STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

ஹாஸ்பிடலில் ஒரு நாள் (கலைமகள் சரஸ்வதி தேவிக்கு இது சமர்ப்பணம்)

ஹாஸ்பிடலில் ஒரு நாள் (கலைமகள் சரஸ்வதி தேவிக்கு இது சமர்ப்பணம்)

4 mins
277

 

அன்று திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமை இரவில் பல் வலி ஆரம்பித்தது. வலது பக்க கடைவாய்ப்பல் வலி சிறிது நேரத்தில் வாய் முழுவதும் பரவி எல்லா பற்களும் வலிப்பது போல் தோன்றவும் பயந்து போய் காலையில் எழுந்ததும் பக்கத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல முடிவெடுத்தேன். மழை வேறு பெய்ய ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் ஓ.பி. வார்டு 8 மணிக்கு திறந்து விடுவார்கள் என்பதால் 8 மணிக்கு கணவர் தன் காரில் என்னை கல்லூரி ஹாஸ்பிடல் வாசலில் இறக்கி விட்டார். 60 வயதிற்குப் பின் ஹாஸ்பிடல் போக மிகவும் தயங்குவேன்.பிளட் டெஸ்ட், ஸ்கேன், ஐ சி யு என்று சர்வ சாதாரணமாக அங்கு நடைபெறும் நடைமுறைகளைப் பார்த்து மிரண்டு போய் செக்கப்பிற்கு கூட ஹாஸ்பிடல் பக்கம் போக தயங்கி முடிந்த வரையில் ஹாஸ்பிடல் பக்கம் போவதைத் தவிர்த்துக் கொண்டே இருந்தேன்.

" பல் வலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது பழமொழி. இந்த இரண்டு வலிகளையும் தான் நான் அடிக்கடி அனுபவிக்க நேரிடும். வயிற்று வலிக்காக தம்பி ஒருமுறை எண்டோஸ்கோபி செய்து வயிற்றுக்குள் அல்சர் இருப்பதை பார்த்ததாகச் சொல்லி மாத்திரைகள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று சொன்னதன் பேரில் ஒரு வருடம் விடாமல் ஆன்டாசிட் மாத்திரைகள் சாப்பிட்டதில் குணமாயிற்று. அதன் பின் 20 ஆண்டுகளாக வயிற்றுவலி பிரச்சனை இல்லை. இருந்தாலும் எப்போதாவது வலிப்பதுபோல் தெரிந்தால் உடனே பான்(PAN) மாத்திரை போட்டுக் கொள்வேன்.

 பல் வலிக்கும் வயிற்று வலிக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பார்கள். ஒவ்வொரு பல்லாக சொத்தை வைப்பதும் அதற்காக பல் டாக்டர்கள் தற்சமயம் ரூட் கேனல் ட்ரீட்மெண்ட் என்ற வைத்திய முறையை பின்பற்றுவதும் இன்றைய பாரம்பரிய பல் வைத்திய முறையாக உள்ளது. 50, 60 வயதுகளில் ரூட் கேனல் ட்ரீட்மென்டிற்கு பிறகு அந்தப் பல்லுக்கு காப் செய்து மாட்டுவார்கள். அதுதான் காஸ்ட்லியான ட்ரீட்மெண்ட். நானும் இதை எப்படியும் தவிர்க்கும் முறையை கையாள வேண்டும் என நினைத்தாலும் முடியவே இல்லை. இப்பொழுது எனக்கு எழுபது வயது.ஓ.பி.கவுண்டருக்குச் சென்று பல் வலிக்கான ட்ரீட்மென்ட் எடுப்பதற்காக வந்திருப்பதாக சொன்னதும் கவுண்டர் மறைப்புக்குப் பின் அமர்ந்திருந்த பெண் ஒரு ரெஜிஸ்டரில் என் பெயர், வயது, விலாசம், போன் நம்பர் போன்ற விவரங்களை எழுதிவிட்டு தன் முன் இருந்த கம்ப்யூட்டரின் கீபோர்டை தட்டி பதிவு செய்துவிட்டு ஒரு விசிட்டிங் கார்டு போன்ற ஒரு கார்டை என்னிடம் நீட்டி 20 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றார். நானும் உடனே என் பர்ஸைத் திறந்து 20 ரூபாய்க்கு சில்லறையாக இருக்கிறதாக எனத் தேட ஆரம்பித்தேன். ஏனென்றால் பக்கத்தில் உள்ள கவுண்டர் பில் பேமென்ட் கவுண்டர். அதில் பல் மருத்துவக் கல்லூரி மாணவி ஏதோ பில் கட்டுவதற்காக கூகுள் பே மூலம் செலுத்த ரொம்ப நேரமாகவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். நல்ல வேளையாக என்னிடம் சில்லறை இருந்ததால் பணத்தைக் கட்டி விட்டு கவுண்டரிடம் உள்ள பெண் கூறியபடி நம்பர் ஒன் ரூமுக்குப் போனேன்.

