வல்லன் (Vallan)

Drama Inspirational

4  

வல்லன் (Vallan)

Drama Inspirational

வேலுநாச்சி 3

வேலுநாச்சி 3

6 mins
722


முந்தைய அத்தியாத்துக்கான இணைப்பு


https://storymirror.com/read/story/tamil/i7zy6o73/veelunaacci/detail


அத்தியாயம் 4 மணாளனின் மணவாட்டி


குற்றாலத்தில் நடந்த கூத்துகள் எல்லாம் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் மேலும் அறிந்து அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்க ஒரு காரணமாக இருந்தது. அதுவும் இராணி தேவரை புலியிடம் இருந்து காப்பாற்றியது அவருக்கு இராணி மீது பெருமதிப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக தேனிலவு எல்லாம் முடிந்து சிவகங்கை கோட்டைக்கு எல்லாரும் வந்தனர். இருந்தாலும் அந்த புது காதல் ஜோடிகளுக்கு மட்டும் மறக்கமுடியாத நினைவுகள் பல கிடைத்தன அந்த பயணத்தில்.


காலம் ஒன்றும் நம் வீட்டு கன்றுக்குட்டி அல்லவே அதை நம்மால் கட்டிவிட முடியாது. இருவரும் மகிழ்வோடும் நிறைவோடும் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுகள் மட்டும் உருண்டோடுகின்றன ஆனால் சுபச் செய்தி ஒன்றும் வரவில்லை என நாச்சியார் பயம் கொள்ளத் தொடங்கினாள். என்னதான் இராணியாக இருந்தாலும் பெயர் சொல்ல பிள்ளை வேண்டுமல்லவா. ஊரார் நா மேல் பல்லிட்டு பேசிடுவாரோ என்று அஞ்சாதவர் யார்தான்? மலடி பட்டம் கட்டிடுவாரோ என்று அஞ்சாத பெண்கள் தான்‌ யார் உள்ளார்? பிள்ளைக்காக இருவரும் ஏறாத கோவில் இல்லை எடுக்காத வைத்தியம் இல்லை... இருந்தாலும் கடவுள் அருள் வேண்டும் நேரம் காலம் கூடி வர வேண்டுமல்லவா... என்ன தான் தேவதை போல மனைவி இருந்தாலும் ஆண் மனம் ஊர் சுற்றித்திரிய அலையும். அது மக்களாய் இருந்தால் என்ன? மன்னனாய் இருந்தால் என்ன? குழந்தை இல்லை என்பது வேறு ஒரு காரணமாகப் போயிற்று.


சிவகங்கை, சிறுவயல், திருபூவனம், திருப்பத்தூர், கமுதி, காளையார் கோவில், பிரான்மலை, கொல்லங்குடி ஆகிய எட்டு சமஸ்தானங்களை உள்ளடக்கியது சிவகங்கை இராச்சியம். ஒரு நாள் நாச்சியார் அரண்மனைகளைப் பார்வையிட்டு திரும்பி சிவகங்கை செல்லும் நேரத்தில் கொல்லங்குடி அரண்மனைக்கு அருகில் அடர்ந்த வனாந்திரத்தின்‌ அருகே மன்னரின் குதிரை நிற்பதைக் கண்டார். இது என்ன? ஏன் மன்னரின் குதிரை இந்த அத்துவானக் காட்டில் நிற்கிறது? இங்கு என்ன செய்கிறார்? ஒரு வேளை அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ? என பலவாறு எண்ணங்கள் ஓட்டமெடுக்க மனதில் பயத்துடன் சென்று பார்த்த நாச்சியான் தலையில் இடி இறங்கியது போல நின்றாள். 


ஆம் தனக்கே உரியவன் என்று நினைத்தவன் இன்று வேறு ஒருத்தியின் அழகில் மயங்கி அவள் மடியில் படுத்துக் கிடக்கும் காட்சி எந்தப் பெண்ணுக்கு தான் இனிமையளிக்கும். கோபம் ஒரு புறம், ஆற்றாமை ஒரு புறம், ஏற்கனவே பிள்ளை இல்லை என்ற குறை வேறு, அதனுடன் என்னவனும் எனக்கில்லை என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது அந்த காட்சி. பெண் மனம் பித்தல்லவா? அவளும் ஒரு பெண் தானே... ஏன் இந்த ஆண்கள் இப்படி இருக்கிறார்கள்? தனக்குக் கிடைப்பதில் எப்போதும் திருப்தி கொள்ளாமல், வேறு ஒன்று அதனினும் மதிப்போடு தென்பட்டால் குரங்கு கிளை தாவுவது போல தாவிவிடுகிறான்... ஆனால் இந்த பெண்கள் மட்டும் தன்னை விடுத்துச் சென்றவனை விடாமல் நினைத்து நினைத்து உருகிச் சாகின்றனர் என எண்ணங்கள் பலவாறு எழுந்தன. 

