STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

அதிதி தேவோ பவ

அதிதி தேவோ பவ

5 mins
258

                        அதிதி தேவோ பவ

                மதுரை மாநகருக்கு புறத்தில் அமைந்திருப்பது பசுமலை கிராமம். கிராமம் பச்சைப்பசேலென பசுமையாக இருக்கும். கிராமத்து மக்களும் மிகவும் கண்ணியமானவர்கள்.இக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் கன்னையா பிள்ளை. மனைவி காமாட்சி அம்மாள். கருத்தொருமித்த இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இதனால் இருவரும் தங்கள் உறவினர்களிடம் இருந்து விலகியே வாழ்ந்தனர்.    கிராமத்திலேயே பெரிய வீடு இவர்களுடைய வீடு பெரிய வீடு.

                     பெரிய வீடு என்றதும் நகரத்து பங்களா மாதிரி இருக்கும் என எண்ணவேண்டாம். சாதாரண கிராமத்து ஓட்டு வீடுதான். ஆடம்பரமான பளிங்கு கற்களை பதிக்காமல் தரை சிவப்பு நிற சிமெண்ட் கலவையால் மெழுகப்பட்டிருக்கும். வாசலில் பெரிய மரக்கதவு பித்தளை கைப்பிடியும் குமிழிகளும் அமையப்பெற்றிருக்கும். வீட்டின் முன்னே பரந்து விரிந்த முற்றம். முற்றம் தாண்டி மூங்கில் தடுப்பு வேலிகளும் இருக்கும். வீட்டின் நடுக்கூடத்தில் பெரிய தேக்கு மரப் பலகையால் ஆன ஊஞ்சல் ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். வயதான தம்பதிகள் அவ்வப்போது ஓய்வெடுக்க அதில் தலைசாய்த்து படுப்பது வழக்கம்.

            வீட்டைச்சுற்றி முன்பக்கம் பின்பக்கம் பக்கவாட்டில் என பல சின்னச் சின்ன வீடுகள் உள்ளன.அவ்வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வயதான தம்பதியர்களை காலை பகல் மாலை இரவு என எல்லா நேரத்திலும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து நலம் விசாரித்து செல்வதும் வழக்கமான ஒன்றாக இருந்தது. இதனால் தம்பதிகள் இருவரும் தங்கள் தனிமையை மறந்து, இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்தனர்.

                                  கன்னையாவிற்கு விவசாயம் தெரியாது. அவர் பரம்பரையில் அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா என அனைவரும் பஞ்சாயத்து தலைவர்களாக வாழ்ந்து பெயர் பெற்றவர்கள். எனவே கன்னையாவும் ஓர் அரசாங்க அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சொந்த வீடும், குழந்தையின்மையும் அவர்களிடம் சேமிக்கும் எண்ணத்தை அடியோடு அழித்து விட்டது. எனவே தற்சமயம் கிடைக்கும் பென்ஷன் பணத்தை வைத்து காலம் தள்ளிக் கொண்டு இருந்தனர்.  

            ஒருநாள் காலையில் ரிக்ஷா ஒன்று அவர்கள் மூங்கில் கதவருகில் வந்து நிற்பதை கன்னையா கவனித்தார். காலை நேரம் ஆனதால் பக்கத்து வீட்டுக்காரரும் அவரருகில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்," யாரோ விருந்தாளிகள் வராப்பல தெரியுதே!" என்று சொன்னதும் உடனே கன்னையா," யாராவது அட்ரஸ் கேட்டு வந்து இருப்பார்கள்" என்றார். ஏனென்றால் கடந்த 2,3 ஆண்டுகளாக அவர்கள் வீட்டிற்கு விருந்தாளி யாரும் வந்தது இல்லை. ரிக்ஷாவிலிருந்து ஒரு இளைஞனும் அவனது மனைவியும் குழந்தையும் இறங்கியதும் கன்னையாவிற்கு இவர்கள் தன் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பது தெரிந்தது." அட,நம்ம கணேசனா! இவ்வளவு தூரம் வந்திருக்கே, ஆச்சரியமா இருக்கே!" எனக் கூறிக்கொண்டு கண்ணையா மூங்கில் கதவைத் திறந்து அவர்களை வரவேற்கச் சென்றதும் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டை நோக்கிச் சென்று விட்டார்.

                     " வணக்கம் பெரியப்பா!" என்று கணேசன் தன் கைகளை கூப்பி வணங்கிட கன்னையா தன் தம்பி மகன் கணேசனைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். மருமகள் காமினியும் கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்த பின் தன் குழந்தையையும்," தாத்தாவிற்கு வணக்கம் சொல்லுமா" என்று கூற இரண்டு வயது பிங்கி,"ஹை, தாத்தா" என மழலையில் சொன்னதை கேட்டதும் கண்ணையாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. " இங்கே வந்து பார்…. யார் வந்திருக்காங்கன்னு" என்று கூடத்தில் இருக்கும் தன் மனைவியை உரக்கக் கூவி அழைத்தார்.

