இயற்கையை ஊனமாக்கும்செயற்கை..
இயற்கையை ஊனமாக்கும்செயற்கை..
தொழில் நுட்ப வளர்ச்சியால்
தொலைந்து போனது
அன்றாடம் காய்ச்சிகளின்
அரை வயிற்று கஞ்சியும்..
கலைந்தும், உடைந்தும் போனது
வறியோர்களின்
நெஞ்சிலே புதைந்து கிடந்த
சின்ன சின்ன ஆசைகளும்
நியாயமான கனவுகளும்..
சமூகத்தின் தள்ளாட்டத்தில்
ஏழைகளின் வாழ்க்கை
தடம் மாறித் தடுமாறியது..
இரசாயனத்தின் ஊடுறுவல்
தாய்ப்பாலைக் கூட
விட்டு வைக்க வில்லை
எந்திரங்களின் வருகை,
உடலுழைத்து அன்றாடம்
கூலி வாங்கி கூழ் குடித்து
உயிர்பிழைத்த வறியோர்
வாழ்க்கையை வேகமாகப்
பின்னுக்குத்தள்ளி
அழுத்திச் சிதைத்தது..
உரமாகும் எருக்குழிகளை
விலைகொடுத்து வாங்கும்
நிலையொழிந்து ..
வீட்டுக்குள்ளும் வெளியிலும்
தெருவிலும், சாலையிலும்
நெகிழி குப்பைத் தொட்டிகள்
மக்காத குப்பைகளால்
நிரம்பி வழியத்தொடங்கின...
இன்றைய
அறிவியல் தொழிநுட்ப
வளர்ச்சியை விடவும்
பன்மடங்கு அசுர வேகத்தில்
இயற்கை மாசுபடுவதையும்,
இயற்கை வளங்கள் வேகமாய்
அழிந்து வருவதையும்...
அறிவியல் உலகத்தின்
அக்கரையில்லா அறிவு
அலட்சியப்படுத்துகிறது
இயற்கைக்கு முரணான
செயற்கை நுண்ணறிவு,
வகை வகையான
நோய்களை உருவாக்கி
ஊரெங்கும் உயிர்கட்கு
ஊறிழைக்கும் ..
இயற்கையின் படைப்பால்
உருவான நுண்ணுயிர்களை<
/p>
கொல்லவும், வெல்லவும்
முடியாமல் திக்கித் திணறிக்
கொண்டிருக்கிறது..
தொழில்நுட்ப வளர்ச்சியின்
உள்நோக்கம் சமூகநலமென்ற
உன்னதமான பார்வை மாறி
வணிகத்தின் போர்வைக்குள்
நுழையத் தொடங்கிய போதே
தன்னலத்தின் படுதாக்குதல்
அறத்தின் கழுத்தை நெறித்து
அழுத்தி முறித்து விட்டது..
ஆரம்ப காலத்தில்
இயற்கையின் கைகளுக்கு
பெரிதாக முரணின்றி முளைத்த
செயற்கையின் சிறு சிறு கைகள்
படுவேகத்தில் வளர்ந்து
இப்போது இயற்கையின்
இயல்பான நிகழ்வுகளுக்கு
இடையே குறுக்கிட்டு
குழப்பிக் கொண்டிருக்கின்றன..
உணவில் சிறிதாக அளவாக
சேர்ந்திடும் உப்பினால்
உணவின் சுவை
கூடுவதைப் போல்
சிறிதாக தொடங்கிய
தொழில் நுட்ப வளர்ச்சியும்
அளவோடு இருந்த வரையிலும்
சுவை தந்த நிலை மாறி...
அளவுக்கு மீறியதால்
உப்பின் செயல் தப்பாகி
உணவைக் குப்பையில்
கொட்டிடும்
நிலைவரும் நாளைய
நாளை விரைவாக
நெருங்குவதை எண்ணீ
மனது பதைபதைக்கிறது..
அரசியலும், வணிக நோக்கும்
அறிவியலை அடக்கி ஆளுகிற
நிலைமாறி ... அறமும்,
அறிவும், சமூக அக்கரையும்
அறிவியலை ஆளுமானால்
மட்டுமே அழிக்கும் அறிவியல்
படைக்கும் அறிவியலாகும்..
இரா.பெரியசாமி..