             

நின்றிருந்த நாச்சியாரைக் கண்ட முத்துவடுகநாத தேவர் முகத்தில் ஈயாடவில்லை... கையும் களவுமாக பிடிபட்ட கள்ளனுக்குத் தேள் கொட்டியது போன்று தானே வலிக்கும். தன்னையே நினைத்து வாழ்ந்து வருபவளை ஏமாற்றிய குற்றவுணர்ச்சி அவர் மனதைக் குத்திக் கிழித்தது கண்களில் தெரிந்தது. தேவரால் ஏதும் பேச இயலவில்லை, தவறு தனது என்றுணர்ந்த பின் வாதிடுவதில் என்ன பயன்... நாச்சியார் அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்து உன் பெயரென்ன அம்மா என்று வினவ, கூச்சத்தில் கூனிக்குறுகி கண்களில் கண்ணீர் தாரையாக வழிய மெல்ல சொன்னாள் கௌரி என்று. அதற்குள் ஆள் அனுப்பி சாரட் வண்டியை கொண்டுவரச் செய்திருந்தார் நாச்சியார் , முதன்மை அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை என்ன செய்வது என ஏதும் அறியாது நாச்சியாரின் செயல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். 


தோழிப்பெண்களை அழைத்து கௌரியை வண்டியில் ஏற்றிவிட்டு சிவகங்கை அரண்மனைக்கு முன்னே அனுப்பிவிட்டார். முத்துவடுகநாதரையும் கோட்டைக்கு வரச் சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் வெடுவெடுவென கிளம்பிவிட்டார்.‌ முன்னம் சென்றவர்கள் நாச்சியாருக்காக ராஜேஸ்வரி ஆலயத்தில் காத்திருந்தனர். தேவரும் நாச்சியாரும் வந்ததும், அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து முத்துவடுகநாதரிடம் கொடுத்து கட்டுங்கள் தாலியை கௌரியின் கழுத்தில் என்று சொல்ல சிறிது தயங்கிய தேவர் அதனை வாங்கி கௌரியின் கழுத்தில் கட்டினார்.‌ கௌரிக்கு என்ன நடக்கிறது என்று ஏதும் புரியவில்லை, ஏதும் பேச வார்த்தைகள் வரவில்லை, கண்களில் கண்ணீர் மட்டுமே நன்றிகளைக் கொட்டின. நாச்சியாரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றாள். இனி நீ என் தங்கையாக இந்த அரண்மனையில் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கப் பாத்தியப்பட்டவள், இனி நீ இந்த சிவகங்கை கோட்டையின் இளையராணி என பட்டம் கொடுத்து அரவணைத்தாள்.


எந்த பெண்ணுக்குத் தன் முந்தானையில் பங்கிட எண்ணம் வரும். தன் கணவன் செய்த தவறை சரிசெய்யும் பொறுப்பு தனக்கு உண்டானது என்று அதனைத் தீர்த்து வைத்த வேலு நாச்சியார் பெண் உரிமை மீட்பின் முன்னோடி தான்.



அத்தியாயம் 5 மதுரையை மீட்டோம் !


எவ்வளவு தைரியசாலியாக, பெரும்பாண்மை மிக்க ஆளுமையாக இருந்தாலும் தனக்கென்று உரிமையானதை ஒருவர் பங்கு போட வரும்போது கொஞ்சம் நிலைகுழைதல் சகஜம் தானே! அப்படியான நிலைதான் வேலுநாச்சியாருக்கும் இப்போது. முடிவுகள் தீர்க்கமாக்கப்பட்டு செயல் நிறைவடைந்த பின் கவலை கொண்டு பயனில்லை என்பதை நன்கு அறிந்தவர் நாச்சியார், ஆனாலும் அன்பு என்ற ஆயுதத்தால் அவர் அடிபட்டதில் இருந்து மீள சற்று காலம் தேவைப்பட்டது. 


