உன்னை என்றும் காதல் செய்வேனே 2
உன்னை என்றும் காதல் செய்வேனே 2


ஆரவாரம் அதிகம் இல்லாமல் அமைதியாக இருந்தது கேண்டீன். வேலைகளின் அழுத்தத்திலிருந்து சற்றே வெளியே வர சூடாக காபி குடித்துக் கொண்டிருந்தாள், பிரியா.
" பிரியா" பின்னால் இருந்து குரல் வர திரும்பிப்பார்த்தாள், பிரியா.
கவிதா அவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
" பிரியா உன்னை எங்கெல்லாம் தேடுறது"
" ஏன்? என்ன ஆச்சு?"
" உன்ன ரோமியோ
தேடுறாருப்பா"
" வாட்"
" அதான் நம்ம ப்ராஜெக்ட் மேனேஜர் தேடுறாரு."
"அவருக்கு என்னவாம்..?"
" ம்..உன்ன பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கான்." கவிதாவின் பேச்சு அவளை கோபப்படுத்த அவளை முறைத்தாள்.
" ஓகே. ஜில். ப்ராஜெக்ட் முடிச்சாச்சான்னு கேட்க தான் கூப்பிட்டார்."
" ஒரு காபியை கூட நிம்மதியாக குடிக்க விட மாட்டாரா?" என சலித்துக் கொண்டு மேனேஜரின் அறைக்கு சென்றாள்.
" மே ஐ கம் இன் ஆனந்த்."
" உள்ள வா பிரியா. எங்க போயிருந்தீங்க? நீங்க கேபின்ல காணோம்."
" கேண்டீன்ல இருந்தேன்"
"ஓ... சாரி. நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேனா."
" அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சும்மா காபி குடிச்சிட்டு இருந்தேன்."
" நான் வேணா காபி ஆர்டர் பண்ணவா? ரெண்டு பேரும் சேர்ந்து குடிக்கலாம்."
"இல்லை ஆனந்த். நான் குடிச்சு முடிச்சிட்டேன்."
" ஏன் என்கூட ஒரு கப் காபி சாப்பிடமாட்டீங்களா, பிரியா?" ஆனந்தை கேட்க பிரியா அவனை கேள்வியாக பார்க்க ஆனந்த் சுதாரித்துக் கொண்டான்.
3 வருடங்களாக பிரியா ஆனந்தின் கீழ்தான் வேலை பார்த்து வருகிறாள். பிரியாவை பார்த்த நொடியிலேயே அவளிடம் மனதை பறிகொடுத்து விட்டான்.
அவளிடம் காதலை கூறினால் மறுத்துவிடுவாள் என்ற பயத்தினால் தன் காதலை தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டான். காதலை பூட்டி வைத்து தானே தவிர தனக்கு ஏற்படும் மாற்றத்தையும் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களையும் அவளிடம் தன் காதலை சொல்ல துடிக்கும் உதடுகளையும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆனந்த் பிரியாவை காதலிப்பதை சில அலுவலக நண்பர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் அதை யாரும் அவர்கள் வெளியில் காட்டிக்கொள்வதில்லை. கவிதைவை தவிர.
கவிதா பலமுறை ப்ரியாவிடம் கூறியும் அவள் அப்படி இருக்காது என மறுத்துவிட்டாள். ஆனால் பிரியாவும் இதை உணர்ந்தே இருந்தாள். ஆனந்த்திற்கு தன் மேல் ஏதோ ஒரு உணர்வு இருக்கிறது என்று உணர்ந்த பிரியா அது காதலாக இருக்காது என நம்பினாள்.
இல்லை நம்புவது போல் நடித்தாள். அலுவலகத்தில் நடக்கும் எந்த ஒரு விஷயங்களையும் அவள் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனந்த் உட்பட. அதனால் ஆனந்தின் உணர்வுகள் புரிந்தும் புரியாதது போல் இருந்தாள்.
" பிரியா நான் கொடுத்த வொர்க் முடிஞ்சிடுச்சா?"
" அது இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சுரும்."
" பரவாயில்ல அவசரமில்ல நீங்க மெதுவாகவே பண்ணுங்க" என கூற பதில் எதுவும் தராமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள், பிரியா.
ஆனந்த் சிறிது தயக்கத்துடன் ஏதோ சொல்ல முயல 'எங்கு எதையாவது உளறி விடுவானோ என்கிற பயத்தில் வேறு ஏதாவது
முக்கியமான விஷயம் இருக்கிறதா' என்று கேட்டு அவன் பதட்டத்தில் இல்லை என்பது போல் தலையை ஆட்ட, எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது என அந்த இடத்தை விட்டு நீங்கினாள்.
ஆனந்திடமிருந்து தப்பி தன்னுடைய கேபினுக்கு நுழைந்ததும் கவிதா அவளை தொற்றிக் கொண்டாள்.
"என்ன சொன்னாரு ரோமியோ? ஐ மீன் ஆனந்த்."
" அவர் என்ன சொல்ல போறாரு "
"பின்ன எதுக்கு கூப்பிட்டாரு "
"project முடிஞ்சிடுச்சான்னு கேட்டாரு. நான் இன்னும் இல்லைன்னு சொன்னதுக்கப்புறம் அவசரமில்லை மெதுவா முடிங்கன்னு சொல்லிட்டாரு"
" அப்புறம்?"
" என்ன அப்புறம் அப்புறம். அவ்வளவுதான்."
" நிஜமாவே அவ்வளவு தான் நடந்ததா?"
" வேற என்ன நடக்கனும்னு எதிர்பார்க்கிற?"
" என்னென்னமோ நடக்கணும்னு தான் எதிர்பார்க்கிறேன்." கவி நெளிய பிரியா முறைத்த முறைப்பில் கிளம்பிவிட்டாள், கவிதா.
செல்வியை கூப்பிட போக தேவை இல்லாததால் அவளுடைய வேலைகளை பொறுமையாக செய்து விட்டு கிளம்பினாள்.