 நம்பர் ஒன் என்பது பிடிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கான பிரிவு என்பது புரிந்தது.அங்கே இரண்டு மாணவர்கள் என் பல்லை செக் அப் செய்தபின், "பயப்படும்படியாக பிரச்சனை எதுவும் இல்லை; நீங்கள் மேலே ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருக்கும் நம்பர் 8 என்ற ரூமுக்கு போங்கள்" என்றார்கள். நானும் படிகளில் ஏறி மேலே சென்று நம்பர் 8 என்று போட்டிருந்த ரூமுக்கு முன் போய் நின்றேன். கண்ணாடி கதவுகளுக்கு முன் எனது இடது பக்கவாட்டில் ஒரு மேஜையும் அதன் மேல் இரண்டு கம்ப்யூட்டர்களும் இருந்தன. கம்ப்யூட்டர்களுக்கு முன் பெண் ஊழியர்கள் அமர்ந்திருந்தனர்.

இந்தப் பல் மருத்துவக் கல்லூரியும் அதனுடன் இணைந்த ஹாஸ்பிடலும் சென்னை நகரின் புறநகர் பகுதியில் இருக்கிறது. புறநகர் பகுதி என்பதால் இங்கே நகரத்து மாடர்ன், அவசர வேகம், ஆங்கில வாடை, எதையும் எதிர்பார்க்க முடியாது. பெண் ஊழியர்கள் அனைவரும் இந்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் நடை, உடை, பேச்சு அனைத்தும் அதைப் பறைசாற்றின. கீழே கவுண்டர்களில் பார்த்த பெண்களை விட இவர்கள் சற்று முன்னேறியவர்களாக இருந்தனர். ஏனென்றால் தங்கள் வேலை ரிஜிஸ்டரில் எழுதி கம்ப்யூட்டரில் பதிவு செய்வது மட்டுமே என்பதால் மீதி நேரத்தில் இருவருமே தத்தம் செல்போன்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். புறநகர் பகுதி என்பதால் கல்லூரி மற்றும் ஹாஸ்பிடல் மேலாளர்கள் செல்போன் தடையை இவர்களுக்கு அமல்படுத்தவில்லை என்று தோன்றியது. நல்ல வேளையாக பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் யாரும் செல்ஃபோன் பயன்படுத்தவில்லை. வெளியே இருக்கைகளில் மற்ற நோயாளிகளுடன் காத்திருந்த என்னை எனக்காக பதிவு செய்யப்பட்ட டாக்டர் கண்ணாடிக் கதவைத் திறந்து என் பெயர் சொல்லி கூப்பிடவும் உள்ளே சென்றேன். 

நம்பர் 8 என்பது எம்டிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கான பிரிவு என்பது புரிந்தது. ஒரு மணி நேரத்திற்குள் பிடிஎஸ் கீழ்நிலை படிப்பிலிருந்து எம்டிஎஸ் மேல்நிலைப் படிப்பிற்கு என்னையே பிரமோட் செய்தது போன்ற உணர்வு ஏற்பட எனக்குள் சிரிப்பு வந்தது.டாக்டர் என்னை பரிசோதித்து விட்டு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றார். சரி என்று கூறிவிட்டு எக்ஸ்ரே எடுக்கும் பிரிவிற்குச் சென்றேன். எக்ஸ்ரே எடுக்கும் இடம் கீழ் தளத்தில் கல்லூரிக்கு வெளியே தனிப் பிரிவாக இருந்தது. நான் அங்கே சென்றபோது கவுண்டரில் ஒரு பெண் ஊழியர் அமர்ந்திருந்தார். இது ஆரம்ப காலத்தில் எவ்வாறு இயங்கிக் கொண்டிருந்ததோ அவ்வாறே இருப்பது போல் தோன்றியது. மேஜை மேல் கம்ப்யூட்டர் கிடையாது; ரிஜிஸ்டர் நோட்டு மட்டுமே இருந்தது.அந்தப் பெண் ஊழியருக்கு நடுத்தர வயது இருக்கும். என்னை நாற்காலியில் காத்திருக்கச் சொன்னார், ஏனென்றால் எனக்கு முன்பாக வந்த நபர் காத்துக் கொண்டிருந்தார். நான் நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தேன்.

