இந்தப் பாம்புதான் கடிச்சது
இந்தப் பாம்புதான் கடிச்சது


இந்தப் பாம்புதான் கடிச்சது!’-கோவை மருத்துவமனை ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த போதை இளைஞர்கோவையில் தன்னைக் கடித்த நாக பாம்பை உயிருடன் பிடித்து பையில் போட்டுக்கொண்டு இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தராஜன்.
பெயின்டிங் வேலை செய்து வருகின்றார். இவர், பணியை முடித்துவிட்டு, நேற்று இரவு சௌரிபாளையம் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள்ளது.
இந்தத் தகவலை அறிந்த செளந்தராஜன் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். மது போதையில் இருந்த சௌந்தராஜன், அந்தப் பாம்பை அடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நாகப்பாம்பு அவரைக் கையில் கடித்துவிட்டது.
இதையடுத்து, அந்தப் பாம்பைப் பிடித்த சௌந்தராஜன், அதை ஒரு பையில் போட்டுக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். இரவு நேரத்தில், ஒருவர் பாம்பை உயிருடன் பிடித்து வந்ததைப் பார்த்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாம்பை அரசு மருத்துவமனை பணியில் இருந்தவர்களிடம் காட்டிவிட்டு மீண்டும் அந்தப் பாம்பைப் பையில் போட்டு செக்யூரிட்டிகளிடம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த நாகப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,
அவர்கள் அந்தப் பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர். இதனிடையே பாம்பு கடித்ததில் காயமடைந்த சௌந்தராஜனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அந்தப் பகுதி மக்களிடம் கேட்டதற்கு, ``இந்தப் பகுதிகளில் அவ்வப்போது பாம்பு நடமாட்டம் இருக்கும். பாம்பைப் பிடிப்பதற்கென்று முறைப்படி பயிற்சியும் அனுபவமும் இருப்பவர்கள் மட்டுமே அந்தப் பணிகளில் இறங்க வேண்டும். இல்லையென்றால் இப்படிதான் ஆகும்” என்றனர்.