Dr.PadminiPhD Kumar

Classics

3  

Dr.PadminiPhD Kumar

Classics

நான் வைத்த முதல் கொலு

நான் வைத்த முதல் கொலு

3 mins
262


                1970 ஆம் ஆண்டு.நான் பிஎஸ்சி படிப்பதற்கு திருச்சி சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவியாக வலம் வந்து கொண்டிருந்தேன்.அந்த கல்லூரியில் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர்.கல்லூரிநிறுவனர் திரு.இராமசாமி மற்றும் கல்லூரியில் இராமர் கோயில் ஒன்றும் இருந்தது.வைஷ்ணவம் சார்ந்த மக்கள்.நானோ சிவகாசியில் பிறந்து வளர்ந்து நாடார் சமூகத்தினர் குடும்பத்தைச் சேர்ந்தவள்.

                கல்லூரியில் சேர்ந்த புதிதில் நான் பேசும் மதுரைத் தமிழ் அவர்களுக்குப் புரியவில்லை; அவர்கள் பேசும் பிராமண பாஷை எனக்குப் புரியவில்லை.முதலாமாண்டு மாணவிகளுக்கான ஹோம் மேனேஜ்மென்ட் பிராக்டிகல் வகுப்பு இன்று.மிகவும் ஆர்வத்துடன் 45 மாணவிகளும் தலைமைப் பேராசிரியை முன்பு நின்று கொண்டிருந்தோம்.

                 அட்டவணை வரிசையின் படி நான்கு நான்கு பெயர்களை வாசித்து எங்களை பத்து குழுக்களாகப் பிரித்தார்.அன்று எங்களுக்கு கொடுத்த முக்கிய தலைப்பு 'வீட்டை அலங்கரித்தல்'. ஒவ்வொரு குழுவிற்கும் பின்னர் அதன் பின்னணியும் தெரிவிக்கப்பட்டது, உதாரணமாக ஒரு குழுவிற்கு சொல்லப்பட்ட பின்னணி 'நடுத்தர குடும்ப வீட்டு வாசலில் அலங்காரம் '.அந்தக்குழு மாணவிகள் கோலம் போட்டு அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள்.

                 எங்கள் குழுவிற்கு சொல்லப்பட்ட பின்னணி 'இன்று உங்கள் வீட்டில் நவராத்திரி '.இதைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.எங்கள் குழுவின் இரண்டு மாணவிகள் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்கள்.அவர்கள் உடனே கொலு வைத்து அலங்காரம் செய்ய முடிவு செய்தனர்.

                  சிவகாசியில் பிறந்து வளர்ந்த எனக்கு சிவராத்திரி, திருவாதிரை, பத்ரகாளியம்மன், மாரியம்மன் திருவிழாக்கள் மட்டுமே தெரியும்.புரட்டாசிமாதம் சைவம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்குப் போவார்கள்; மார்கழி மாதத்தில் நான்கு மணி அளவில் பெருமாள் கோவிலில் ஊரே கேட்கும் வண்ணம் திருமதி.பட்டம்மாள் பாடிய திருப்பாவை ஒலி பரப்பப்படும்.அப்போது எழுந்து பல் கூட விலக்காமல்,பஜனை கோஷ்டியுடன் கோவில் கோவிலாகச் சென்று சுண்டல் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.ஆனால் சிவகாசி மக்கள் வீட்டில் கொலு வைத்து சுண்டலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என நினைக்கிறேன்.

                  ஊர்க்கதை ஒரு பக்கம் இருக்கட்டும்; நான் மெரிட் ஸ்காலர்ஷிப் மூலம் படிக்க அனுப்பி வைக்கப்பட்டவள். எனவே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு கொலு வைப்பது எப்படி எனத் தெரிந்து கொள்ள சக மாணவிகளிடம் நட்புடன் விபரம் கேட்டேன்.