 அப்போது அங்கே மற்றொரு பெண் ஊழியர் வந்தார். அவரைக் கூப்பிட்டு மேஜை முன் அமர்ந்திருந்தவர் குனிந்து மேஜைக்குப் பின்னால் கீழே வைக்கப்பட்டிருந்த பையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து அவரிடம் நீட்டி," நீ இன்னும் காலை டிபன் சாப்பிடவில்லையே! இந்த டிபனைச் சாப்பிட்டுவிட்டு வேலை செய்.யாரெல்லாம் டிபன் சாப்பிட வில்லையோ.... அவர்களையும் வந்து வாங்கிக்கச் சொல்" என்றார். "சரிக்கா" எனச் சொல்லி வந்தவர் பையை வாங்கிக் கொண்டு சென்றார். கல்லூரி வளாகத்திற்குள் ஒரு கேண்டின் இருப்பதும் அங்கே காலை டிபன், மதியம் சாப்பாடு என்று டாக்டர்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுவதும் புரிந்தது. சிறிது நேரத்தில் சற்று வயதான பெண் ஊழியர் ஒருவர் கையில் பினாயில் பாட்டில், மாஃப் இவற்றோடு உள்ளே நுழைந்தார். அறைகளை சுத்தம் செய்யும் ஊழியர் என்பது புரிந்தது. அவரைப் பார்த்ததும், "காலை டிபன் சாப்பிட்டாயா?" எனக் கேட்க, அவர் "சாப்பிட்டேன்ம்மா" என்று சொல்லிவிட்டு தன் கையில் இருந்த பொருட்களை உள் பக்க அறைக்குள் சென்று வைத்து விட்டு வந்தவர் மேஜைக்கு முன் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.

" ஆமா... உன் வீட்டுக்காரர் சாவுக்கு எல்லோரும் வந்தார்களாமே!"

" ஆமாம்மா ,என் சம்பந்தி வீட்டுக்காரர்கள் கூட சம்பந்தியின் அண்ணா, தம்பி என எல்லோரோடும் வந்திருந்தாங்க. எல்லோரையும் ஒன்னாச் சேர்த்து விட்டு போய் சேர்ந்துட்டாரும்மா".

 அந்தப் பெண்களின் பேச்சில் வாழ்வியலின் எதார்த்தத்தைப் புரிந்த மனப்பக்குவம் தெரிந்தது. மழைவிடவே இல்லை; தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. எனக்கு முன் வந்த நபர் முணுமுணுக்க ஆரம்பித்தார்," பல் வலி தாங்க முடியவில்லை. எக்ஸ்ரே எடுக்க எப்போதுதான் வருவார்களோ..." என அவர் சொல்லி முடிக்கவும் ஒரு டாக்டர் வந்து அவர் பெயர் சொல்லி கூப்பிடவும் அவர் எழுந்து விரைவாக எக்ஸ்ரே ரூமிற்குள் சென்றார். சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்ததும் மேஜை முன் அமர்ந்திருந்த பெண் ஊழியர் அவரிடமிருந்து பெயர் சீட்டு, எக்ஸ்ரே இவைகளை வாங்கிப் பார்த்து, ரிஜிஸ்டரில் பதிவு செய்துவிட்டு எக்ஸ்ரே க்கு பணம் கட்ட வேண்டும் எனச் சொல்லிப் பணம் கட்டும் கவுண்டருக்குப் போகச் சொன்னார். இந்த நேரத்தில் டாக்டர் என் பெயரை கூப்பிட நான் எழுந்து எக்ஸ்ரே ரூமுக்குச் சென்றேன். என்னையும் எக்ஸ்ரேக்கு பணம் கட்ட வேண்டும் என்று சொன்னதும், பணம் செலுத்தும் கவுண்டருக்கு சென்று பணத்தை செலுத்தியதும், மீண்டும் "நம்பர் எட்டுக்குப் போய் டாக்டரைப் பாருங்கள்" என்றார்கள். நானும் டாக்டரிடம் சென்றதும் அவர் எனக்கு ரூட் கேனல் ட்ரீட்மென்ட் கொடுத்தார். தற்போது பல்வலி இல்லை. கிளம்பு முன் அந்த ஹாலின் நடுவில் ஒரு சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அது வெள்ளை உடையில் முகத்தில் புன்னகைத்தவள கையில் வீணையுடன் அமர்ந்த கலைமகள் சரஸ்வதி தேவியின் சிலை. மனதில் இருந்த பயம் நீங்கி நிறைவான, அமைதியான சிந்தனைகளுடன் ஹாஸ்பிடலை விட்டு வெளிவந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


Rate this content
Log in

Similar tamil story from Classics