அம்மா
அம்மா
பிரசவ வார்டு...
வெளியே வாசல் அருகில் என் அம்மா
உள்ளே வலி வேதனையில் படுத்திருந்தேன் நான் குழந்தையின் அழுகுரல்... "பொம்பள புள்ள! ,பொம்பள புள்ள!"
அம்மாவின் மகிழ்ச்சி கூவல்! அக்கம்பக்கத்தினர் அம்மாவை பார்த்தனர் ஓர் உலக அதிசயமாய்..!
மூதாட்டி ஒருவர் அருகே வந்து பெண் பிறந்ததற்கா இவ்வளவு சந்தோஷம் என ஆச்சரியமாய் கேட்க,
" முதல் ரெண்டும் ஆம்பள புள்ளைங்க...
இது மூன்றாவது...
இதற்கு மேல் வேண்டாம் என்று முடிவு ...
அதனால் உண்டான களிப்பு. என்ன... ஆனால்... "கருவாச்சியா பெத்திருக்கா" அம்மாவின் அடுத்த சிரிப்பு வலிமயக்கத்த்தில் கண்மூடி படுத்திருந்த நான் கண்விழித்து பக்கத்து ஆயாவிடம்," அப்படியா ?"எனக் கேட்க
அவ எட்டிப் பார்த்து," ஆமாம்மா ...பாப்பா கறுப்பா தான் இருக்கா.. என்று சொல்ல
அதனால் என்ன... பரவாயில்லை ....
மாமனார் கருப்பு ;நாத்தனார் கருப்பு ;
மூத்தவர் கருப்பு; கொழுந்தனார் கருப்பு... என எண்ணி சமாதானம் ஆனேன். இயல்பான பிரசவம் என்பதால் தாயும் சேயும் அறைக்குப் போக ஏற்பாடு செய்தார் மகப்பேறு மருத்துவர் .
கட்டில் அருகே தொட்டில் குழந்தையைப் பார்த்தேன். இவளா... கருப்பு?
தொட்டால் ஒட்டிக் கொள்ளுமோ என எண்ண வைக்கும் கர்மவீரர் காமராஜர் பரம்பரை தான் நாங்கள்; ஆனாலும் ...என் மகள்... கருப்பில்லையே.. என எண்ணி அம்மாவிடம் மெதுவாக,
" பாப்பா ஒன்னும் கருப்பா இல்லையே" என ...
அம்மாவும் சிரித்தபடி சொன்னார் ,"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான்."
என்னையும் கருப்பில் சேர்த்தாரே என எண்ணி நானும் சிரிப்பில் கலந்து கொண்டேன்.