பெரியவர் சசிவர்ணத் தேவருக்கும் மூப்பு காரணமாக இடையிடையே உடல் சுகவீனம் வந்து வந்து போனது, ஆனால் இப்போது அவர் படுக்கைக்குச் செல்லும் அளவுக்கு மிகவும் மோசமாக உடல் பலவீனப்பட்டுவிட்டது. வயது ஏற ஏற உரல் தளர்வது இயல்புதானே... நாம் தான் இயற்கையை ஏற்க்க மனம் இன்றி சாவைத் தள்ளிப்போட நினைத்து மருந்து சிகிச்சை என முரண்பட்டு விடுகிறோம். பெரியத்தேவரை கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் நாச்சியாரே ஏற்றார். ஆட்சி,அதிகாரப் பொறுப்புகளை முத்துவடுகநாதர் பார்த்துக்கொண்டார். 


இந்த நிலையில் தான் விஜயகுமார நாயக்கரின் ஆட்சியில் இருந்த மதுரையை ஆற்காட்டு நவாப் முகமது அலி கான் வாலாஜா ஆங்கிலப் படைத்தளபதி கோப் என்பவனின் உதவியுடன் கைப்பற்றி அவரை ஆட்சியில் இருந்து அகற்றி கப்பம் பெறும் உரிமையை பெற்றான்.


மதுரை நாயக்கரும், சிவகங்கை சமஸ்தானமும் நெருங்கிய நட்பு உடையவர்கள். விஜயகுமார நாயக்கர் உதவி கோரி சிவகங்கை விரைந்தார். முத்துவடுகநாதரைக் கண்டு நிலைமை இன்னது என எடுத்துக்கூறி உதவி செய்யுமாறு வேண்டினார். 


தேவர் ஆலோனைக்கூட்டத்திற்கு அறிவிப்பு செய்தார், மந்திராலோசனைக் கூடத்தில் இராணி வேலுநாச்சி, தளவாய் தாண்டவராயன் பிள்ளை, முக்கிய படைத்தளபதிகள், விஜயகுமார நாயக்கர் என முக்கியமானவர்கள் இடம்பெற்றனர். 

முதன்மை அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை வியூகம் வகுப்பதிலும் படை செலுததுவதிலும் நல்ல திறமையும் அனுபவமும் மிக்கவர் என்பது நாடறிந்த உண்மை. அனைவரும் கலந்து பேசி தெளிவு பிறந்து மதுரையில் உள்ள நவாப் மற்றும் பரங்கியர் மீது போர் அறிவிப்பு செய்தார் தேவர்.


நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சிவகங்கை தளவாய் தாண்டவராயனும் இராமநாதபுரம் தளபதி வெள்ளையன் சேர்வைக்காரர் தலைமையில் படை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. 


இதற்கிடையில் உடல் நலம் குன்றிய சசிவர்ணத்தேவர் நெடு நாள் போராட்டத்திற்குப் பிறகு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். இராச்சியத்தை திறம் மிக்க மகனிடமும் கூர்வாள் போன்ற சொல்லும், புத்தியும் உள்ள மருமகளிடமும் ஒப்படைத்துவிட்டோம் என்ற நிம்மதியோடு. 


போருக்கு குறித்த நாளும் வந்தது, கோட்டையில் ராஜேஸ்வரி கோயிலில் ஜெய பேரிகையை முன்னமே முழக்கி வெற்றி நமதே என முன்னறிவிப்பு செய்வது போல இருந்ததது. பட்டத்து ராணி வேலுநாச்சியார் தளபதிகள் இருவருக்கும் தாயாரின் பாதத்தில் வைத்து பூஜித்த நெடுவாளை கொடுத்தார். 


நம் நாட்டிலே நம் அதிகாரத்தைப் பறிக்க முன்வரும் அயலவர்க்கு இன்று நாம் செய்யும் போர் பாடமாக இருக்கவேண்டும், கப்பலேறி வந்த பரங்கிப் படைக்கே இவ்வளவு இருந்தால் தாய் மண்ணிலே பிறந்து இந்த மண்ணின் காற்றையே நேசித்து சுவாசித்து, அதன் விளை பொருட்களையே உண்டும் களித்தும் இத்தனை காலம் உயிர் வளர்த்தோம். அந்த தாய் மீது அயலான் கை வைப்பதை ஒரு நாளும் நாம் சகியோம் என்று பரங்கியருக்கும் நவாபுக்கும் உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இத்தனை நாள் ஓய்வெடுத்த வாட்கள் இன்று இரத்தம் சுவைக்கட்டும், எத்தனை நாட்கள் இந்த வாட்களும் தயாதிகளின் இரத்தத்தை மட்டும் குடிக்கும், புதிதாக பரங்கின் இரத்தத்தையும் தாகம் தீர குடித்து ருசிக்கட்டும்...