                ஹோம் சயின்ஸ் கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள பெரிய நீண்ட ப்ராக்டிகலுக்கான வகுப்பறையை பத்து குழுவிற்கும் பிரித்துக் கொடுத்தனர்.எங்களுக்கென கொடுத்த இடத்தில் முதலில் கொலுவுக்கு படிகள் அமைக்கவேண்டும் என்று தோழி கூறினாள்.இப்பொழுது எங்களுக்குள் டீம் ஸ்ப்ரிட் வேலை செய்ய ஆரம்பித்தது.

                தோழி ஒவ்வொரு ஸ்டெப்பாக விவரிக்க விவரிக்க நாங்கள் தோழியின் கருத்துக்களை நன்கு உள் வாங்கி கொலு வைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டோம்.வகுப்பறை பெஞ்சுகளை ஒன்றன் மேல் ஒன்றாக முதல் வரிசையில் ஆறு, அடுத்தடுத்த வரிசையில் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என அமைத்து ஆறு படிகள் அமைத்தோம்.

                அடுத்ததாக படிகளின் மேல் வெள்ளை வேட்டியை விரிக்க வேண்டும் என்று தோழி சொன்னதும், கல்லூரியில் வேட்டிக்கு எங்கே போவது என முழித்தோம்.அப்போது விடுதியில் தங்கி படிக்கும் மாணவி மெஸ்ஸில் தங்கும் சமையல்காரர் வேட்டியைக் கேட்கலாமா எனச் சொல்ல, தோழி,"அய்யய்யோ, அபசாரம், அபசாரம், அவர் ஆஞ்சநேய பக்தர்; பீஷ்மராட்டம் பிரம்மச்சாரியாக்கும். " எனச் சொல்ல நால்வரும் கொல்லென சிரித்தோம்.

             நான் மெதுவாக தோழிகளிடம்,"துணி விரிக்க வேண்டும் என்பது தானே வழக்கம்.அதற்கு கலர் துணி ஸ்டோர் ரூமில் இருக்கும் போது அதைப் பயன்படுத்தலாம்.தவறில்லை என எனக்குத் தோன்றுகிறது."நான் சொன்னதை ஏற்றுக் கொண்டனர்.ஸ்டோர்ரூமில் மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என பல வண்ணங்களில் பெரிய அளவில் துணிகள் இருந்தன.

             எந்த வண்ணத் துணி விரிக்க என யோசிக்க ஆரம்பித்தோம்.கொலுவைப் பொறுத்தவரை அடுக்கப்படும் பொம்மைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.நீலவண்ணத் துணி தான் நல்லது என நினைக்கிறேன் என்று நான் சொல்ல நால்வரும் நீல வண்ணத் துணியை விரித்து பொம்மைகளை அடுக்க ஆரம்பித்தோம்.

           நான் வைத்த முதல் கொலுவைப் பார்த்துப் பார்த்து பரவசம் பட்டேன்.

ஆனால் அதன் பின்னர் செய்ய வேண்டிய முக்கிய விபரம் தான் என்னை பின்னடையச் செய்தது.ஆம், தோழி இப்போது நாம் போய் பேராசிரியைகள் அனைவரையும் கொலு பார்க்க வருமாறு அழைக்க வேண்டும் என்றாள்.இதுவரை யாரிடமும் எதற்காகவும் போய் நிற்கும் வழக்கம் இல்லாத நாடார் சமுதாயத்தில் பிறந்த நான் அழைப்பதற்காக போக வேண்டும் என்ற வழக்கத்தில் பின் நின்றேன்.

பேராசிரியை நான் ஏன் பின்னால் மறைந்து நிற்கிறேன் எனக் கேட்டார்.தோழி ஏதோ கூறிச் சமாளித்தாள்.இன்றும் நான் கொலு வைப்பது வழக்கம் தான்; ஆனால் கொலு பார்க்க வருமாறு அழைக்க தயங்குவதும் வழக்கமாக உள்ளது.



Rate this content
Log in

Similar tamil story from Classics