   காமாட்சியம்மாள் மெதுவாக காலை எடுத்து வைத்து நடந்து வந்தார். கடந்த ஓராண்டாக அவர் மூட்டு வலி வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.மதுரைக்கு அழைத்துக்கொண்டுபோய் பெரியாஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்க வசதிப்படாததால் வீட்டிலேயே தைலம் தடவி நடந்து கொண்டிருந்தார்."பெங்களூரில் உங்கள் கல்யாணத்தின் போது பார்த்தது; இப்பவாவது வரணும்னு தோணுச்சே…. வாப்பா, வாம்மா, கண்ணு உன் பெயர் என்ன?" என முகம் மலர அவர்களை வரவேற்றார் காமாட்சியம்மாள்.

            ரிக் ஷாகாரனை அனுப்பி விட்டு சூட்கேஸை எடுத்துக் கொண்டு மனைவி குழந்தையுடன் பெரியப்பா வீட்டிற்குள் பிரவேசம் செய்தான் கணேசன். வராதவர்கள் வந்ததில் தம்பதிகள் இருவருக்கும் தலைகால் புரியவில்லை. காமாட்சி அம்மாள் தன் வலியை மறந்தார். கண்ணையா கணேசனும் அவன் மனைவியும் காலைக்கடன்களை முடிக்க வசதி செய்து கொடுத்தார். காமாட்சி சமையலறைக்குள் நுழைந்து டப்பாவில் இருந்த கோதுமை மாவு முழுவதையும் பிசைந்து இருக்கும் எண்ணெயில் பூரி போட ஆரம்பித்தார். வீட்டில் ஃப்ரிட்ஜ் கிடையாது. எனவே வீட்டில் இருந்த உருளைக்கிழங்கை வைத்து மணக்க மணக்க கிழங்கு மசாலா தயார் செய்து மூவரையும் சுடச்சுட சாப்பிட வைத்தார். உதவி செய்ய காமினி வந்த போதும் மிகவும் வாஞ்சையுடன் அவள் கைகளை பற்றிக்கொண்டு," நீயும் அவனுடன் சாப்பிட உட்கார். நான் பார்த்துக்கொள்கிறேன். எனக்கு எந்த சிரமமும் இல்லை" எனக் கூறி விட்டார்.

         9 மணி ஆனதும் கணேசனும் காமினியும் வெளியே செல்ல கிளம்பினார்கள். கண்ணையாவிடம்,"பெரியப்பா,நான் ஆபிஸ் வேலையாகத் தான் வந்திருக்கிறேன். மதுரையில் வேலை. அங்கே நான் தங்குவதற்கு ஆபிஸிலேயே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு அங்கே போரடிக்கும். அதனால் வேலை முடியும் வரை நானும் காமினியும் அங்கே தங்கலாம் என நினைக்கின்றோம்.பிங்கியை உங்களிடம் மூன்று நாட்களுக்கு விட்டு விட்டு போகலாம் என தோன்றியது. உங்களுக்கு சரிப்படுமா?" எனக் கேட்டதும் தம்பதிகள் இருவரும் ஒருசேர,"அதென்னப்பா அப்படி கேட்கிற! எங்கள் பேத்தி…… அவளைப் பார்த்துக் கொள்ள கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று சொன்னதும் கணேசனும் காமினியும் பிங்கியிடம்," பை, பை" சொல்லி புறப்பட்டுச் சென்றனர்.

          மதியம் சாப்பாடு செய்ய சமையல் அறைக்குள் சென்ற காமாட்சி அம்மாள் கன்னையாவிடம் வந்து," ரேஷன் அரிசி கொட்டை அரிசியாக இருக்கும். நல்ல அரிசியாக வாங்கி வருகிறீர்களா?" எனக் கேட்டதும், சரி எனச் சொல்லி கண்ணையா அந்த கிராமத்தின் ஒரே மளிகைக்கடையான முருகன் மளிகைக் கடைக்குச் செல்லும் பையை எடுத்தார்.பிங்கி தானும் வருவதாகச் சொன்னதும் காமாட்சி அம்மாள் சிரித்துக்கொண்டே," தாத்தாவுடன் வர வேண்டுமென ஆசைப்படுகிறாள். பேத்தியை அழைத்துக்கொண்டு போங்க" எனச் சொன்னார். தாத்தா என்ற வார்த்தையில் மயங்கிய கன்னையாவும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார்.கடைக்காரர் மிகவும் நல்லவர்; சூழ்நிலை புரிந்தவர். கண்ணையா பையை தூக்கிக்கொண்டு வந்து இருப்பதை பார்த்ததும்," விருந்தாளி வந்திருக்காப்பல" எனக் கேட்டார்."ஆமாம், பெங்களூரில் கல்யாணத்திற்கு போனோமே….. அந்த தம்பி பையன் தான் குடும்பத்தை கூட்டிட்டு வந்து இருக்கிறான். கணக்கு வைத்துக்கொள்ளலாம். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி விடுகிறேன்" என்றார் கண்ணையா. "அட எனக்கு தெரியாதா என்ன….. என்ன வேணுமோ வாங்கிட்டுப் போங்க" என்றார் கடைக்காரர். அரிசியும் குழந்தைக்காக பருப்பும் வாங்கினார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பாக்கெட்டை காட்டி அது வேண்டும் என்று பிங்கி சொன்னதால் அதையும் வாங்கினார்.மருமகள் போகும் முன் பிங்கிக்கு ஜூஸ் என்றால் மிகவும் பிடிக்கும் எனச்சொல்லி சென்றதால் லெமன் சர்க்கரையும் வாங்கிக்கொண்டார்.

