கற்றது கையளவு
கற்றது கையளவு
மாடு மேய்த்துக் கொண்டிருந்த சரோஜா கையில் ஏதோ புத்தகத்தை வைத்திருப்பதைக் கண்டு தூரத்தில் இருந்தபடி விமலா பார்த்துக்கொண்டிருந்தாள். இவளை அவங்க அப்பா, அம்மா எவனுக்காவது அடிமை சாசனமா அனுப்பணும்னு நாலு மாடு சீதனமாக வாங்கி வச்சிருக்காங்க!
இவ என்னடான்னா மாடுகளை ஓட்டிட்டுவந்து புத்தகத்தைப் படிச்சிட்டே இருக்காளே! என யோசித்தபடி சரோஜா கையில் இருந்த புத்தகத்தின் தலைப்பை அருகில் சென்று படித்தாள். ஹவ் டு மேனேஜ் த வோர்ல்டு என சத்தமாகப் படித்துவிட்டு உனக்கு இந்த புக் தேவையா சரோஜா என்றாள்.
நாலு ஏக்கர் நிலத்தில் காய், பழம், மரம்னு வச்சிருக்கேன். இப்ப நாலு மாடு இருக்கு..அந்த நிலத்துக்கெல்லாம் உரம் வேண்டும். உலக வாழ்க்கை அடிப்படையே நெல்தான். இப்ப பாரு! வயிற்றுக்கு உணவு எவ்வளவு முக்கியம்னு கரோனா காட்டுது...பசுமைப்புரட்சி எங்கோ ஒரு கிராமத்திலிருந்துதான் உருவாகுதுன்னு இந்த புக்ல எழுதி இருக்காங்க!
நீ பத்துவரைக்கும்தானே படித்திருக்கிறாய்?
அதுக்கென்ன! எங்க அரசு பள்ளி ஆசிரியை ஆங்கிலம் நல்லாவே சொல்லி கொடுத்தாங்க! படிக்க வசதி இல்லைன்னாலும் நாமே மேலே தேடிப் படிக்க கத்துக்கணும். எனது குடும்பத்திற்கு இந்த படிப்பு பணம் சம்பாதித்து தரும் இல்லையா!