சிதைமூட்டி சதையை எரித்து விடு
சிதைமூட்டி சதையை எரித்து விடு
காலையில் கண் விழித்தேன்.....
பசி அக்கினியாய் வயிற்றை கொளுத்தியது!
வேலைக்கு வெளியில் செல்ல எண்ணினேன்...
தொற்றுநோய் வெளியில் வராதே என்று துரத்தியடிக்க...
நடையாய் நடந்து.... காலும் சோர்ந்து.....இளைப்பாற இடமுமின்றி... வேதனையோடு...
தடம் பார்த்து இருப்பிடம் வந்து சேர்ந்தேன்!
வேலை ஏதும் கிடைக்காததால்.... வறுமை குடும்பத்தை அக்கினியாய் சுடுகிறது!
காசு பணம்.... அரிசி பருப்பு ஏதாச்சும் கிடைத்ததா? மனைவியின் கேள்வி அக்கினியாய் மனதை ரணமாக்குகிறது!
அப்பா பசிக்குதுப்பா.... திங்கறதுக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வந்தீங்களா? பிள்ளையின் கேள்வி அக்கினியாய் உடலை கருக்குகிறது!
>
குடிப்பதற்கு ஒரு குடம் தண்ணீருக்காக கால் கடுக்க காத்திருந்தே.....
கொண்டு வந்த நீரை குளித்து களைப்பை போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி மேலே ஊற்றினேன்....
கொதி பொறுக்காது...
தோலும் எரிந்தே கருகி சுருங்கியது!
வறுமை ஒருபுறம்....
தொற்று நோய் மறுபுறம்...
பசி ஒருபுறம்.... குடும்பம் மறுபுறம்...
சூரியனே, உன் பங்கிற்கு நீயும் ஏன் அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் தினம்..... தினம் ஏன் என்னை சுட்டெரிக்கிறாய்?
இறைவா, தினம்.... தினம்....
இத்தனை வேதனைத்தீயில் வெந்தொழிவதைவிட
சிதைமூட்டி.... சதையை எரித்து விடலாமே! அதில்தான் எத்தனை சுகம்!