வெற்றி வேல்! வீர வேல்! ஜெய் ராஜேஷ்வரி ! 


(வீரர்கள்: வெற்றி வேல்! வீர வேல்! ஜெய் ராஜேஸ்வரி!)

வெற்றி நமதே, புறப்படுங்கள் களம் நோக்கி...


நாச்சியாரின் இந்த இடிமுழக்கப் பேச்சைக் கேட்ட யாருக்குத்தான் கோவம் கொப்பளிக்காது? மீசை துடிக்காது? 


பெருங்களிப்போடு மதுரை நோக்கி விரைந்தது சிவகங்கை படைகளும் இராமநாதபுர சமஸ்தானப் படைகளும்.


நவாப்பும் பரங்கிகளும் இதெல்லாம் என்ன பிரம்மாதம் நம் படைகளுக்கு இவர்கள் தூசுக்குச் சமானம் என கொக்கரித்துக் கொண்டிருந்தனர். வெள்ளையன் சொல்லலாம் அவன் நட்டுக்குப் புதியவன், ஆனால் நவாபு மறவர் கூட்டத்தைப் பற்றி தெரிந்தும் குறைத்து மதிப்பிட்டது அவன் செய்த பெருந்தவறு என ஒரே நாளில் புரியவைத்துவிட்டனர். 


மறவர் குல வீரர்களின் முன்னுக்கு துப்பாக்கிகளும் பீரங்கிகளுமே நடுநடுங்கிவிட்டன, பின்னே இருக்காதா? வியூகம் வகுத்தது தளவாய் தாண்டவராயன் ஆயிற்றே! 


வேல், குறுவாள், நெடுவாள், கேடையத்தோடு அவர்கள் என்ன செய்ய முடியும் என நினைத்த பரங்கியனுக்கு தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை செய்தேக் காட்டினர் வீரர்கள்.   

கோட்டையை முற்றுகையிட்டு இடிமரம் கொண்டு கதவை உடைத்து தளவாய் தாண்டவராயனும் வெள்ளையனும் கோப்பையும் நவாபு வாலாஜாவையும் சிறை பிடித்தனர். வெற்றிச்செய்தி சிவகங்கை சீமையை அடைந்தது. 


மங்கல வாத்தியங்கள் முழங்க அரச பரிவாரங்கள் புடைசூழ மன்னர் முத்துவடுகநாத தேவரும் விஜயகுமார நாயக்கரும் மதுரை வந்தனர். படைவீரர்களுக்கு அவர்களைக் கண்டதும் பெரும் குதூகலம்...


ஜெய் பவ! விஜயீ பவ! வெற்றி வேல்! வீர வேல்! என ஏகோபித்த முழக்கம் எழுப்பினர். 


மீண்டும் மதுரையை நாயக்கர் வசம் ஒப்படைத்தார் முத்து வடுகநாதர், விஜயகுமார நாயக்கரை மதுரையின் மன்னராக அறிவித்தார்... பரங்கி தளபதி கோப் மற்றும் நவாபை உங்களுக்கு உயிர் பிச்சை இடுகிறேன் பிழைத்து போங்கள் என விடுவித்துவிட்டார். கோப்புக்கும் நவாபுக்கும் கூடிய சபையில் பெரிய அவமானமாக போய்விட்டது. மனதில் வஞ்சம் வைத்து குனிந்த தலை நிமிராது தங்கள் எஞ்சிய படையை திருச்சி கோட்டையை நோக்கி ஓட்டிக்கொண்டு கிளம்பிவிட்டனர். 


மதுரை போருக்குப் பின்னே கம்பெனியாரும் நவாபும் சிவகங்கை மீது தீராப் பகையுடன் எப்படி கைப்பற்றுவது என மண்டையை உடைக்காத குறையாக சிந்தித்து சிந்தித்து சோர்ந்துவிட்டனர். 

இந்த நிகழ்வுகளுக்கு இடையேதான் தெற்கத்திய சீமையின் பிற்கால தூண்கள் இரண்டு பிறந்து வளரந்து வருகின்றன.




(குறிப்பு:- 1750ம் ஆண்டு சசிவர்ணத்தேவர் உடல்நலக் குறைவால் காலமானார், 1748ல் பெரிய மருதுவும் 1753ல் சின்ன மருதுவும் பிறந்தனர். 1753ல் தான் மதுரை மீண்டும் விஜயகுமார நாயக்கரிடம் ஒப்படைக்கப்பட்டது)


Rate this content
Log in

Similar tamil story from Drama