என்னை உணர்ந்தேன்
என்னை உணர்ந்தேன்
பதின்ம பருவத்தின் முதல்படி
பரவச எண்ணங்களின் முதலடி
முகம் தெரியா இனியவளின் முதல் சுகந்த நெடி
பந்தங்களின் நிந்தைகள் நட்ட முதல்செடி
பாசவலைகளின் முதற்கொடி
என் சிறகை ஒடித்த முதல் தடி
என் நெஞ்சைப் பிளந்த முதல் வெடி
உலகம் தந்த முதல் அடி
இதில் எது என் எழுத்தின் முதல் அடி?
தேடுகிறேன்
அது என்னை நான் உணர்ந்த முதல்நொடி
கசப்பை விதைத்தும் இனிப்பாய் முளைத்த செடி
முன்வாசலும் முறைவாசலும் இல்லாத மலர்த்தோட்டம்
ஒவ்வொரு கணமும் என்னைக் கீறி முளைத்த ரணம்
சுமை தாங்க முடியாமல் சுவடாய்ப் பதித்தேனோ?
தேடுகிறேன்
முதல் வலியோ முதல் பரவசமோ
பிரசவித்த நேரம் அறிவிக்காமல்
பிறந்து விட்டனவோ?
என் முதல் அழுகையே என்னைத் தூண்டியதோ?
தேடுகிறேன்