கதை தர்பார்!
கதை தர்பார்!
சிவகாமியின் சபதம்!
ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்பும் ஒவ்வொரு வகையில் சிறப்புதான். நான் படித்த சிறப்பான புத்தகங்களில் முக்கியமான ஒன்று எழுத்தாளர் கல்கி அவர்களின் ‘சிவகாமியின் சபதம்’.
‘சிவகாமியின் சபதம்’ பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளி வந்த வரலாற்று நாவல். பல்லவர் கால கதாபாத்திரங்களும் சம்பவங்களும் நிறைந்த விறுவிறுப்பு குறையாத கதை. காஞ்சி, மாமல்லபுரம், வாதாபி போன்ற வரலாற்றுத் தளங்களில், நரசிம்ம பல்லவர், மகேந்திர பல்லவர், பரஞ்சோதி, புலிகேசி போன்ற உண்மைப் பாத்திரங்களுடன் ஆயனர், சிவகாமி, நாகநந்தி, குண்டோதரன் போன்ற நூற்றுக் கணக்கான கற்பனைப் பாத்திரங்களை இணைத்து கல்கி நடத்தும் கதை தர்பார் சிவகாமியின் சபதம்.
சாளுக்கிய மன்னன் புலிகேசி காஞ்சியை முற்றுகையிடுகிறான். கலைகளில் மனம் லயித்திருந்த மகேந்திரபல்லவர் போரைத் தவிர்த்து புலிகேசியை நண்பனாக ஏற்று தன் மாளிகையில் இருத்துகிறார். பல்லவ ராஜ்ஜியத்தின் அமைதியான சூழலையும் சிற்பம் மற்றும் பல கலைப் படைப்புகளையும் காணச்செய்கிறார். நடனக்கலையின் சகல சாத்திரங்களையும் வெளிப்படுத்தும் நாட்டியத்தாரகை சிவகாமியின் நடனத்தையும் காணச் செய்கிறார். நல்லவன் போல் நடித்து வெளியேறும் புலிகேசி நயவஞ்சகமாக நடந்து பல்லவ நாட்டின் பல்வேறு அம்சங்களையும் அழித்து, ஆடவரையும் பெண்டிரையும் நரசிம்ம பல்லவரின் உயிர்க் காதலி நாட்டியப்பேரொளி சிவகாமியையும் வாதாபிக்கு சிறை பிடித்துச் சென்று விடுகிறான். நரசிம்மர், ஒற்றர்கள் மூலமாகவும் தானே மாறுவேடத்தில் நேரடியாக வாதாபி சென்றும் சிவகாமியைச் சந்தித்து காஞ்சிக்கு அழைக்கிறார். ஆனால் நாட்டையும் மக்களையும் தன் தந்திரத்தால் துவம்சம் செய்து தன்னை கவர்ந்து வந்த வாதாபி மீது நரசிம்மவர்மரே படையெடுத்து வந்து அதே போல் வாதாபியை துவம்சம் செய்து தன்னை அழைத்து சென்றால் மட்டுமே தான் காஞ்சி திரும்ப சபதம் செய்திருப்பதாக கூறி, சிவகாமி வர மறுத்து விடுகிறாள்.
இதில் நரசிம்மர் – சிவகாமி – ஒற்றன் சத்ருக்னன் பற்றி வரும் பகுதியில் சத்ருக்னன் சிவகாமியை நேரில் கண்ட முக்கியமான விஷயத்தை உடனடியாக சொல்லாமல் இழுத்தடிக்கும் போது மாமல்லனின் கோபமும் அவசரமும் ராமாயணத்தில் வரும் ஒரு காட்சியை எனக்கு நினைவூட்டியது. அனுமன் சீதாபிரா
ட்டியை இலங்கையில் சந்தித்த விபரத்தை ராமரிடம் சொல்ல வருகிறார். ‘சீதையை கண்டேன்’ என்று அனுமன் சொல்லியிருக்கலாம். ஆனால் ராமனின் எதிர்பார்ப்பை முற்றிலும் உணர்ந்த அனுமன் ‘கண்டேன் சீதையை” என்று ‘கண்டேன்’ என்கிற வார்த்தையை முதலில் சொல்கிறார். சத்ருக்னன் அந்த அளவுக்கு கூட இங்கிதம் தெரியாதனவனா? கல்கி ஏன் அப்படி அமைத்தார் என்று யோசித்தேன். சட்டென்று புரிந்தது. அனுமன் ராமதூதன்!. சத்ருக்னனோ ராஜதூதன்!
மகேந்திரவர்மர், தான் இறக்கும் தருவாயில், நரசிம்ம பல்லவர் பாண்டிய ராஜகுமாரியை திருமணம் புரிந்து சிம்மாசனம் ஏற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். நரசிம்மருக்கு சிவகாமியின் மீது இருக்கும் தீராக்காதல் அறிந்தும் அவர் அவ்வாறு கேட்டுக் கொள்வகிறார். முதலில் மறுக்கும் நரசிம்மர், பின், சூழல் அறிந்து ஏற்கிறார். மகேந்திரர் அதற்கான காரணங்களை சொல்லும் போது: 'மன்னர்களுக்கு என்று சுயமாக எதுவும் இல்லை. மக்களின் நன்மைக்காக எதையும் தியாகம் செய்வதே ராஜகுல தர்மம். பாண்டியன் மகளை மணம் செய்வதால் பல்லவ நாட்டிற்கு ஏற்படும் பலமும், வாதாபி படையெடுப்பிற்கு அது எங்கனம் உதவும் என்பதையும் எடுத்துரைக்கிறார். ஒரு வேளை மாமல்லர் நரசிம்மர், பாண்டிய மன்னரின் மகளை மணக்க சம்மதிக்கவில்லை என்றால், நாட்டு நலனை கருத்தில் கொண்டு, தான் எந்த அளவு தியாகம் புரிய தாயாராய் இருந்ததையும் எடுத்துக் கூறுகிறார். நாடும் மக்களும் அவர்களின் நலனுமே நல்லாட்சி புரிந்த மன்னர்களுக்கு பிரதானமாக இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். புத்தபிட்சு நாகநந்தியால் வெட்டி விடப்பட்ட திருப்பாற்கடல் கால்வாயை திரும்ப சமன் செய்ய குண்டோதரன் எடுத்த முயற்சியும், அதற்காக நாகநந்தியுடன் புரிந்த மல்யுத்தமும், சிவகாமியை காக்க வேண்டிய பொறுப்பும், அதற்காக குண்டோதரன் பழனி முருகனிடம் வேண்டிக் கொண்டதும்.. அவன் பாத்திரப் படைப்பை உயர்த்திக் காட்டும் சம்பவங்கள்.
எவ்வளவு முயன்றாலும் சிவகாமியின் சபதம் படிப்பதால் ஏற்படும் சுவாரஸ்யத்தை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இங்கே கோடிட்டு காட்ட முடியாது!