மின்னலாய் வந்த அஞ்சல்
மின்னலாய் வந்த அஞ்சல்
மின்னலை அல்ல இடியை அனுப்பிய அஞ்சல்
காதலை அல்ல கனவையே மறுத்த அஞ்சல்
கெஞ்சி வந்த கன்றை உதைத்துத் தள்ளிய அஞ்சல்
மறக்கச் சொல்லி தந்தையும்
மன்னிக்கச் சொல்லி அன்னையும்
மிதிக்கச் சொல்லி அண்ணனும்
ஒருசேர எழுதிய ஓலையில் - என்
ஒருமனம் மட்டும் மறைந்தது
பின்னர் அன்பைச் சுமந்து எத்தனை வந்தாலும்
ஒருமுறை பாய்ந்த ஈட்டி உள்ளேயே தங்கிவிடும்
காலம் கண்களைமட்டும் துடைத்தது
கடிதம் இன்னும் கைகளில்தான் இருக்கிறது
என்னைக் சுற்றிய உலகம் என்னவென்று
கன்னத்தில் அறைந்து சொன்ன கடிதம்
இன்று எல்லாம் மாறிவிட்டன
உறவின் கரங்கள் உண்மையைப் பற்றிக் கொண்டு
என் நலம் மட்டும் நாடுவதாய்
திரும்பத் திரும்ப ஆயிரம் வந்தாலும்
அந்த ஒன்றுமட்டும் என்கைகளைவிட்டு
அகல மறுப்பதேன்