நாளைமுதல்
நாளைமுதல்
வீட்டில் நுழைந்ததும் வீசி எறியும் செருப்பு
களைந்த உடையைக் கசக்கி எறியும் வேகம்
கையிலிருந்த கைக்கடியாரம் எங்கோ பறக்க
வீசிய கைப்பை சுழன்று மேசையைத் தஞ்சமடைய
தொடர்ந்த நான் சோபாவைத் தஞ்சமடைய
மணக்கும் காபி மனையின் கைகளில்
சுட்டெரிக்கும் பார்வை சுடர்விழிகளில்
ஏனிந்த அலங்கோலமென அன்று ஏசிய தாய்
என்மனைவியின் விழிகளில் இன்று தெரிகிறாள்
வெளியில்காட்டும் ஒழுக்கம் வீட்டினுள் நுழைய மறுக்கும் அவலம்
மணித்துளிகள் கடந்து மறைந்தபின்
நினைத்துக் கொள்கிறேன் நாளைமுதல்
நல்லொழுக்கத்துடன் உள்ளே நுழைவேன்
பின்னால் என்மகன் வருகிறான்
காலின் ஷூவைக் கழற்றிவீசி
புத்தகங்கள் பறக்க பையை வீசி
உடையைக் களைந்து நடையில் வீசி
அடித்த கைகள் அமைதி அடைந்தபின்
நினைத்துக் கொள்கிறேன் நாளைமுதல்
அவனை அடிக்கமாட்டேன்
நல்லவிதமாய் சொல்லி திருத்துவேன்