிறதே….. சோப், எண்ணெய், டவல், எல்லாமே…. நீங்கள் இருக்கப் போவதே கொஞ்ச நாளைக்குத்தான்.ஷேவ் செய்வதற்குக் கூட ரேசர் இருக்கிறதே…. உங்கள் பெட்டியை வெளியில் எடுக்க வேண்டாம்.” நான் சற்று அதட்டலாகவே சொன்னேன். அண்ணா சொல் பேச்சு கேட்கும் குழந்தை போல் என் பேச்சைக் கேட்டுக் கொண்டார். 

         நான் அவருடைய பழைய இற்றுப்போன சாக்லேட் டப்பாவை எங்கே மறந்து விட்டு விட்டுப் போய் விடக் கூடாதே என்ற பயத்தில் பரிதவித்து பேசினேன்.

“ அட, உன் வீட்டில் மறந்து விட்டு விட்டுப் போனால் தான் என்ன!”அண்ணா சிரித்துவிட்டு உள்ளே வைத்தார். என் பார்வை அந்த டப்பாவின் உள்ளே கிடந்தவைகளை அவசரமாக நோட்டமிட்டு திரும்பியது. ஒரு சின்ன லேபிள் கிழித்து எறியப்பட்ட கண்ணாடி எண்ணெய் பாட்டில், தேய்ந்துபோன சோப், சீப்பு, சேவிங் ப்ரஷ் இவைகளையெல்லாம் நான் இங்கே வசிக்கும் வேலையாள்,குமாஸ்தா, பியூன், காவலாளி ஆகியோர் கைகளில் பார்த்திருக்கிறேன். பரிதவித்து என் கண்கள் பனித்தன.இந்த பெட்டியை அண்ணா மறந்து இங்கே விட்டு விட்டுப் போகக்கூடாது. “குளித்துவிட்டீர்களா…..அடடா….. துணியையும் துவைத்தீர்களா! ஆயாதான் இருக்கிறாளே…”

 “அட.. அவள் பாவம் வயசானவர்… அதோட இப்ப எல்லாம் அண்ணிக்கு வலி அதிகமானால் சீனு,பானு, கிச்சு துணிகளை நான்தான் துவைக்கிறேன்.”

 நான் பார்த்துக் கொண்டேன் வேலைக்காரன் எங்கேயும் நிற்கிறானோ என்று. அண்ணா பேசிக்கொண்டே உடுப்புகளை மாட்டிக் கொண்டார்.

 நான் திகைத்துப் போனேன். அவர் சட்டை முழுவதும் சுருக்கம் சுருக்கமாக இருந்தது. இப்பொழுது நான் சட்டையை எப்படி கழட்டச் சொல்வேன்.

 “அகில் பாபு ஆபீஸில் தானே இருப்பார் .”

“என்ன சொல்றீங்கண்ணா, பங்களாவுக்கு பக்கவாட்டில் தானே ஆபிஸ் என்று தெரியாதா! ஆனால் சாப்பாட்டுக்காக ஒரு மணிக்கு ரூமை விட்டு வருவார். அவ்வளவு கூட்டம் அங்கே!”

 “அப்படி என்றால் அங்கே போறேன். கொஞ்ச நேரம் மாப்பிளையை பார்த்த மாதிரி இருக்கும்.”

“ விடுங்க அண்ணா “,உடனே நான் இடைமறித்து, “அங்கே உங்களுக்கு போர் அடிச்சிடும். நீங்கதான் சொல்லிட்டு இருந்தீங்களே….. மாமியாரை பார்க்கணும்னு…..” என்னால் என் பரிதவிப்பை அடக்கமுடியவில்லை.

 அண்ணா எப்போதும் போல் அமைதியாக ,”சரி, சரி வா, மாமியாரை பார்த்து பேசுறேன்.” 

                   மாமியார் அண்ணாவோட பேண்ட் சட்டையில் ஒரு பார்வை பார்த்தார். தனக்கே உரிய மிகக் கண்டிப்புடன்,” ஷாலினி, இதுதானா பெரியண்ணாவை கவனிக்கிற முறை? அவர் சட்டையை கொஞ்சம் அயர்ன் செய்து கொடுக்க முடியலையா ? சூட்கேசில் வைத்துக்கொண்டு வந்ததில் சுருக்குசுருக்காகியிருக்கும்.” என் தலை பணிவால் கவிழவில்லை;குற்ற உணர்வால் கவிழ்ந்தது; குற்ற உணர்வும் அயன் பண்ண முடியவில்லையே என்பதால் அல்ல; இப்படி ஒரு நிலை உருவானதே என்பதால். 

      பெரியண்ணா அப்பாவியாக, வெகுளியாக, ஒன்றும் புரியாதவராக என்னையும் மாமியாரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். அகில் ஆபீஸ்ல இருந்து மதியச் சாப்பாட்டிற்காக வந்தார். “ஹலோ அண்ணா, எப்படி இருக்கீங்க ?” தன் கைகளை நீட்டி அவர் கைகளை தன் கையில் எடுத்துக் கொண்டார்,” எல்லோரும் நலம் தானே ?” பெரியண்ணா மகிழ்ச்சியால் தத்தளித்து நெகிழ்ந்தார்.