       வீட்டுக்கு வந்ததும் காமாட்சியம்மாள்," கடைக்காரண்ணே கணக்கு எழுதிக் கொண்டாரா?" எனக் கேட்டுக்கொண்டார். பருப்பு சாதம் வைத்து குழந்தைக்கு ஊட்டி விட்டபின் அவர்களும் சாப்பிட்டனர். லெமன் ஜூஸ் பிழிந்து மூவரும் பருகினார்கள்.பிங்கிக்கு வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுவதும், ஊஞ்சலில் ஆடுவதும் மிகவும் பிடித்துப் போயிற்று. தம்பதிகள் இருவரும் குழந்தையின் விளையாட்டையும் மழலை பேச்சையும் மிகவும் ரசித்தனர்.பின் வீட்டுக்காரம்மா மெதுவாக எட்டிப் பார்த்து," காமாட்சி அக்கா, வீட்டில விருந்தாளிங்க வந்திருக்காங்க போலத் தெரியுதே!" எனக் கேட்க முகம் பூரிக்க வந்தவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் காமாட்சியம்மாள்."மூட்டு வலி எப்படி இருக்கு? ரொம்பவும் கஷ்டப்பட்டு காலை கெடுத்துக்காதீங்க" என என்றும் போல் அவரிடம் சொல்லிச் சென்றார் பக்கத்துவீட்டு பங்கஜம்மா. இப்படிப் ஒவ்வொருவராக வந்து விருந்தாள் பற்றி விசாரித்ததில் பெருமையில் பூரித்தனர் தம்பதிகள்.

                       மறுநாளும் முதல் நாளைப் போலவே இனிமையாக கழிந்தது. மூன்றாம் நாள் காலையிலேயே வேலை முடிந்து விட்டது என கணேசனும் காமினியும் வந்து சேர்ந்தார்கள்.பிங்கியை அழைத்துக்கொண்டு பெங்களூர் புறப்பட ஆயத்தமானார்கள். தெரு வரை வந்து அவர்களை பிரிய மனமில்லாமல் வழியனுப்பினர் தம்பதிகள் இருவரும். ரிக்ஷாவில் ஏறி அமர்ந்து பஸ் ஸ்டாப் செல்லும் வழியில் கணேசன் காமினியிடம்," பார்த்தாயா, மதுரை ட்ரிப் எவ்வளவு சவுகரியமாக அமைந்துவிட்டது. நீ என்னமோ பயப்பட்டாயே……… குழந்தையை பார்க்க சரியான ஆள் கிடைக்காவிட்டால் என்னால் நிம்மதியாக ஊர் சுற்ற முடியாது என்று. இப்போது பார்த்தாயா……. அந்த கிழங்கள் ரெண்டும் எப்படி நம்மை விழுந்து விழுந்து கவனித்தார்கள்! என்ன அழகாக பேபி சிட்டிங் பார்த்தார்கள்! கவனித்தாயா," எனச் சொல்லிச் சிரிக்கவும் காமினியும் சிரித்துக்கொண்டே,"ஆமாம். அதுவும் செலவே இல்லாமல்!" எனக் கூறினாள்.

                    அங்கே பசுமலையில் கண்ணையாவும் காமாட்சி அம்மாளும் விருந்தினர்களை அனிச்ச மலர்கள் என பாவித்து அவர்கள் முகம் கோணாமல் கவனித்து அனுப்பி விட்டோம் என்ற மன நிறைவுடன் காணப்பட்டாலும் உள்ளுக்குள் இனி இரண்டு நாட்களில் மளிகைக்கடை கடன் 500 ரூபாய் ஆகிவிட்டது அதை மாதமாதம் எப்படி அடைப்பது என கணக்குப் போட ஆரம்பித்தனர். காமாட்சி அம்மாளுக்கு இப்போதுதான் மூட்டு வலிப்பது போல் தோன்றியதால் தைல பாட்டில் தேடினார். தைலம் தீர்ந்து போயிருந்தது. புது பாட்டில் வாங்க நூறு ரூபாய் ஆகும். தைல பாட்டில் வாங்காமல் சமாளித்து விடலாமே என எண்ண ஆரம்பித்தார்.

 எதிர் வீட்டு டிவியில் அமீர்கான்,"அதிதி தேவோ பவ" என சொல்லிக் கொண்டிருந்தது அந்த வீடுகளைச் சுற்றி சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Classics