ஓ மனிதா! ஒரு நிமிடம்...
ஓ மனிதா! ஒரு நிமிடம்...


மனிதா! ஒரு நிமிடம்….
ஓ மனிதா! நான் தான் மரம் பேசுகிறேன்….
மரத்துப் போன உன்னிடம் பேசி என்ன?
வெறுத்துப் போய் தான் தயங்கி நின்றேன்!
ஆயினும் கூறுகிறேன்….
வெயிலில் அலைந்து திரிந்து களைப்பான உனக்கு
இளைப்பாற நிழல் தானே தருகிறேன்!
பாடித்திரிந்து பகலெல்லாம் சுற்றி வந்த பட்சிகளுக்கு…
ஓடி வந்து உட்கார ஓர் இடம் தானே கொடுக்கிறேன் !
வீடு கட்டி விசாலமாய் வாழ தெரியாதவற்றிற்கு
சிறு கூடு கட்டி வாழ கிளைகள் தானே வழங்குகிறேன்!
வேனிலில் வேட்டையாடி வேட்கைத் தணிக்க வந்த விலங்குகளுக்கு
கானகத்தில் ஓய்வெடுக்கும் ஓர் இடமாகத்தானே இருக்கிறேன்!
உயிர்வளி தந்து உயிர்கள் வாழ வழி செய்கிறேன்!
என்னையே உயிர்ப்பலி தந்து….
உன் வாழ்விற்கு வளம் சேர்க்கிறேன்!
காய்கனி கொடுத்து விருந்தாகிறேன்!
நோய் தீர்த்து நல்ல மருந்தாகிறேன்!
மழை தந்து மண்ணுயிர்களைச் செழிக்க செய்கிறேன்!
வீடாகிறேன்….விளையாடும் பொருளாகிறேன்!
வீட்டை அலங்கரித்தே கண்ணுக்கு விருந்தாகிறேன்!
எழுது பொருளாகிறேன்… விழுதென தாங்குகிறேன்!
என் காய்ந்த சருகுகள் கூட வயலுக்கு எருவாகிறது…
சுள்ளிக் குச்சிகள் கூட உனக்கு கொள்ளிக் கட்டையாகிறது!
மலர்களைக் கொய்தாய்…
இலைகளைப் பறித்தாய்…
பழங்களைத் தின்றாய்…
தண்டுகளைத் துண்டாடினாய்…
சற்றும் சிந்திக்காமல் எனை முற்றிலும் வேரறுக்கிறாய்!
மண்ணில் மட்டுமல்ல… உன் மனதிலும்…
ஈரம் வற்றியே போனது!
வளியிலும் ஈரம் காய்ந்து,….. வெயிலில் நீரும் மாய்ந்து….
காற்றை மாசுபடுத்தி .....
இயற்கை இலவசமாய் தந்ததையெல்லாம்
காசுக்கு விற்கிறாய்.....
வாழவழியின்றி தவிக்கிறாய்!
வேற்று கிரகம் நாடித் திரிகிறாய்…
மாற்று வழித் தேடி அலைகிறாய்!
மற்ற உயிர்கள் செய்த பிழையென்ன?
தாவரங்கள் தழைக்க வழியென்ன? சிந்தித்தாயா?
எந்திரங்களோடு உறவாடிக்கொண்டிருக்கும் நீ….
சந்திர மண்டலத்தை அடைய எத்தனிக்கிறாய்!
இயற்கைக்கோளில் இன்பத்தை அனுபவித்து….
செயற்கைக் கோளில் ஏறி துன்பத்தை அனுபவிக்கத் துடிக்கிறாய்!
வாழும் சொர்க்கமாகிய அழகிய பூமியை சுடுகாடாய் மாற்றி…
உன்னையே சுற்றி வந்தவற்றை அழித்து போகும் சுயநல வாதியே!
அவற்றின் கதியென்ன? உன் மதியெங்கே?
அவசர உலகில் அதுவும் மங்கிப் போனதா?
தனித்து வாழ்ந்திடலாம் என்ற அசட்டுத் தைரியமா?
பொங்கி எழும் என் குரல் கேட்டு விழித்து கொண்டால் ….
பிழைத்துக் கொள்வாய்! இல்லையேல்……
உன்னையே அழித்துக் கொள்வாய்!
இதயத்தைத் திறந்திடு….. இயற்கையை காத்திடு!