உயிரை எடுத்தேனும்
உயிரை எடுத்தேனும்
பயிர்கள் வறண்ட போது
கண்ணீர் வடிக்கின்றோம்!
நாவறண்டு போக கதறி துடிக்கிறோம்!
தூவானமாய் வந்து போகிறாய்!
பயிர்கள் செழித்து வளர்ந்த போது
சற்றே பொறு என்றோம்!
பெருமழையாய் அடித்து
பெருவெள்ளம் பெருக்கெடுத்து
வெள்ளத்தோடு வெள்ளமாய்
வெள்ளாமை அடித்துச் செல்ல
ஆற்றாமையால் அழுது புலம்பி
பதறி தவிக்கின்றோம்!
ஏன் இந்த தண்டனை?
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டி மாளவில்லை!
அடகு வைத்த நகையை
மீட்டுக் கொடுக்க வழியில்லை
வயது வந்த பிள்ளைகளை
கட்டிக் கொடுக்க நாதியில்லை!
உழுத செலவுக்கு பயிர்
வீடு வந்து சேருமோ?
கலங்கிய நெஞ்சோடு
காத்து கிடக்கிறேன்
கழனி வெளியில்!
கால் வயிறு கஞ்சி குடித்து
கால நேரம் காணாமல்
உன்னடியில் வீழ்ந்து கிடக்கிறேன்!
உன்னையே தெய்வமாய்
கையேந்தி நிற்கிறேன்!
உன் மண்ணையே
திருநீராய் பூசி மகிழ்கிறேன்!
பெ(ம)ண்ணே என் கூக்குரல்
கேட்கலையோ?
வயலே எனக்கு அபயம்
அளிக்க தோணலையோ?
என் வறுமைக்கு உபாயம்
செய்ய மனமில்லையோ?
என் கண்ணீரும் செந்நீரும்
வெள்ளமாகி உன் பாதம் வந்து சேரலையோ?
குழி விழுந்த கண்களை
இன்னமும் பார்க்கலையோ?
ஒட்டிய வயிறும் ஒடுங்கிய
கன்னமும் கண்டு
உன் மனது இறங்கலையோ?
இழப்பதற்கு உயிர் ஒன்றை
தவிர என்னிடத்தில் ஏதுமில்லை!
உயிரை எடுத்தேனும்
பயிரைக் காப்பாயோ?
