அந்த நாள்
அந்த நாள்


அசையாத வேளையில்
அசைபோடும் அந்த நாள்
எல்லோர் வாழ்விலுமுண்டு
எனக்குமுண்டு அந்த நாள்
அப்பா முதுகில் உப்பு மூட்டை
ஏறிய அந்த நாள்!
என் அப்பா மட்டுமல்ல
என் ஊர்கூட உப்பு மூட்டை
தூக்கிடும் - தூத்துகுடி
இரயில்வே காலனி -ஆம்
என் செவிகளில் மட்டுமல்ல
இதயத்திலும் சிக்குபுக்கு
சப்தம் ஓடிய காலனி
இங்கே கடல் ஆமைகள்
இடம் பெயர்ந்திடும்
அதிலொன்று நான் வாழ்ந்த
என் ஓட்டுவீடு - இன்றும்
எனக்கதில் ஒட்டுதலுண்டு!
பள்ளிக்கு செல்வோம்
அரைமணி நேரம் நடந்து
சேர்வதற்குள் எத்தனை பாடம்
சொல்லித் தந்தாள் என் சினேகிதி அன்று
காக்காய் கடி கடித்து
அவள் கொடுத்த
தேங்காய் மிட்டாயை
சரிபாதியா என அளவுபார்த்தது
நான் படித்த முதல் கணக்கு.
பள்ளி முடிந்தும் சோர்வேயில்லை
சித்திக்கடை இளந்தவடைக்கு ஈடேயில்லை
வழிநெடுக சப்புகொட்டி பேசியகதை
இன்னும் இனிக்கிறது அதனின் சுவை
இன்றும் கிடைக்கிறதா அவ்விளந்தவடை?
தெருவில் கொட்டிக்கிடக்கும் புழுதியெல்லாம்
சிறார்களை வாரி பூசிக்கொள்ளும்
காலனி முழுவதும் இரைந்து கிடப்போம்
வாகனங்கள் இறைச்சல் இல்லாமல்
மனதில் உளைச்சல் இல்லாமல்.
ஓடிக் கொண்டே நிலவைப் பார்ப்போம்
அதுவும் கூட வந்தால் வாயை பிளப்போம்
ஆம்ஸ்டிராங்கையும் வென்றுவிட்ட ஆணவம்
அந்த அறியாமையிலும் எத்தனை ஆனந்தம்!
கூட்சு வண்டியிலே கூட்டாஞ்சோறு ஆக்கியபோது
அரிசி கொண்டு வந்தவளே
தரையிலே செவிபொதித்து அலையோசை கேட்டபோது
அருகிலே கிசுகிசுத்தவளே
உனக்கும் ஞாபகமிருக்கிறதா அந்த நாள்?