இந்திய நாடு என் வீடு!
இந்திய நாடு என் வீடு!
ஒரு பெரும் கூட்டம் கூடி இருந்தது. அதனுள் ஒருவர் ஊடுருவினார். ஒரு மணி நேரத்தில் வெளியே வந்து விட்டார். இன்னொரு பெரும் கூட்டம். இன்னொருவர் ஊடுருவினார். வெளியில் வர ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டார். எல்லோரும் இரண்டாமவரையே பாராட்டினர்!
காரணம், முதல் கூட்டத்தில் இருந்த நபர்கள் சில கோடி. இரண்டாவது கூட்டத்தில் இருந்த நபர்கள் பல கோடி! அது போலத்தான். மற்ற நாடுகளில் ஜனத்தொகை சில கோடி. நம் நாட்டின் ஜனத்தொகை நூற்று முப்பது கோடி.
ஒரு தனி மனித அடிப்படைத் தேவைகளை சில கோடி பேருக்கு பூர்த்தி செய்வது எளிது. ஆனால் அதுவே ஒரு தனி மனித அடிப்படைத் தேவைகளை நூற்று முப்பது கோடி பேருக்கு பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதல்ல. அதை எனது இந்தியா இன்று செய்து கொண்டிருக்கிறது.
எவ்வளவு சாதிகள், சமயங்கள்! - என்றாலும் நம் இந்தியா அமைதியாகவே இருக்கிறது.
எவ்வளவு மதங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள்! - என்றாலும் நம் நாடு பக்தியுடனேயே இருக்கிறது.
எவ்வளவு கலாச்சாரங்கள், பண்பாடுகள், நாகரீகங்கள்! - என்றாலும் நம் நாடு மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
">
எவ்வளவு வித்தியாசமான மனிதர்கள்! என்றாலும் நம் இந்தியா மனிதநேயத்தில் சிறந்தே விளங்குகிறது.
எவ்வளவு தொழில்கள்! எவ்வளவு மொழிகள்! - என்றாலும் நம் நாடு செழுமையாகவே இருக்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நம் இந்தியா மனிதத்தின் அடையாளமாகவே விளங்குகிறது.
ஆனால்.. இதோடு மனநிறைவு கொண்டு விட முடியுமா?
நம் நாட்டை, மக்களை மேலே வளர விடாமல் தடுக்கும் சக்திகளை ஒழிக்க வேண்டும்!லஞ்சங்கள் ஊழல்கள் ஒழிய வேண்டும்! அனைத்து மக்களும் பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைய வேண்டும்!அபரிமிதமான மனித வளத்தை நமக்கு சாதமாக மாற்றி அமைக்க வேண்டும்!
நம் பெருமையின் சின்னம் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசாக உலகின் உச்சிக்கு நாம் போக வேண்டும்!
முடியும்! நிச்சயம் முடியும்! நம் நாடு அதற்கேற்ற வளங்களை உடையதுதான்! அந்த வளங்களை மென்மேலும் பெருக்கி,, தடைக் கற்களை நொறுக்கி ஒரு உன்னதமான நிலையை நமது இந்தியா அடையப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!
( நமது இந்தியாவை மேலும் காண்போம்)