STORYMIRROR

Athila Nabin

Romance

3  

Athila Nabin

Romance

காதல் சொல்ல வந்தேன்

காதல் சொல்ல வந்தேன்

1 min
217

மன்மதன் அம்பு எய்தவில்லை

கண்டதும் காதல் இல்லை..

சரிவர பேசிக்கொள்ளவே 

சில வாரங்கள் ஆயின..


சீண்டலும் தீண்டலும் 

உடலும் கூடலும்

கோபமும் நேசமும்

அன்றாட அங்கங்கள் ஆயின..


ஆனால் இன்றும் எனக்கு 

விளங்கா விந்தை,

என் மௌனத்தையும் மொழிபெயர்க்கும்

உன் வித்தை..


என் விருப்ப வெறுப்புகளை

வேண்டி விரும்பி அறிந்து கொண்டாய்..

என் சைகைகளை 

செய்கைகள் ஆக்கினாய்..


பலமுறை பழித்துள்ளேன்

பூமாதேவியாய் பொறுத்துக் கொண்டாய்..

சிலமுறை அடித்தும் உள்ளேன்

சிரிப்பிலே கடந்து சென்றாய்..


தொழில் நஷ்ட நேரங்களில்

கடன் கஷ்ட காலங்களில்

துஷ்ட துயர சமயங்களில்

அஷ்ட லக்ஷ்மியாய் காத்து நின்றாய்..


உன்னால் என்னுள் என்னையே அறியாமல் 

உன் மேல் வளர்ந்த காதலை

வாய் திறந்து உரைத்ததில்லை

ஆனாலும் நீ உணர்ந்து கொண்டாய்..


இன்றும் நான் கூறவில்லை என்றாலும்

நீ கோபித்துக் கொள்ள மாட்டாய் ..

ஆனால் இன்றும் கூறவில்லை என்றால்

காதலே என் மேல் கோபம் கொள்ளும்..


வாழ்வின் இணையே.. வாழ்க்கைத் துணையே..

என் உயிரின் உறவே.. என் உறவுகளின் வேரே..

சஷ்டியப்த பூர்த்தியான இன்று சத்தியம் செய்கிறேன்..

என் உயிரினும் மேலாக உன்னை நேசிக்கிறேன்..


இவ்வயதில் யான் அறிவேன்

மெய்க்காதல் என்பது

காமனின் காட்டமோ 

உணர்ச்சியின் ஊட்டமோ மட்டுமல்ல..


அன்பாய் அனுசரணையாய் ஆதரவாய் ஆறுதலாய் 

வித்தியாசங்களை சகித்து தனித்தன்மையை மதித்து 

உள்ளங்கள் ஒன்றையொன்று உணர்ந்து பின்

உடல்கள் புணர்தலே காதல் அல்லவா..


சுருங்கிய கண்ணங்களையும் நரைத்த கூந்தலையும்

அருகில் அமர்ந்து ரசிப்பேன்..

உன் விருப்பங்கள் ஒன்றொன்றாய் கேட்டு

ஒன்றுவிடாமல் நிறைவேற்றுவேன்..


புனித ஸ்தலமோ சுற்றுலா தலமோ

ஒன்றாய் கைகோர்த்து சென்று வருவோம்..

பழைய படங்களை பார்த்து ரசிப்போம்..

பேசா கதைகளை பேசி மகிழ்வோம்..


ஆனால் அதன்முன் என்னால் ஏற்பட்ட

ஆரா வடுக்களையும் அழித்துவிடு..

காயப்படுத்திய கடுஞ்சொற்களை மறந்து விடு,.

மொத்தத்தில் என்னை மன்னித்துவிடு..


உன்னோடு இணைந்த என் வாழ்க்கை பயணம்

சதாபிஷேகம் தாண்டியும் தொடர வேண்டுகிறேன்..

காலனின் காலம்வரை

காதலில் கலந்திருப்போம்..!


Rate this content
Log in

Similar tamil poem from Romance