சுத்தமே சுகாதாரமானது
சுத்தமே சுகாதாரமானது


வடபழனி ஆற்காடு சாலை எப்போதும்போல ஜே! ஜே! என்றிருந்தது.
மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. முட்டுச் சந்தில் ஹாயாக அமர்ந்து வரிசையாக நின்ற வண்டிகளை எண்ணியபடி சிகரெட் பிடித்தபடி பதினைந்து வயது சிறுவன் நின்றிருந்தான்.
கீழே நேற்று குடித்துப் போட்ட மது புட்டிகளைப் பொறுக்கி அதில் இருந்த மிச்சத்தைத் தன் வாயில் ஊற்றியபடி கோணியில் புட்டிகளைப் போடத் தொடங்கினான்.
சுவரில் இருந்த சினிமா போஸ்டரைக் கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்த கிழவன் கண்ணாயிரம் சுவர் மேலேயே எச்சில் துப்பி அதன் அருகிலேயே சிறுநீரும் கழித்தான். யாரும் வருவார்கள் என்று கூடப் பார்க்காமல் அவன் செய்த செயலைக் காக்கை பார்த்தபடி அவன்தேலைமேல் எச்சத்தை வாரிக் கொட்டியது.
பார்த்தும் பார்க்காதது போல கண்ணைத் திருப்பிக்கொண்டு பிளாஸ்டிக் குடங்களைக் கையில் பிடித்தபடி நைட்டி அணிந்த தோள் மேலே ஒரு துண்டைச் சரியவிட்டபடி சைக்கிளை ஒரு கையில் ஓட்டினாள்.
என்ன அம்சவல்லி! மழை கொட்டுது! உங்க வீட்டுக் கிணறில் இன்னமும் தண்ணீர் வரலையா? என்றாள் கனகாப்பாட்டி.
தூர் வார வர்றேன்னு போனவங்க இன்னமும் வரலை பாட்டி!
‘சொத்‘தென குப்பை மேல்ஃப்ளாட்டிலிருந்து சரியாக குப்பைத் தொட்டியில் விழ அதில் தெறித்த ஏதோ திரவம் உட்கார்ந்திருந்த பாட்டியின் மேல் தெறித்தது.
அம்சவல்லி பாட்டியின் முகம் கடுமையானதை உணர்ந்து என்றுதான் இந்த மக்கள் திருந்தப்போகுதோ! என்றபடி சுவரில் ‘சுத்தமே சுகாதாரமானது” என்பதைப் படித்தபடி ஓட்டம் பிடித்தாள்.