“ நான் ஒரு நிமிடத்தில் ஷவர்பாத் எடுத்து வரேன்….. முருகா, சீக்கிரமா சாப்பாடு எடுத்து வை.” அகில் சொன்ன மாதிரி சில நிமிடங்களில் குளித்து வெள்ளை பேன்ட் சட்டையுடன் சாப்பாட்டு அறைக்கு வந்தார். வந்ததுமே 2,3 சிப்ஸ்களை எடுத்து முதலில் அண்ணா பக்கம் கேட்டார். பின் தன் தட்டில் போட்டுக்கொண்டார். மற்றொரு கையால் நெய் தடவிய சப்பாத்தியை எடுத்துக்கொண்டார். ராமுவும் சோமுவும் கூட அப்பா மாதிரியே சப்பாத்திகளை எடுத்துக்கொண்டனர்.

           என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. சிறுவயதில் இரண்டு கையாலும் சாப்பாட்டை தொட்டாலே அண்ணா உடனே திட்டுவார்,” இரண்டு கையாலுமா சாப்பிடுவாங்க….. நாட்டுப்புறம்……. ஒரு கையால் தான் சாப்பிடவேண்டும். வலது கையால் சாப்பாடு; இடது கையால் தண்ணீர்.”

“ ரொம்ப நல்லா செஞ்சிருக்காங்க” அகில் தன் தட்டில் மறுபடியும் போட்டுக் கொண்டு நிறுத்தி,” அட அண்ணா, நீங்க எடுத்துக்கிறீங்களா அண்ணா….”

 நான் தயங்கினேன்.எனது அண்ணாவும் தயக்கத்துடன் கேட்டார்,”அப்படின்னா ?” “உங்களுக்கு மக்ரோனி தெரியாதா மாமா” என்று சோமு தன் மழலை மொழியில் சிறிது கேலியாக கேட்டான். அகில் சங்கடத்துடன் என் பக்கம் பார்த்தார். நான் பரிதவித்து போனேன். ஆனால் அண்ணாவோ குழந்தையின் மழலை பேச்சை ரசித்து சிரித்தபடி,” ஆமாம்…. சோமு பாபு, மாமா இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை” உண்மையில் அண்ணா முன்பு கொண்டிருந்த சங்கடத்தில் இருந்து விடுபட்டு மனம் விட்டு சிரித்துக் கொண்டிருந்தார். 

           இந்த வீட்டில் எல்லாமே நாடகப் பாணியில் தான் நடக்கிறது.அகில் நகரத்தில் உள்ள உயர் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த பிரபலமான அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். திருமணத்தன்று ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அன்றிலிருந்து தான் தெரிந்தது பெண் வெளிப்படையாக எதையும் பேச முடியாதுன்னு. ‘ஆமாம்’, 'இல்லை' இவைகளை தான் பேச முடியும் என்றும் புரிந்தது.

           அகிலுக்காக பெண் பார்க்க ஆரம்பிக்க கிராமத்தில் பிறந்த ஜமீன்தார் வீட்டுப் பெண் என்று சொன்னதும் அவளை அடக்கமானவள் என்று நினைத்துக் கொண்டு பெண்ணைப் பார்க்காமலேயே திருமண நாள் குறித்தனர். ஆனால் எப்பொழுது தங்கள் குடும்பத்தாரோடு திருமணத்திற்காக போனார்களோ அப்பொழுது பேச்சு பார்வையில் மாற்றம் தெரிந்ததோ……எல்லாமே மாறியது…அதுமட்டுமல்லாமல் சென்ற திருமண ஊர்வலம் பெண் இல்லாமல் திரும்பக்கூடாது என நினைத்தனர்.அப்பொழுது ஒரு சிறந்த அனுபவசாலியான பெரியவர் அறிவுறுத்தினார்,”பணம்,பெரிய இடம் என்று பார்க்காமல் இதே இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் மிக அடக்கமான பெண் மணமகளாக கிடைத்தால் திருமணம் முடிக்க தயாரா ?”

                    அவ்வளவுதான்………… பெரியண்ணா அழைத்துவரப்பட்டார்… வீட்டில் எல்லோருக்கும் நம்பிக்கையே வரவில்லை. ஒவ்வொருவரின் கண்களிலும் வியப்பும் ஆவலும் இருந்தன.அண்ணன் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.கொஞ்சமாவது சீர் செய்ய வேண்டும்….. அதற்கு அவகாசம் வேண்டும் அல்லவா…. ஆனால் அகில் சீர்வரிசை வேண்டாம் என்று மறுத்து பெண்ணை மட்டும் திருமணம் செய்து தங்களுடன் புகுந்த வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொன்னார். அவ்வளவுதான் திருமண ஊர்வலம் மிகவும் உற்சாகத்துடன் ஷாலினி மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு மிகுந்த கௌரவத்துடன் ஊர் திரும்பியது. அன்றிலிருந்து இன்றுவரை மருமகள் ஷாலினியின் உணர்வுகள் சமமாக கவனிக்கப்பட்டன.மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் அவள் நடந்து கொண்டாள்.இது என் புகுந்த வீடு;சில வருடங்களுக்கு முன்னால் இந்த வீட்டின் சரிய விருந்த கௌரவத்தை சமயத்தில் தக்க வைத்து எழில் மிகுந்த வீடாக மாற்றிக் கொடுத்தேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சரியான இலக்கு இருந்தது. ஆனால் என்னமோ தெரியவில்லை எல்லாம் சரியாக இருந்தாலும் இன்னும் சில விஷயங்கள் பிடிபடவில்லை.

               பெண் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பாலமாக வாழ்பவள்.பொருளாதாரீதியில் உயர்ந்த தன் புகுந்த வீட்டின் வாழ்க்கையில் தாழ்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிறந்த வீட்டின் பெருமை எடுபடுவதில்லை எனும் போது அப் பெண் பரிதவித்துப்போகிறாள்.

               



Rate this content
Log in

Similar tamil story from Classics