Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Drama Classics

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Drama Classics

என்னவெல்லாம் தொலைத்தோம்??

என்னவெல்லாம் தொலைத்தோம்??

1 min
265


உழுத கலப்பையையும் 

இரட்டை காளையையும் 


காலையில் கதிரவன்

கண் விழிக்கும் 

முன்னரே..

வயல் வெளியில்

இறங்கி வேலை

செய்யத் தொடங்கிய

உழவனையும்...


விடியல் வேளையில் 

மண்பானையில் 

சல சல ஒலியுடன் 

தயிரை கடைந்த 

மத்தையும்

மத்தை சுழற்றிய

கிழவியையும்...


துள்ளிக்

குதித்தோடிய

பயமறியா கன்றையும்..  

"அம்மா" என்றழைத்து 

கன்றுக்கு பாலூட்டிய

நாட்டுப் பசுவையும்


சேலையின்

முந்தானையை

முறுக்கி சுருட்டி

சிம்மாடு கட்டி  

பானையில் 

பழைய சோற்றை

தலையிலும்

கலைந்த தலையோடும்

கிழிந்த உடைபோடும்

அழும் குழந்தையை

இடையிலும் சுமந்த

உழவன் மனைவியையும்..


மக்கிய மாட்டுச்சாண 

எருப்பொதிகளை

முதுகில் சுமந்த

கழுதைகளையும்..


வளைந்து நெளிந்த

இரட்டை இணைகோடுகளை

வழியெங்கும் வரைந்த 

இரட்டை மாடுகள்

இணைந்து இழுத்த

பாரம் சுமக்கும்

கட்டை வண்டிகளையும்,


காளைகள் சுற்றியிழுக்க

இராகத்தோடு வட்டமடித்து

எண்ணையைப் பிழிந்தெடுத்த

கல் செக்குகளையும்,


மாறி மாறி 

ஏறியும் இறங்கியும்

நீரிறைத்த 

ஏற்றங்களையும்.. 


ஆற்றங்கரை குளியல்

 துறைகளையும்..

துளியளவு துணியும்

சிறிதளவு அச்சமுமில்லாமல்

துள்ளிக்குதித்துக் குளித்த

சிறுவர்களையும்..

கூடவே ஒருபுறம்

கூடிப்பேசிக் களித்து

குளித்த பெண்களையும்..


வளையல் பெட்டியை

தலையில் சுமந்து 

தெருவில் நடந்து

"வளையல்" "வளைபல்"

என கூவி சத்தமிட்டு

அழைத்த வீட்டின் 

முற்றத்தில் இறக்கிய

பெட்டியை திறந்து 

கடை விரித்து..

அழைத்த மங்கையரின்

மருதாணியிட்ட

அழகிய நீண்ட 

கரங்களைப் பிடித்து

இலாகவமாக

வளையல்களை

நுழைத்து மகிழ்வூட்டிய

வளையல் காரரையும்...


வகை வகையான

வித விதமான

வண்ண வண்ண 

சேலைகளையும்,

இரவிக்கைகளையும்

துணியில் 

பொட்டலமாக கட்டி

தலையால் சுமந்து

வீட்டின் வாசல்

வரை வந்து விற்ற

 சேலைக்காரரையும்...


களத்து மேட்டையும்

அதற்கு சற்றே

தள்ளி கிராமத்து

எல்லையில்

முன்னிரு கால்களை 

தூக்கி ஓடியபடி

நின்று கொண்டிருந்த

 வண்ணமயமான

ஓட்டுக் குதிரையையும்..

ஓட்டுக்குதிரை மேல்  

வலது கையில்

வீச்சரிவாளோடும்

முகத்தில் அரிவாள்

மீசையோடும்..

வீரத்தின் அடையாளமாக

மழையிலும் வெயிலிலும்

கண்விழித்து

காவல் காத்த

ஐயனாரையும்..


வீட்டின் புழக்கடையில்

நிமிர்ந்து நின்ற

வைக்கோர்போறையும்..

மாட்டுத் தொழுவத்தையும்

இடிக்கும் உரலையும்

உடனிருந்த

உலக்கையையும்

மாவாட்டும்

ஆட்டுக்கல்லையும்

ஆட்டும் குழவியையும்

அரைக்கும் அம்மியையும்

திரிக்கும் திரியற்கல்லையும்


வண்ண முறங்களையும்

பனை ஒலை பனை நாரில்

செய்த வண்ணப் பெட்டிகளையும்..


விறகினைத்தின்று

உயிர் பெற்ற அடுப்புகளையும்

சிகப்பாக பிறந்து 

கருப்பாக ஒப்பனை 

செய்து கொண்ட

சுவையாக சமைக்கும்

மட்பாண்டங்களையும்,


குழை மண்சுவரில்

கட்டி ஓலையில்

கூரையிட்டு

மெழுகிய மண்தரையிட்ட

அழகிய ஓலை வீட்டையும் 


ஓலை வீட்டு முன்னிருந்த

மண் திண்ணையையும் 

முற்றத்தில் கிடந்த 

நார் கட்டிலையும்


வீட்டை சுற்றி மேய்ந்த 

கொக்கரிக்கும் கோழிகளையும் 

இறக்கை அடித்து கூவும்

 சேவல்களையும்..

ஆடுகளையும் அவை 

ஈன்ற குட்டிகளையும்..


காரை வீட்டையும்

தாழ்வாரத்தில் கிடந்த 

சாய்வு நாற்காலியையும்

காரை வீட்டருகில்

கூரைக்குக் கீழே

சணல் கோணி

போர்த்தி நின்ற

குடை வண்டியையும்..


படிக்கும் வாய்ப்பு

கிடைக்கா நிலையிலும்

அறிவில் மிளிர்ந்த 

கிராமத்து மேதைகளையும்..


லஞ்சம் ஊழல்

வஞ்சம் சூழ்ச்சி 

ஏதும் அறியாத 

வெள்ளாந்தி

மனிதர்களையும்..


பின்விளைவுகளைப்

பற்றி சிறிதும்

சிந்திக்காமலும்..

பாதிப்புகளை

அறியாமலும்..

ஒவ்வொன்றாக

கைகளை விட்டு

நழுவ விட்டு

தொலைத்ததன்

பலனை 

பலமாக

நினைப்பவர்களும்

பலவீனமாக

நினைப்பவர்களும்...

எதிர் கொள்ளப்போகும்

எதிர்காலம், புரியாத

புதிராகவே தெரிகிறது..


இரா.பெரியசாமி..


 





 



  



  






 







Rate this content
Log in

Similar tamil poem from Abstract