போலியான இறை நம்பிக்கையையும் நாத்திகமும்
போலியான இறை நம்பிக்கையையும் நாத்திகமும்
நம்பிக்கையுடன் உலக ஆசைகளைத் துறந்துவிட்டேன் என்று கூறுவார்கள்!
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று பரப்புரை செய்வார்கள்!
இதயப்பூர்வமாக அனைத்து இன்பங்களையும் மறுத்துவிட்டேன் என்று சொற்பொழிவாற்றுவார்கள்!
மனதில் உள்ள அனைத்துவிதமான தீய எண்ணங்களையும் துறந்துவிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குகிறேன் என்பார்கள்!
இயற்கையில் உள்ள இறைவனைத் தேடி காடு மலை எல்லாம் அலைந்தேன் என்பார்கள்!
இந்த அரச மரத்தின் கீழேதான் இந்த இறைவனை முதன் முதலில் தரிசனம் செய்தேன் என்பார்கள்!
ஆடம்பரமான மடத்தினை அமைத்து வாழ்ந்து கொண்டு இறை அறிவு பெற அனைத்து ஆசைகளையும் அடக்கினேன் என்பார்கள்!
இறைவனின் பெயரைக் கூறி ஈட்டிய பணத்தில் ஆடம்பர வாழ்க்கையினை வாழ்வார்கள்!
எளிய மக்களிடம் காணிக்கைப் பணத்தினைப் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு வேளையும் விலை உயர்ந்த உணவு வகைகளை உண்பார்கள்!
உன்னதமான இறை நிலையினை அடையக் கடவுள் உருவ வழிபாட்டினை மறந்தேன் என்பார்கள்!
துறந்தேன் துறந்தேன் இந்த ஆசையினைத் துறந்தேன் என்போரும் துறக்க இயலவில்லை இந்த ஆசையினை என்பார்கள்!
தன்னை நாடி வரும் பக்தர்களிடம் சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு எளிய வாழ்க்கையினை வாழ வலியுறுத்துவார்கள்!
தான் கட்டிய ஆடம்பர மடங்களில் மங்கள வாத்திய இசை முழங்க இறைவனைத் துதிப்பதே முதன்மைக் கடமை என்பார்கள்!
தனக்கான பளிங்குக்கல் ஆடம்பர மாளிகையினைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்வார்கள்!
மானிடப் பிறவிகள் இறை நம்பிக்கையைத் துறந்துவிட்டு ஆனந்தமான வாழ்வினைத் தேடிக் கொண்டு வாழ்கிறார்கள் என்று தனது ஆன்மீகப் போதனையில் குறை கூறுவார்கள்!
அரச மரத்தின் கீழே தியானம் செய்து கொண்டு ஆடம்பரமான மடாலயங்களை எழுப்பி விட்டு நவீன சாமியாராக மாறிவிட்டேன் என்பார்கள்!
ஆடம்பர மடாலயங்களுக்காகச் சட்டத்திற்குப் புறம்பாகப் பல ஆயிரம் ஏக்கர் அரசின் காடுகளை வளைத்துப் போட்டு மிகப் பிரம்மாண்டமான மாளிகைகளை எழுப்பிக் காடுகளில் இருக்கின்ற இயற்கை உயிரினச் சுழற்சியினை அழிப்பார்கள்!
கடவுளின் பெயரினை அனுதினமும் உச்சரித்து மக்களை மூடர்களாக மாற்றி அவர் தம் பாதம் தொட்டு வணங்கிப் பணத்தினை காணிக்கையாக அவர்களில் பாதங்களில் கொட்டிவிட விளம்பரம் செய்வார்கள்!
சாதி மத பேதங்களுக்கு முழுவதும் ஆதரவு கொடுப்பார்கள்!
பெண்விடுதலை மற்றும் சமூக நீதி கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பார்கள்!
போலிச் சாமியார்களிடம் நல்ல செய்தி கிடைக்காதா? என்று மெய் சிலிர்த்து ஏங்கும் மூடர்களை ஏக்கம் கொள்ள வைப்பார்கள்!
பொதுமக்களின் மனதிலே பழமைவாத சனாதன தர்மம் கூறும் கருத்துக்களை விதைப்பார்கள்!
காவி ஆடையினை அணிந்துகொண்டு தாங்கள் தான் இறைத் தூதர்கள் என்பார்கள்!
பல வண்ண நிற ஆடைகளை அணிந்து கொண்டு ஆடம்பர மாளிகையில் வாழும் இந்தப் போலிச் சாமியார்களின் உண்மை முகம் மக்களுக்குத் தெரியவில்லை என்பார்கள் கடவுள் மறுப்பாளர்கள்!
எளிய மக்களின் கோயில்களையும் வழிபாட்டு முறையையும் கைப்பற்றி அந்த மக்களை முழுவதும் அப்புறப் படுத்துவார்கள்!
எளிய மக்கள் அவர்களில் வழிபாட்டுத் தளங்களில் உரிமை பெற்றுவிடாமல் பாதுகாப்பார்கள்!
தரையில் உருண்டு உருண்டு வணங்கும் இந்த எளிய மக்களுக்கு என்றுதான் சுய மரியாதை வரும் என்று புலம்புவார்கள் நாத்திகர்கள்!
ஆடம்பர வாழ்க்கை வாழும் இந்தப் போலிச் சாமியார்களின் உண்மையான முகம் என்றுதான் கிழித்தெறியப் படுமோ என்று கலங்குவர் கல்வியில் சிறந்த சான்றோர்கள்!
